முச்சந்தி

ஏவுகணை பாவிக்க பைடன் அனுமதி!… போர் உதவியை நிறுத்தும் டிரம்ப் !!….  ஐங்கரன் விக்கினேஸ்வரா

எதிர் வரும் 2025 ஜனவரியில் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் ஜோ பைடன், உக்ரேனுக்கான உதவிகளை விரைவுபடுத்த முயன்று வருகிறார்.

பிரேஸிலில் ஜி20 மாநாட்டில் ஜோ பைடன் கலந்துகொண்டு உரையாற்றும் போது, உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை காப்பாற்ற முழுமையான ஆதரவை வழங்கவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

ரஷ்யாவிற்கு ஆதரவாக வடகொரிய படைகள் களமிறக்கப்பட்ட பின்னர் இந்த தீர்மானத்தை அமெரிக்க மேற்கொண்டுள்ளதாகவும், உக்ரைனுக்காக பைடனின் இறுதி முயற்சி இதுவெனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு எதிர்மறையாக அமெரிக்காவின் அடுத்த அதிபராக பொறுப்பேற்க இருக்கும் டொனால்ட் டிரம்ப், உக்ரேனுக்கான ஆதரவை குறைப்பார் அல்லது நிறுத்துவார் என தெரிவிக்கபடுகிறது. ரஷ்யாவுக்கு எதிரான போரில் யுக்ரேனுக்கு ஆயுதங்களை வழங்குவதில் அமெரிக்க அரசே முன்னணியில் உள்ளது.

மீண்டும் அமெரிக்காவின் ஜனாதிபதியாகும் டொனால்ட் ட்ரம்ப் எதிர் காலத்தில் உக்ரைனுக்கு ஆதரவு வழங்கப்படாது என கூறியமை மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பலத்த கண்டனத்துக்கும் உள்ளாகியது.

ஏவுகணை பாவிக்க பைடன் அனுமதி:

உக்ரேன் அரசு ஏடிஏசிஎம்எஸ் ஏவுகணையைப் பயன்படுத்தலாம் என்ற பைடனின் அனுமதி, வட கொரிய வீரர்களை உக்ரேனில் சண்டையிட அனுமதிக்கும் ரஷ்யாவின் முடிவிற்கு பதிலடியாக வந்தது என்று சில அமெரிக்க அதிகாரிகள் நியூயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் ஊடகங்களிடம் கூறியுள்ளனர்.

 ஏடிஏசிஎம்எஸ் ஏவுகணைகள் 300கிமீ வரை செல்லக் கூடியவை. ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்த அமெரிக்கா வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரேன் பயன்படுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அனுமதி அளித்துள்ளார்.

ஜோ பைடனின் முடிவு போரின் போக்கை மாற்றும் ஒன்று அல்ல. ஆயினும் உக்ரேனிய படைகளை மேலும் வலிமை கொண்டதாக மாற்றும் என கருதப்படுகிறது.

ரஷ்யா – உக்ரேன் போரில் அமெரிக்கா கடைபிடித்து வந்த கொள்கையின் முக்கிய மாற்றமாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. உக்ரேனின் அதிபர் விலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஏடிஏசிஎம்எஸ் (ATACMS) எனப்படும் ஏவுகணைகள் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என்று பல மாதங்களாக வலியுறுத்தி வருகிறார். இந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால் உக்ரேன், தனது நாட்டின் எல்லைக்கு அப்பாலும் அதனை பயன்படுத்தி தாக்குதல் நடத்த முடியும்.

உக்ரேன் போரில் டிரம்ப் நிலைப்பாடு:

பிற நாடுகளுக்கான ராணுவ உதவிகளால் அமெரிக்காவின் வளங்கள் வீணாகின்றன என்பது ட்ரம்ப் அரசின் கருத்தாகும். தன்னால் போரை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று கூறிய அவர், அதை எவ்வாறு செய்யப் போகிறார் என்று வெளிப்படையாக இதுவரை கூறவில்லை.

2022 பெப்ரவரி போரின் தொடக்கத்திற்கும் ஜூன் 2024 இறுதிக்கும் இடைப்பட்ட காலத்தில்,p உக்ரேனுக்கு 55.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை அமெரிக்கா வழங்கியுள்ளது.

இத்தகைய உதவிகளையும், உக்ரேனுக்கான ஆதரவை பாரியளவில் குறைப்பார் அல்லது நிறுத்துவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

நேட்டோ நேரடி பங்கேற்பு:

இந்நிலையில், உக்ரைன் நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்தினால் மோதல் மேலும் தீவிரமடையும் எனவும் தகுந்த பதிலடி வழங்கப்டும் எனவும் ரஷ்யா எச்சரித்துள்ளது.

நீண்ட தூர ஏவுகணை கட்டுப்பாடுகளை நீக்குவது, உக்ரேன் போரில் நேட்டோ ராணுவ கூட்டணியின் நேரடி பங்கேற்பை பிரதிநிதித்துவப்படுத்தும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் மேற்கத்திய நாடுகளுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்திருந்தார்.

கடந்த ஆகஸ்டில் உக்ரேன் திடீரென தாக்குதலைத் தொடங்கி தனது கட்டுப்பாட்டில் இருக்கும் ரஷ்ய நிலப்பரப்பின் சிறு பகுதியை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சிகளுக்கு உதவுவோம் என பைடனின் நிர்வாகம் உறுதியளிக்கிறது.

வருங்கால பேச்சுவார்த்தைகளில் இந்த நிலப்பரப்பை ஒரு பேரம் பேசும் கருவியாக பயன்படுத்தலாம் எனவும் உக்ரேன் அரசு நினைக்கிறது.

ஏடிஏசிஎம்எஸ் ஏவுகணை பற்றிய அமெரிக்காவின் முடிவு என்பது, ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்திற்குள் உக்ரேனிய படைகளின் பாதுகாப்புடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

போரில் வடகொரிய துருப்புகள் :

ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் இருந்து உக்ரேனியப் படைகளை வெளியேற்றுவதற்காக திட்டமிடப்பட்ட ரஷ்ய – வடகொரிய துருப்புகளின் கூட்டுத் தாக்குதல் சில நாட்களில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குர்ஸ்க் பகுதியில் 11,000 வட கொரிய வீரர்கள் இருப்பதாக அறியப்படுகிறது.
அதனை முறியடிக்க ரஷ்யாவிற்குள் நீண்ட தூர ‘ஸ்டார்ம் ஷேடோ’ (Storm shadow) ஏவுகணைகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்த உக்ரேனுக்கு அனுமதி அளிக்கக்கூடும்.

உக்ரேனின் கிழக்குப் பிராந்தியங்களில் உள்ள ரஷ்ய துருப்புகளைத் தாக்குவதற்கு முதன்முறையாக அமெரிக்கா வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரேன் பயன்படுத்தியதாக ஜெலென்ஸ்கி உறுதிப்படுத்தினார்.

உக்ரேனிய படைகளுக்கான முக்கிய விநியோக மையமாக இருக்கும் போக்ரோவ்ஸ்க் நகரை நோக்கி மெதுவாக முன்னேறி வரும் ரஷ்ய துருப்புகளை பின்னுக்குத் தள்ள, உக்ரேன் பல மாதங்களாக போராடி வருகிறது.

ஏடிஏசிஎம்எஸ் ஏவுகணைகள் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என்று பல மாதங்களாக வலியுறுத்தி வருகிறார். உக்ரேன் பல மாதங்களாக அதன் நட்பு நாடுகள் தனக்கு போதுமான ஆதரவை வழங்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.