உறுதியான நிலைப்பாடில்லாத தலைமையால் தமிழ் மக்களை வழிநடத்த முடியுமா?; ஈ.பி.டி.பி கேள்வி
உறுதியான நிலைப்பாடும் ஒருமித்த கருத்தும் இல்லாத தலைமையால் தமிழ் மக்களுக்கு சரியான அரசியல் வழிநடத்தலை காண்பிக்க முடியுமா என ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் தமிழ் பொது வேட்பாளர் குறித்து கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் சந்தர்ப்பவாதிகளாக கட்டமைப்பை உருவாக்குவதாக கூறியவர்களில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவை வெளியிட்டுள்ளதாக கூறிய அவர் இது அரசியல் இலக்கற்ற சந்தர்ப்பவாத செயற்பாடு என ஏற்கனவே நாம் தெளிவுபடுத்தியிருந்தோம் என்றும் அது தற்போது நடைமுறையில் அரங்கேறிவருகின்றது என்றும் கூறினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
”பொதுக்கட்டமைப்பு என கூறிக்கொண்டவர்களில் ரெலோ அமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவை வெளியிட்டுள்ளார். கட்டமைப்பு என சொல்லிக்கொள்வதில் தமிழ் மக்களுக்கான எவ்வித அரசியல் வழிகாட்டல்களையும் காண்பிக்காமல் ஜனாதிபதிக்கு ஆதரவை தெரிவிப்பதும் அவரை சந்திப்பது ஒருபுறத்திலும் மறுபுறத்தில் தமிழரின் அடையாளம் என்றும் பேசிக்கொள்வதும் தேர்தல் பித்தலாட்டமாகவே காணமுடிகின்றது.
உறுதியான நிலைப்பாடும் ஒருமித்த கருத்தும் இல்லாத தலைமையால் தமிழ் மக்களுக்கு சரியான அரசியல் வழிநடத்தலை காண்பிக்க முடியுமா? என சிந்தித்தால் அது தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டுக்கு சங்கு ஊதுவதாகவே முடியும்.
இதேநேரம் எமது கட்சி ஆதரிக்கும் ரணில் விக்ரமசிங்க மாகாணசபைக்குரிய அதிகாரங்கள் வழங்கப்படுவதுடன் குறிப்பாக காணி அதிகாரம் வழங்கப்படும்.அதுமட்டுமல்லாது நாடு நெருக்கடியான காலத்தில் இருந்தபோதும் அதை பொறுப்பேற்று மீட்சிபெற செய்துவருகின்றார்.
இவற்றுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு இந்நாட்டில் அரசியல் உரிமைசார் பிரச்சினை இருக்கின்றது என்பதை ஏற்றுக்கொண்டு செயற்படுகின்றார். ஆனால் சஜித் பிரேமதாச வடக்கு கிழக்கில் 1000 விகாரைகளை கட்டவேண்டும் என்கிறார். அதனூடாக இந்த நாடு ஒரு பௌத்த நாடு என்பதை பிரகடனப்படுத்துகின்றார்” என ஆதங்கம் வெளியிட்டார்.