இலங்கை

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ‘போர்க் குற்றவாளிகளை தண்டிக்காது’

போர்க்குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள எவருக்கும் தனது அரசாங்கத்தின் கீழ் தண்டனை வழங்கப்படமாட்டாது என உறுதியளிக்கும் அனுர குமார திஸாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை அப்படியே தொடர முன்வந்துள்ளார்.

“பொறுப்புக்கூறல் பிரச்சினையை எடுத்துக்கொண்டால், ​​இது பழிவாங்கும் வழியில் அல்ல, யாரையும் குற்றஞ்சாட்டுவது அல்ல, உண்மையை வெளிப்படுத்துவதுதான் தான்” என தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் (Associated Press) தெரிவித்தார்.

இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு கடத்தப்பட்ட பின்னர் காணாமல் போன பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் உறவினர்கள் கடந்த 15 வருடங்களாக சுயாதீனமான சர்வதேச விசாரணையை கோரி வருகின்றனர். இருந்த போதிலும், அரசாங்கம் நியமித்த ‘உண்மை ஆணைக்குழுவை’ முற்றுமுழுதாக நிராகரிக்கின்றனர்.

தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க, யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் சர்வதேச ஊடகங்களுக்கு வித்தியாசமான செய்தியை தெரிவித்துள்ளார்.

“பாதிக்கப்பட்டவர்கள் கூட யாரையும் தண்டிக்க விரும்பவில்லை. அவர்கள் என்ன நடந்தது என்பதை அறிய விரும்புகிறார்கள்.”

போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட இராணுவத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரிகளின் ஆதரவைப் பெற்ற தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர், ஹைட்டியில் ஐ.நா அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தது தெரியவந்ததை அடுத்து, நாடு கடத்தப்பட்ட படைக்கு தலைமை தாங்கிய ஜெனரல் ஒருவரை அவரது அரசாங்கத்தின் பாதுகாப்பு பிரதானியாக நியமிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்களைப் பேணுவதன் மூலம் மக்களின் சுமையை குறைக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளரிடம் இருந்து வெளிப்பட்டுள்ளது.

“தற்போதைய IMF திட்டத்தில் இருந்து வெளியே வர முடியாது, ஏனென்றால் நாடு பொருளாதார ரீதியாக சரிந்த பின்னர் நாங்கள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்தோம். வேறு வழி இருப்பதாக நாங்கள் நம்பினோம், ஆனால் இப்போது அனைத்து இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒப்பந்தங்களும் IMF இன் பையில் உள்ளன.”

சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போதுள்ள ஒப்பந்தத்தை பாதுகாத்து அரசாங்கத்தை நடத்தும் போது மக்களுக்கு ஏற்படும் துன்பங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றுவதற்கு அப்பால் செயற்பாட்டாளர்கள் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு தயாராக இல்லாத காரணத்தினால், மக்கள் எதிர்பார்த்த மாற்றம் ஏற்படவில்லை எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.