விமானம் மூலம் உளவு; சீனா மீது ஜப்பான் புகார்
சீனாவின் உளவு விமானம் ஜப்பானின் ஆகாய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக டோக்கியோ குற்றஞ்சாட்டியுள்ளது.
Y-9 என்று அழைக்கப்படும் சீனாவின் விமானம் சுமார் 2 நிமிடங்கள் ஜப்பான் எல்லைக்குள் இருந்ததாக டோக்கியோ கூறியது.
நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இரவு 11.29 மணிக்கு டாஞ்சோ தீவுகளில் சீனாவின் விமானம் நுழைந்ததாகவும் அதன் பின்னர் ஜப்பான் தனது போர் விமானங்களை அங்கு அனுப்பியதாகத் தெரிவித்தது.
இரண்டு தரப்பிலும் எந்த ஆயுதங்களும் பாய்ச்சப்படவில்லை என்று ஜப்பானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்தச் சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று ஜப்பான் கூறியுள்ளது. மேலும் அது டோக்கியோவில் உள்ள சீன தூதரகத்துக்கு அழைப்பாணை விடுத்துள்ளது.
இச்சம்பவம் அவ்வட்டாரத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஏற்கெனவே சீனா அமெரிக்காவுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் எதிராக தனது பலத்தைக் காட்ட போட்டியிட்டு வரும் நிலையில் இது அவ்வட்டாரத்தில் புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.