கவிதைகள்
அதிக கரிசனை….கவிதை… நிலாத்தோழி
எனது உற்றார் உறவினர்களும்
அண்டை அயலவர்களும்
சுற்றம் சூழ்ந்தவர்களும்
என்மீது அதிக அக்கறை
கொண்டவர்கள்.
சதா என்னைப் பற்றியே
சிந்திப்பவர்கள்.
அவர்களுக்காக நான்
நன்றிக் கடன் பட்டுள்ளேன்.
ஏனெனில்
கீழ்வரும் விடயங்களில்
என் பெற்றோரை விடவும்
என்மீது அதிக சிரத்தை
எடுத்துக் கொள்பவர்கள்.
நான் எங்கே செல்கின்றேன் ?
எத்தனை மணிக்கு செல்கின்றேன் ?
யாருடன் செல்கின்றேன் ?
சூரியன் மறைவதற்குள்
வீடு திரும்பி விடுவேனா ?
என்ன ஆடை உடுத்துகிறேன் ?
என்ன படிக்கின்றேன் ?
எங்கே படிக்கின்றேன் ?
இன்னும் எவ்வளவு
காலம் படிப்பேன் ?
எனது சமூக வளைத்தளப்
பக்கங்கள் எவை ?
அங்கு நான் என்ன செய்கின்றேன் ?
யாரோடு பேசுகிறேன் ?
அங்கு எதைப் பதிவிடுகிறேன் ?
எனது எதிர்காலம் என்னவாகும் ?
எப்போது திருமணம் செய்வேன் ?
பாவம் அவர்களுக்கு
என்னால் எத்தனை சிரமம்.
ஆனாலும் அவர்கள் ஒருபோதும்
நான் பசியால் வாடியபோது
பால் என்ன ? பச்சைத் தண்ணீர்
கூட தந்திடாதவர்கள்.
விடுபட்டுப் போன என் பரீட்சைக் கட்டணங்களைக் கட்டுவதற்கு
முன்வராதவர்கள்.
கிழிந்து போன என் ஆடைகளை
தைத்துத் தர முயலாதவர்கள்.
ஆனாலும் என்மீது
அதிக கரிசனை
கொண்டவர்கள் (அவர்கள்)
நிலாத்தோழி