கதைகள்

”அப்பா வாசம்”… கதை – 3 … மீனாசுந்தர்

சாந்தமூர்த்தியால் எதையும் அனுமானிக்க இயலவில்லை. அவர் ஆறுதலாக அமர்ந்திருக்க எவ்வளவோ முயன்று பார்த்தும் முடியவில்லை. மனசு ஓரிடத்தில் நின்று அடங்க மறுத்துத் திமிறிற்று. இருக்கிற வேலைகளையெல்லாம் போட்டது போட்டவாறு ஒதுக்கி வைத்துவிட்டு அப்போதே ஊருக்குக் கிளம்பி விட்டார். பேருந்து நிலையம் வந்து, பேருந்திலேறி அமர்ந்திருக்கிறாரே ஒழிய, மனமெங்கும் கவலை மண்டலம் சூழ்ந்து நின்று அழுத்திற்று. நெஞ்சில் சலன அலைகள் தேங்கி தேங்கிப் பரவின. என்னவோ, ஏதோவென்று உள்ளுணர்வு றெக்கை வெட்டிய பறவையாய்ப் படபடத்தது. ஏதாவது செய்தியெனில் அம்மா கிளம்பி நேரில் வந்து விடுவதுதான் இதுவரை வழக்கம். அதற்கு மாறாக, அதுவும் எழுதப் படிக்கத் தெரியாத அம்மா யாரையோ எழுதச் சொல்லி அனுப்பிய முதல் கடிதமும் இது தான்.

கடிதம் எழுதுகிற அளவிற்கு அம்மாவிற்கு அப்படியென்ன தலை போகும் அவசரம் வந்தது என்பது தான் சாந்தமூர்த்திக்குள் அத்தனைப் பதற்றத்தையும், கலவரப் பீதியையும் உண்டு பண்ணியிருந்தது. கடிதத்தில் விவரங்களும் தெளிவாய் இல்லை. நலம் விசாரிப்புகள், இத்யாதிகளைக் கழித்து விட்டுப் பார்த்தால்- ‘முக்கியமான விசயம். அவசியம் உடனே கிளம்பி வரவும். சில முடிவுகள் குறித்து உன்னுடன் பேச வேண்டும். அலட்சியம் வேண்டாம். உன் வரவிற்காகக் காத்திருக்கும் அம்மா’ இது தான் கடிதத்தின் சாறு. இதுவே சற்று விளக்கமாக கடிதத்தில் விவரிக்கப்பட்டிருந்தது.

வ.ஊ.சி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வெளியேறி இராஜகோபாலசாமி கோவிலைக் கடந்து, ருக்மணிப்பாளையம் குளத்தைப் பார்த்து, பெரியாஸ்பத்திரி சாலையில் நகர்ந்து, கீழப்பாலத்தைப் பின்னுக்குத் தள்ளி வேகமெடுத்த போது சாந்தமூர்த்தி கண்களை மூடிக் கொண்டிருந்தார். சாந்தமூர்த்திக்கு ஐம்பது வயதிற்கு ஒன்றிரண்டு கூடுதலாகக் கூட இருக்கலாம். யோகா மற்றும் தியானத்தில் உடம்பைத் திடகாத்திரமாக வைத்திருந்தார். தலையில் வெளிர் கம்பிகள் நீளத் தொடங்கியிருந்தன. உள்வாங்கிய சிறிய விழிகள், மீசை வைப்பது அப்போதிருந்தே அவருக்குப் பிடிப்பதில்லை. வழவழவென அமுல்பேபி கணக்காய் முகம் பொலிந்தது. அம்மா, அப்பாவிற்குச் சாந்தமூர்த்தி ஒரே பிள்ளை என்பதால் சுதந்திரமாகவே வளர்ந்து ஆளாகியிருந்தார்.

