நல்லூரான் மஞ்சம் நாளுமே இன்பம்…கவிதை…ஜெயராமசர்மா
மஞ்சத்தில் ஏறி மால்மருகன் வருகிறான்
வாருங்கள் முருகன் வடிவழகை காண
சஞ்சல மகற்றி சாந்தியை அளித்திடுவான்
சகலரும் வாருங்கள் சரவணனைத் தரிசிப்போம்
நெஞ்சமதில் இருக்கும் அத்தனையும் சொல்லுங்கள்
நிம்மதியை நீள்சுகத்தை நல்லூரான் தந்திடுவான்
வந்தவினை அகலும் வருவினைகள் ஓடிவிடும்
செந்திருவாம் கந்தனைத் தரிசிப்போம் வாருங்கள்
பேராசை என்னும் பேய் பிடிக்காதிருக்க
பிறர் வருந்தும் காரியங்கள் ஆற்றாதிருக்க
காவலனாய் கந்தா நீயிருக்க வேண்டும்
கைகூப்பிக் கேட்கின்றோம் காத்திடுவாய் கந்தா
அரக்க மனமுடையாரைத் திருத்திவிடு கந்தா
அறவழியில் செல்ல ஆக்கிவிடு கந்தா
இரக்கமுடை மனத்தை இருத்திவிடு கந்தா
இவ்வுலகில் என்றும் துணைநீயே கந்தா
செருக்குடைய அசுரரை திருந்திடவே வைத்தாய்
சித்தமதை தெளிவாக ஆக்கிவிடு கந்தா
உருக்கமுடன் உனைவேண்டி நிற்கின்ற அடியார்
உளமகிழச் செய்திடுவாய் உமைபாலா கந்தா
நல்லூரான் மஞ்சம் நாளுமே இன்பம்
எல்லையில்லா கருணை கந்தனது மஞ்சம்
அழகுடனே கந்தன் அமர்ந்துவரும் காட்சி
ஆனந்தம் ஆனந்தம் அளவில்லா ஆனந்தம்
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா