கட்சியிலிருந்து நீக்கப்பட்டாரா பாலித ரங்கே பண்டார?
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, அக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பதவியில் இருந்து பாலித ரங்கே பண்டாரவை நீக்குவது தொடர்பான கடிதத்தில் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (29) கையொப்பமிட்டுள்ளதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலித ரங்கே பண்டார பொதுச் செயலாளர் பதவியில் தனது கடமைகளை சரியாக செய்யவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கட்சித் தலைமை உரிய தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பதவிக்கு அண்மையில் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகிய தலதா அத்துகோரளவை நியமிக்குமாறு கட்சியின் பெரும்பான்மையான அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும், இது வரையில் தலதா அத்துகோரள ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையைப் பெறவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் பாலித ரங்கே பண்டாரவிடம் சகோதர மொழி ஊடகமொன்று வினவிய போது, ”அது தொடர்பில் இதுவரையில் தமக்கு எவ்வித அறிவித்தல்களும் வரவில்லை ” எனத் தெரிவித்தார்.
“எனக்கு ஒரு கடிதம் வந்தால், நான் உங்களுக்கு சொல்கிறேன்,” என பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.