சொல்லிக் கொள்ளும்படியாகப் பெரிதாக வசதி வாய்ப்பில்லை. ஊரின் கடைமடைப் பகுதியில் கொஞ்சம் நஞ்சை நிலமிருந்தது. பழங்காலத்து மண் சுவர் வைத்த ஒரு கீற்று வீடு. வீடு சிறியதென்பதால் வீட்டின் முன்னும் பின்னும் கொஞ்சம் இடம் கிடந்தது. அவ்வளவு தான்.
சாந்தமூர்த்தியின் அப்பா மாரிமுத்தாப்பிள்ளை படிப்பின் வாசனை அறியாதவர். அசலான பாமர மனிதர். சூதுவாது தெரியாதவர்.

உலக நடப்புகளை நொடியில் உள்வாங்கிக் கொள்பவர். எதனையும் ஆழமாக உற்று நோக்கும் அவரது பண்பு அவரை மற்றவர்களிடமிருந்து தனித்துக் காட்டிக் கொண்டிருந்தது. நடப்பவற்றைச் சோதனையென்று புலம்பாமல் அனுபவமாகப் புரிந்து கொள்ளக் கூடிய தெளிவு அவரது பலம். அறிந்தவர், தெரிந்தவர்களிடம் கூச்சமின்றி எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்து கொள்வதில் சளைக்காதவர். கடும் உழைப்பாளி என்பதை விடவும் அடுத்தவருக்குக் கிஞ்சிற்றும் கேடு நினைக்க எண்ணாது அரவணைக்கும் அற்புதக் குணத்திற்குச் சொந்தக்காரர். எந்தக் கடினச் சூழலிலும் சோர்ந்து போகாமல் நெஞ்சுரத்தோடு நிமிர்ந்து நின்று எதிர்கொள்பவர். நேர்மைக்கு இலக்கணம் வகுத்தால் இவரைப் புறந்தள்ளி விட்டு ஒற்றை வார்த்தையும் எழுத முடியாது என்றளவிற்கு கச்சிதமானவர்.

சாந்தமூர்த்திக்கு நெடுநாளாகவே மனதிற்குள் அந்த எண்ணம் சுழன்றடித்துக் கொண்டேயிருந்தது. படிக்காத பாமர அப்பாவிற்கு எப்படியந்தத் தீர்க்கதரிசனம் மனதிற்குள் தோன்றி வளர்ந்தது என்பது தான். மெத்தப் படித்தவர்கள் கூடப் பின்பற்ற முனையாத, பின்பற்ற தெரியாத, இப்பழக்கம் எப்படி அப்பாவிடம் வந்து தொற்றிக் கொண்டதென பலநாட்கள் யோசித்திருக்கிறார். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதனை மேலும்மேலும் வலுவாக்கிக் கொண்டே வந்து ஆச்சர்யப்படுத்தினார் அப்பா.

மரங்களும் கானுயிர்களும் அவருக்கு உயிர். செடி, கொடிகளெனில் அப்படியொரு கொள்ளைப் பிரியம். பசுமையை அவரளவிற்கு யாராவது நேசிருப்பார்களாவென உறுதியாகச் சொல்லத் தெரியவில்லை. எங்கும் பச்சை. எதிலும் பசுமையென்பதைப் போலப் பசுமையின் மீது அவருக்கு அப்படியோர் ஆழ்ந்த பற்று. பசுமை விழிகளுக்கு நல்லது என்பார். அதனைப் பார்த்துக் கொண்டேயிருந்தால் மனதில் நிம்மதி ததும்பும் என்றும், கண்கள் குளிர்ந்து போகுமென்றும் அடிக்கடிச் சொல்லுவார்.

மரங்கள் வாயில்லா ஞானிகள் என்பார். ஒவ்வொரு மரமும் ஒரு போதிமரம் என்பார். அவை கேடு நினைக்காத தெய்வப் பிறவிகள் என்பார். பச்சையாய் நிற்கும் கருணைத் தீபங்களென மரங்களைக் கொண்டாடுவார். கேட்பதற்குக் காதுகள் இருந்தால் இன்னும் என்னென்னவோ வகைவகையாகச் சொல்லிக் கொண்டேயிருப்பார். எங்காவது துளிர் விட்டிருக்கும் ஒரு செடியையோ, கன்றையோ கண்டு விட்டால் போதும். ஆனந்தக் கூத்தாடி விடுவார். அப்போது அவரது முகத்தில் படரும் பரவசத்திற்கு ஈடாக எதையும் சொல்ல முடியாது.

