ஏதோ ஒருவன்… கவிதை… இப்னு பக்கர்
ஏதோ ஒருவன்….
எங்கிருந்தோ வந்தவன்…
அழுக்குற்றவன்…
இருப்பினும்
மனிதனாகப் பட்டவன்…
தேவைகளும் தேடல்களும் கொண்டு
ஆர்ப்பரித்த சந்தைச் சந்தடியில்….
எல்லோரிடமும்
ஏதோ கேட்டுகொண்டிருந்தான்…!!
பொருட்த் தேடலும்
விலைபேசுதலும் முற்றிய சந்தையில்
எடைக்கருவிகளின் முட்களில்
அவனுடைய தேடல்
செல்லக்காசாக அங்குமிங்கும்
ஆடிக் கொண்டிருந்தது….!!”
அந்த சந்தையில்…
விற்பவனும் வாடிக்கையாளனும்
லாபக் கணக்கை மட்டும்
பேசிக் கொண்டதால்….
அவர்களின் கணக்குக் குறிப்பேடுகளில் இவன்
நஷ்டக் கணக்கானான்….!!
என்னை நோக்கி வந்தவனை
உற்றுப் பார்த்தேன்…
அவன் யாசகத் தொழிலாளியல்ல என்பதை
கண்களில்
மிச்சமிருந்த ஒளி சொல்லியது…..!!
அது பசி குறித்து
என்னுடன் பேசியது….!!!
அவன் கண்கள்
என்னை கொத்தித் தின்று கொண்டிருந்தது…
“ஏதேனும் வாங்கித் தா
பசிக்குது….”!!
சாலையோரக்
கடைக்கு அழைத்துச் சென்றேன்…
கடைக்காரரிடம்
உண்ணக் கொடுக்க சொன்னேன்.
அவன் மறுத்தான்….
கட்டித் தருகிறேன்..
இவன் உணவருந்த
இங்கு இடமில்லை….
ஏன்….?
மனிதனை மதிக்கத்
தகுதி தேடும்
இவர்களின் வியாபாரங்களில்….
அதன் தீன் மேஜைகளில்……
இவனுக்கான
இடமில்லை போலும் …!!
கட்டித் தருகிறேன் தொலைந்து போ
என்கிறான் கடைக்காரன்….
எனது பணத்தைப்
பெற்றுக் கொண்டு எனக்கு
பிச்சை போடுகிறாயா…?
எனக்குள் இருந்து
கோபம் புகைந்து
என் கண்களைச்
சிவக்க செய்தது…
இவன் இங்கேயமர்ந்து
உணவருந்தும் விதம்
பசிகொண்டிருப்பதைத் தவிர்த்து
என்ன தகுதி வேண்டும் …?
பசிக்கான பரிவர்த்தனைப்பணத்தை
பெறும்
உங்கள் வியாபாரங்களில்
இவனது இருப்புக்கான
அங்கீகாரம் என்ன…?
பணமற்றவனும் பணமற்றவனின்
பசியும்
கேலிக்குரியதாக பார்க்கப் படும்
பொது புத்தி
எந்த கள்ளத்தொடர்பின்
சித்தாந்த கர்ப்பம்….?
வாக்குவாதம் முற்றித்
தவிர்க்க வழியின்றி
கடைக்காரன் ஒப்புதல் வழங்க…
தனக்கான உணவை
விழுங்கிக்
கொண்டிருந்தான் அவன்…..!!
எல்லோரும் என்னை
பார்த்துக் கொண்டிருந்தார்கள்….
நான் அவனெதிரில்
அமர்ந்து
பசியை பார்த்துகொண்டிருந்தேன்…!
அதன் முகம்
கொடூரமாக இருந்தது….!!
இப்னு பக்கர்