ரஷ்ய இராணுவ வீரர்கள் 600 பேர் கைது, பிரதேசங்களும் மீட்பு: உக்ரெய்ன் அதிரடி
ரஷ்யா – உக்ரெய்னுக்கு இடையிலான போர் மேலும் தீவிரமாகி வருகின்றது. அண்மைக் காலமாக உக்ரெய்ன் ரஷ்யா மீது பெரிய அளவிலான தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறிருக்க ரஷ்யாவின் கூர்க்ஸ் பிராந்தியத்தில் 100 குடியேற்றப் பகுதிகளை கைப்பற்றியுள்ளதோடு 600 ரஷ்ய இராணுவ வீரர்களை கைது செய்துள்ளதாகவும் உக்ரெய்ன் தெரிவித்துள்ளது.
கடந்த ஓகஸ்ட் 6ஆம் திகதியன்று முதல் முறையாக உக்ரெய்ன் படைகள் ரஷ்யாவுக்குள் நுழைந்து, கூர்க்ஸ் பிராந்தியத்துக்குள் சரமாரியாகத் தாக்குதல் நடத்தின.
இதன் காரணமாக அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டதோடு, ரஷ்ய இராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இத் தாக்குதல் குறித்து விளக்கமளித்த உக்ரெய்ன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, “எல்லையில் ரஷ்ய இராணுவத்தின் தாக்குதலை நிறுத்துவதற்காகத்தான் இந்த முயற்சி. அதை தவிர வேறு எந்த காரணமும் கிடையாது” எனத் தெரிவித்துள்ளார்.
உக்ரெய்ன் படையின் தாக்குதல்களை எதிர்ப்பதற்காக 30,000 ரஷ்ய இராணுவ வீரர்கள் கூர்க்ஸ் பிராந்தியத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில்தான் உக்ரெய்னின் தரைப்படை தளபதி சிர்ஸ்கி, கூர்க்ஸ் பிராந்தியத்தில் இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்களில் 100 குடியிருப்பு பகுதிகளை கைப்பற்றியதோடு, 600 ரஷ்ய படைவீரர்களை கைது செய்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை உக்ரெய்ன் தலைநகர் கீவ் மற்றும் மேலும் சில பகுதிகளில் நூற்றுக்கணக்கான மிசைல்கள் மற்றும் ட்ரோன்களை ஏவி தாக்குதல் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.