ஆயிரம் வேலைகள் இருப்பினும் அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு வீடு வந்து மண்வெட்டி எடுத்து ஓடுவார். வேர் அறாமல் அதைப் பெயர்த்தெடுத்து மக்கள் கூடுகிற ஏதாவதொரு பொது இடத்தில் நட்டு, பாதுகாப்பிற்காக ஒரு கூண்டையும் கட்டித் தண்ணீர் ஊற்றி விட்டுத் தான் ஓய்வார் மனிதர். ஒவ்வொரு நாளும் வேலைக்குச் செல்கிற போதே ஒரு பார்வை. அது நெடுநெடுவென வளர்ந்து வருமழகைப் அப்படிப் பார்த்து மகிழ்வார். இந்தப் பகுதியில் அவர் வைத்து வளர்ந்த மரங்கள் வகைவகையாய் நிறைய நிற்கின்றன. நீங்களோ, நானோ எப்போதாவது அவர் வைத்த மரத்தின் நிழலில் இளைப்பாறியிருக்கக் கூடும். நாம் மட்டுமா? ஊரில் பெரும்பான்மையோர் அவரது நிழலில் தான் இன்றும் இளைப்பாறி கொண்டுள்ளனர் என்பதே உண்மை.

வீட்டிலேயே நிறைய சுன்றுகள் வளர்க்க ஆசை தான். அந்தளவிற்கு அவர்களுக்குப் பெரிய கொல்லையோ, தோப்போ இல்லையென்பதால் இருக்குமிடத்தில் முடிந்தளவு வளர்த்திருக்கிறார். எங்கே வளர்க்கிறோம் என்பது ஒரு பொருட்டல்ல. எப்படியோ மண்ணெங்கும் செழிக்க வேண்டும். பசுமை மயமாய் ஜொலிக்க வேண்டும். அதுவே அப்பாவின் விருப்பம்.

சாந்தமூர்த்திக்கு இவையெல்லாம் சிறுவயதில் பெரிய வேடிக்கையாகத் தோன்றும். எரிச்சலாகவும் இருந்திருக்கிறது. அவரது நடவடிக்கைகளைப் பார்த்துச் சிரிப்பும் கிண்டலும் கேலியும் செய்திருக்கிறார். அவரது செயல்கள் வினோதமாக இருக்கும். செடிகளிடம் பேசுவார். இலைகளை ஆதரவாய்த் தடவிப் பார்ப்பார். பூக்களை நோகாமல் தொட்டு தொட்டுக் கொஞ்சுவார்… இப்படி நிறைய்ய..!

அவரிடமிருந்த இன்னொரு விசேசமான செயல் என்னவெனில், மறக்க முடியாத முக்கிய நிகழ்வுகள் ஏதும் நடந்தால் அதன் நினைவாக ஏதாவது ஒரு கன்றை நட்டு ஆளாக்கி விடுவார் அப்பா. அந்தத் தென்னைகள் இரண்டும் அவரது திருமணம் நினைவாக நட்டதாம். இது அம்மாவிற்காக, அது அவருக்காக என்பார். இந்தக் கொய்யா சாந்தமூர்த்தி பிறந்த நினைவாகவாம், அந்த மாதுளை பள்ளியில் சேர்த்த ஞாபகமாக நட்டதாம் என்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கதை சொல்லும் போது விழிகள் ஆச்சர்யத்தில் தானாய் விரிந்து கொள்ளும்.

இங்குள்ள ஒவ்வொரு மரத்திற்குள்ளும் ஒரு கால நிகழ்வு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. அப்பாவிற்கு வயலில் ஒருமுறை வேலை செய்யும் போது நாகமொன்று தீண்டி விட்டதாம். உடம்பெங்கும் விஷமேறி பிழைப்பாரோ, மாட்டாரோ என்று மிகவும் ஆபத்தான நிலையாகி விட்டதாம். எப்படியோ அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று அதிர்ஷ்டவசமாக பிழைத்துக் கொண்டாராம். கிட்டத்தட்ட மறுபிறவி எடுத்து மீண்ட கதை தான்.

