முச்சந்தி

சீன அரிசியில் மறைந்திருக்கும் அரசியலை விட அதில் உறைந்திருக்கும் ஆபத்துகள் அதிகம்

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே 1952ஆம் ஆண்டு இறப்பர் – அரிசி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இதற்கு அமைவாக, இலங்கை சீனாவுக்கு இறப்பரை ஏற்றுமதி செய்து, அதற்குப் பதிலாக அங்கிருந்து அரிசியை இறக்குமதி செய்து வந்துள்ளது.

இலங்கையில் 1952ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதாரச் சரிவு இறப்பர் – அரிசி உடன்பாட்டுக்கு வழி சமைத்ததைப்போன்றே தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி சீனாவில் இருந்து அவ்வப்போது நன்கொடையாக அரிசியை கையேந்துவதற்கு வழிகோலியுள்ளது.

அண்மையில் வடக்கு, கிழக்குக் கடற்றொழிலாளர்களுக்கு சீனாவின் நன்கொடையாக அரிசி விநியோகப்பட்டுள்ளது. இந்நன்கொடையில் மனிதாபிமானத்தை விட பிராந்திய அரசியல் மேலோங்கியிருப்பது வெளிப்படையானது. ஆனால், சீன அரிசியில் மறைந்திருக்கும் அரசியலை விட அதில் உறைந்திருக்கும் ஆபத்துகள் அதிகம் என்று தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.

இலங்கைக்கு சீனா நன்கொடையாக வழங்கிவருகின்ற அரிசி குறித்து பொ. ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார்.

அந்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உலகில் அதிகளவில் அரிசியை உற்பத்தி செய்யும் நாடாகவும் அதிகளவில் அரிசியை ஏற்றுமதி செய்யும் நாடாகவும் சீனாவே முதலிடத்தில் உள்ளது. ஆனால், அண்மைக் கால ஆய்வுகளின் முடிவுகள் சீனாவின் அரிசியில் சூழல் மாசு காரணமாக கட்மியம் அங்கீகரிக்கப்பட்ட அளவை விடவும் பன்மடங்கு அதிகமாக இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கட்மியம் உடலுக்கு அத்தியாவசியம் இல்லாத ஆபத்தான ஒரு பாரஉலோகம். உணவின் மூலம் உடலில் நுழைந்து நீண்டகாலம் தேங்கியிருக்கக்கூடிய இக்கட்மியம் சிறுநீரகங்களை செயலிழக்க வைப்பதோடு மார்பு, நுரையீரல், சதையம், சிறுநீரகம் போன்றவற்றில் புற்றுநோய் ஏற்படுவதற்கும் காரணமாக உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், சீனாவில் இருந்து இலங்கைக்கு வழங்கப்பட்டுவரும் தரப்பரிசோதனை செய்யப்படாத அரிசியை நுகர்வது குறித்து பொதுமக்கள் விழிப்பாக இருப்பது அவசியமாகும்.

இலங்கை 2023ஆம் ஆண்டு அரிசி உற்பத்தியில் தன்நிறைவைக் கொண்டிருந்தது.

கடந்த பெரும்போகத்தில் மழைவெள்ளம் சில பிரதேசங்களில் நெற்செய்கையைப் பாதித்திருந்தாலும் இந்த ஆண்டினது ஒட்டுமொத்த நெல் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்படவில்லை. சீனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதை மாத்திரமே நோக்கமாகக் கொண்டிருப்பின் தனது சந்தேகத்துக்கு இடமான அரிசியை இலங்கையில் விநியோகிப்பதை நிறுத்தி இலங்கையிலேயே அதனைக் கொள்வனவு செய்து விநியோகிப்பதே சாலச்சிறந்தது. இந்நடைமுறை சரியான சந்தை வாய்ப்புகளின்றித் தவிக்கும் எமது விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்துவதோடு ஆபத்தான பார உலோகங்களில் இருந்து எம்மைப் பாதுகாக்கவும் செய்யும்.

சோற்று அரசியல் சேற்றுக்குள் சிக்கி மென்மேலும் எமது மக்களின் வாழ்வு சீரழியாமல் இருக்க உரிய தரப்புகள் இது குறித்து உடனடியாக ஆவன செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.