தாத்தா… கவிதை… நௌஷாத் கான்
அதிகாலை விழித்து
சூரியனை எழுப்பி
காலைக் கடன் முடித்து
பச்சை தண்ணீரில் குளித்து
இறைவனை வணங்கி
இறுமாப்புடன்
நெஞ்சம் நிமிர்த்து
வீர நடை போட்டு
சந்தை வந்து
விடக் கோழியை
விடாப் பிடியாய்
பிடித்து வந்து
பாட்டியிடம் கொடுத்து
பக்குவமாய்
அம்மிக்கல்லில் அரைத்த
மசாலாவில்
உருவான
முதல் சிட்டிகை
கோழிச் சாறு
நீ அருந்திய பின்னரே
சொச்ச மிச்சங்கள்
மிச்ச ,சொச்சங்கள்
எங்கள் வாய் வந்து சேரும்
காடை முட்டை ,புறாக்கறி,
வாத்து ,வான்கோழி
குயில் ,கொக்கு ,மடையான்
அறிவியல் புத்தகத்தில் பார்த்த
பச்சிகளையெல்லாம்
சோற்று தட்டில்
அறிமுகம் செய்து வைத்தாய்…
படித்த பிள்ளைகள்
பசிக்காக உண்ணாமல்
ருசிக்காக
KFC சிக்கன் கால்களை
தேடி அலைந்தோம்
படவா ,ராஸ்கோலு
நல்லதை சாப்பிட்டா தான்
நல்லா இருக்க முடியும்
நீ சொன்னதை
காதில் வாங்கி கொள்ளவில்லை…
90 வயதிலும்
கைப்பிடி ஊன்றாமல்
கெத்தாய்
கபாலி சிங்கமாய் வாழ்ந்து மடிந்த
நீ எங்கே ??
40 வயதிலேயே
BP ,சுகரோடு
கைத்தடி தேடி திரியும்
நாங்கள் எங்கே ??
-நௌஷாத் கான்