சிகிச்சையிலிருந்து வீட்டிற்கு வந்த மறுநாளே வீட்டிற்கு எதிரே ஒரு பள்ளம் தோண்டியிருக்கிறார். எங்கிருந்தோ நன்கு வளர்ந்து, செழித்த வேப்பங்கன்று ஒன்றைப் பெயர்த்து வந்து வைத்து, முள்ளெடுத்து வந்து கூண்டு கட்டியிருக்கிறார். குடத்தில் நீரள்ளி வந்து ஊற்றி முடித்த பிறகு தான் உள்ளே வந்திருக்கிறார். பாம்பு கடித்து மீண்டதன் நினைவாக வேம்பு படமெடுத்தாடுவதைப் போல வீட்டினெதிரே செழிக்கத் தொடங்கியது.

தினமும் அதற்கு மறவாத கவனிப்பு. தவறாத பராமரிப்பு. சாந்தமூர்த்தியைப் போல அவருக்கு இன்னொரு பிள்ளை ஆயிற்று வேப்பங்கன்று. அது ஒவ்வொரு துளிர் விடும் போதும் அவரின் முகத்தில் அப்படியொரு மினுமினுப்பு அடர்ந்து நிற்கும். பரவசத்தில் துள்ளிக் குதிக்காத குறை தான். எதிர்படுவோரையெல்லாம் அழைத்து அழைத்துக் காட்டுவார். புதிதாய்ப் பார்ப்பவர்களுக்கு எல்லாமும் வினோதமாகக் காட்சியளிக்கும்.

எப்படியோ மாரிமுத்தாப்பிள்ளையின் செய்கைகள் நாளடைவில் சாந்தமூர்த்திக்கும், அம்மாவிற்கும் கூடத் தொற்றிக்கொண்டு விட்டது. காலையில் எழுந்ததும் இவர்களும் ஓடிப் பார்க்கத் தொடங்கினர். சில ஆண்டுகளில் கன்று நெடுநெடுவென வளர்ந்து மரமாகக் கிளை பரப்பி செழித்து நின்றது. மரத்தைப் பார்க்கவும், வீட்டைப் பார்க்கவும் முன்னை விட அழகாகவும், ரம்மியமாகவும் இருந்தது. கோடையில் வாசலில் வேப்பம் பூக்களின் வாசம் நாசியைத் துளைக்கும். தரையெங்கும் காற்றிலாடும் மர நிழலின் நர்த்தனங்கள். நாளாக நாளாக வேப்பமரம் பெயர் மாறி அப்பா மரம் ஆயிற்று.

பேருந்து சாலைப் பள்ளத்தில் விழுந்து குலுங்கியது. கண் விழித்துப் பார்த்தார் சாந்தமூர்த்தி, எல்லாமும் நேற்று நடந்தது மாதிரி இருக்கிறது. அப்படிப்பட்ட அப்பாவின் உயிரை தூக்கத்திலேயே எடுத்துச் சென்று விட எமனுக்கு எப்படித்தான் மனது வந்ததோவென்று மனம் விம்மிற்று. அப்பாவின் நினைவு வந்ததுமே சாந்தமூர்த்திக்கு விழிகள் துளிர்த்துக் கொண்டன. கையில் மடித்து வைத்திருந்த டவலால் முகத்தையும் கண்களையும் ஒருசேரத் துடைத்துக் கொண்டார்.

அப்பாவின் இறப்பிற்குப் பிறகு அம்மா தனியேதான் ஊரில் வாழ்ந்து வருகிறார். வருமானம் வேண்டியும், பிள்ளைகளின் படிப்பிற்காகவும் நகரத்தை நோக்கி நகரத் தொடங்கிய போது கூட அம்மாவைத் தனியே விட்டுப் போக மனமில்லை சாந்தமூர்த்திக்கு. எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் அம்மா அறவே வர முடியாதென அடம்பிடித்துச் சாதித்து விட்டார்.

“நானு அங்கன வந்து என்னய்யா பண்ணப் போறன்? கய்யி காலு மொடங்கி நவர முடியாமலா கெடக்கேன் நான்? ஒடம்பு தான் நல்லாருக்கே… நானும் அங்க வந்திட்டன்னா இருக்கிற நெலத்த யாரு பாத்துக்கிடுறது? சமத்திருக்கிற வரக்கிம் நானு வேல வெட்டி செஞ்சிக்கிட்டு இங்கனகிட்டயெ கெடந்திடுறன்ம்ப்பா… எனக்கு டவுனெல்லாம் ஒத்து வராதுய்யா?’
வேறு வழியின்றி அம்மாவை ஊரிலேயே விட்டுவிட்டு மனைவி மக்களோடு சாந்தமூர்த்தி நகரம் செல்ல வேண்டியதாயிற்று. மாதந்தோறும் மறவாமல் அம்மாவிற்குக் கொஞ்சம் பண உதவி. ஏதும் செய்தியென்றால் அம்மா பேருந்து ஏறி நகரத்திலிருக்கும் சாந்தமூர்த்தி வீட்டிற்கு வந்துவிட்டுப் போவார். இல்லையெனில் சாந்தமூர்த்தி கிராமத்திற்குக் கிளம்பி வந்து விடுவார்.
இப்படித் தான் ஒடிக் கொண்டிருக்கிறது வாழ்க்கை. ஆனால் இப்போது? அவசரமாய் கடிதம் எழுதுகிற அளவிற்கு என்ன…? என்ன நடந்தது? மனத்தவிப்பு இன்னுமவருக்கு ஆறி வரவில்லை. ஊர் வந்ததும் பேருந்திலிருந்து இறங்கிக் கொண்டார் சாந்தமூர்த்தி. நிறுத்தத்தில் இருக்கும் மரத்தடியிலேயே அம்மா காத்துக் கொண்டிருந்தார்.

“மூர்த்தி நல்லாயிருக்கியாப்பா?”
சாந்தமூர்த்தியை ஊரில் மூர்த்தி என்று தான் சுருக்கி அழைப்பார்கள். அம்மாவும் அப்படியே அழைப்பதே வழக்கம். அம்மாவைக் கண்டதும் சாந்தமூர்த்திக்கு விழிகள் துளிர்த்துக் கொண்டன.

“எ.. என்னம்மா.. ஒடம்புக்கு ஏதும் முடியலியா?”
முழுதாய் பேச முடியாமல் தவித்தார். வார்த்தைகள் வெளிவர சிரமப்பட்டு மீன் முள்ளாய்த் தொண்டையில் சிக்கித் திணறின.

“ஒன்னுமில்லப்பா… நான் நல்லா தான் இருக்கன்… மருமக, புள்ள குட்டிவொல்லாம் நல்லாருக்குதுங்களா?”

“இருக்காங்கம்மா… என்னம்மா சேதி? வீட்டுக்குக் கூட கௌம்பி வராம கடிதம் எழுதற அளவுக்கு என்னம்மா நடந்துச்சி?”

“பதட்டப் படற மாதிரி ஒன்னுமில்லய்யா… நடத்துக்கிட்டே சொல்லுறன். வா, மெல்ல போவம்!”
நடந்தார்கள்.

“ஊட்டுக்கு வந்தா திடீருன்னு ஒனக்குத் தெகப்பா இருக்கும்ய்யா. இப்பவே சொல்லிப்புடுறென்”
தொடங்கினாள் அம்மா. பிறகு சாந்தமூர்த்தியின் முகக் குறிப்பறிய வார்த்தைக்கு அணைகட்டி அவரை அவருக்குத் தெரியாமல் ஏறிட்டாள். ஒரு கணத்தில் அவரது முகத்தில் சல்லிவேர்களாய் ஆயிரம் குழப்ப ரேகைககள் மின்னி மறைந்தன. சடக்கென முகத்தைத் திருப்பி அன்று தான் அம்மாவைப் புதிதாய்ப் பார்ப்பதைப் போல அப்படியொரு பார்வை பார்த்தார் சாந்தமூர்த்தி.

“அப்பா மரத்த வித்துட்டேம்பா. நேத்திக்கித் தான் வெட்டி எடுத்திட்டுப் போனாங்க”
மண்பானையைப் பாறையில் தூக்கி அடித்த மாதிரி நொடிக்குள் சிதறி அதிர்ந்து அப்படியே சிலையைப் போல் நின்றார் சாந்தமூர்த்தி.

“எ… என்னம்மா சொல்றீங்க…? என்ன காரியம் பண்ணிட்டீங்க? அவசரப்பட்டு என்னய கூட ஒரு வார்த்த கேக்காம… ஏன்ம்மா இப்படியொரு முடிவு எடுத்தீங்க? அது…. அது.. அப்பாவாட உசிராச்சே… அதுல தானம்மா அப்பா வாழ்ந்துக்கிட்டிருந்தாங்க.. அந்த மரத்து வடிவத்துல தானேம்மா அப்பாவைப் பாத்துக்கிட்டிருந்தோம்….? அத விக்கிறத்துக்கு ஒங்களுக்கு எப்படிம்மா மனசு வந்திச்சு?”

சாந்தமூர்த்தியால் தொடர்ந்து பேச முடியவில்லை. மிக அயர்ச்சியாக இருந்தது. அம்மாவும் துக்கித்துச் சிறிது நேரம் தலை கவிழ்ந்து நின்றார். சாந்தமூர்த்தியின் வார்த்தைகளைக் கேட்க கேட்க அம்மாவின் கண்களை யாரோ பிழிவதைப் போல நீரரும்பி வழிந்தன.

“முடியலப்பா… என்னாலியும் முடியல தான். ஆனா வேற வழி தெரியலய்யா எனக்கு… ஒங்க அப்பா ஒரு புல்லு.. பூண்டுக்குக் கூடக் கேடு நெனச்சது இல்ல… அவரு வெச்ச மரம் மட்டும் எதுக்கு கெடுதலா நிக்கணும்? வீட்டுக்கு எதிர்ல அந்த மரத்த வெச்சது தான்ம்ப்பா தப்பா போச்சி..”
“என்னம்மா சொல்றீங்க?” குழப்பமாய்க் கேட்டார்.

“மூர்த்தி.. மழை பேஞ்சா தெருவே சகதியா ஆயிடுது. குறுகலான மண்சாலைய அகலப்படுத்தி தார்சாலையா போடப் போறாங்களாம். நேத்திக்கு மொதநாளு தான் அளந்திட்டுப் போனாங்க. இந்த வேப்பமரம் எடஞ்சலா இருக்காம்… வெட்டணும்ன்னாங்க.”
“…………………………………………………….”
“பல பேருக்குக் கெடக்க வேண்டிய சவுகரியம் நம்மால எதுக்குப்பா கெட்டு நிக்கணும்?”
சாந்தமூர்த்தியின் விழிகள் ஆடாது அசையாது அம்மாவின் மீது நிலைகுத்தி நின்றன. அம்மாவே தொடர்ந்தார்.

“அதுக்கும் மேல இன்னொரு விசியமும் இருக்கு. நம்ம தெருவு சனங்க குளிக்கக் கூட ஒரு கொளமில்லாம அவதிப்படுதுங்க.. எல்லாருமா சேர்ந்து ஒரு கொளம் வெட்டிடுவோம்ன்னு ஊரு கூட்டத்துல ஒருமித்து, வீட்டுக்கு ஐநாறு பங்கு கொடுக்கணுன்னும் முடிவெடுத்திருக்காங்க. எங்கிட்டே கைய்யில இப்ப பணமில்லே… நீயே ரொம்ப கஸ்டத்துல இருக்கறப்பா… ஒன்னய தொந்தரவு செய்யவும் மனசு வரல.. கொளம் இந்தத் தெருவுக்கு காலாங்காலத்துக்கும் நெலயா நின்னு பலனளிக்கப் போவுது. அதான் அப்பா மரத்த வித்துட்டு பணம் கொடுக்க உன்னய கேக்காமலே முடிவு பண்ணிட்டேன்… ரெண்டுக்குமே அப்பா மரம் பயன்பட்டிச்சேன்னு எனக்கு ஒரு வகயில நிம்மதிதாம்ப்பா!”

அம்மா சொல்லி முடிக்கவும், வீடு வந்து சேரவும் சரியாய் இருந்தது. அப்பா மரம் அடியோடு வெட்டப்பட்டு, மண்தரை நெடும்பள்ளமாய்க் காயமுற்றுக் கிடந்தது. சாந்தமூர்த்திக்கு அப்பா கொலையுண்டு கிடப்பது மாதிரி தோன்றிற்று. சிறிது நேரம் எதுவும் பேசாமல் மரமிருந்த இடத்திலேயே நின்றிருந்தார். அப்பா இல்லையெனினும் இல்லையென்று நினைக்க முடியாதளவிற்கு அந்தக் குறையை இந்த மரம் தான் இதுவரை போக்கிற்று, கிளைகள் அசைவது அப்பா தலையாட்டுவது போலிருக்கும். பூத்து நிற்பதைப் பார்க்கும் போது அப்பா கலகலவெனச் சிரிப்பது போலிருக்கும். பழுத்த இலைகள் உதிர்வது அவர் ஆசிர்வதிப்பது போலிருக்கும். மெலிதாய் வீசும் காற்றோடு சேர்ந்து அனுபவிக்க, வேப்ப மரத்து நிழல் அப்பாவின் மடியில் அமர்ந்திருப்பது போல எத்தனை அற்புதமாய் இருந்தது. இனி இதற்கெல்லாம் வழியில்லையா?

சாந்தமூர்த்தி மௌனித்து நிற்பதைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. பிள்ளையின் முகம் வாடிப் போவதைக் கண்ட அம்மா சுதாகரித்துக் கொண்டு பேசினார்.

“ஒன்னும் கலங்காத மூர்த்தி.. ஒம்மனசும் எம்மனசும் வேறவேற இல்லப்பா. அப்பாவ வேற எங்கேயும் போக விடல நான். நிய்யி உள்ள வந்து பாரு !

சாந்தமூர்த்தியின் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றார் அம்மா. எதுவும் புரியாமல் அம்மாவின் இழுப்பிற்கு இயந்திரம் போலத் தொடர்ந்தார் சாந்தமூர்த்தி. அம்மா நேராக கொல்லைப் புறத்திற்கு அழைத்துச் சென்றாள்.

‘ஒரு அப்பா போனா என்னய்யா? ஆயிரம் அப்பாவ இதோ பாரு”

சொல்லும் போதே கண்களில் பெருமிதம் நிரம்பி வழிந்தது அம்மாவிற்கு. நொடிக்குள் இன்பமாய் அதிர்ந்து முகத்தில் தீற்றலாய் புன்னகை அரும்ப கண்களில் நீிர் கோர்த்துக் கொண்டது சாந்தமூர்த்திக்கு.

“வர்ற வாரம் நம்ம ஊர்ல மரம் நடுவிழா நடக்கப் போகுதுப்பா. இதுக எல்லாத்தியும் கேட்டிருக்காங்க… ஊரு பூராவும் அன்னிக்கே நட்டுடப் போறாங்களாம்… எல்லாம் அப்பா மரத்து விதைகள்ல மொளச்ச கன்னுங்க தானேப்பா!”

உடைந்த மண்பானை, கரிச்சட்டி, கொட்டாங்கச்சி, கிழிந்த சாக்குகள், பாட்டில்கள் போன்றவைகளில் செழித்து வளர்ந்திருந்தன வேப்பங்கன்றுகள். அம்மாவைப் பெருமிதமாய்ப் பார்த்த சாந்தமூர்த்தியைக் கண்டு கன்றுகள் காற்றில் மெலிதாய் ஆடின. அப்பா பல்லுயிராய்ப் பெருகி சிரித்துத் தலையாட்டுவது போலிருந்தது. ஏதோ உள்ளுணர்வில் ஆசையாய் அவற்றின் இலைகளைத் தொட்ட போது அப்பாவைத் தொட்டது போல உடம்பு சிலிர்த்தது சாந்தமூர்த்திக்கு.
மாரிமுத்தாப்பிள்ளைக்கு மரணமேது?

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.