அணுமின் நிலையத்துக்கு தீ வைத்த ரஷ்யா: மேலும் தீவிரமடையும் போர்
ரஷ்யா – உக்ரெய்னுக்கு இடையிலான போர் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றது.
அவ்வப்போது இரு நாடுகளும் தீவிர தாக்குதல்களில் ஈடுபடுகின்றன.
இந்நிலையில், முதல் தடவையாக நேற்று ஞாயிற்றுக்கிழமை உக்ரெய்ன் படைகள் ரஷ்யாவுக்குள் நுழைந்து கூர்க்ஸ் பிராந்தியத்தில் சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதனால் உடனடியாக அங்கு அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளதோடு, சுமார் 76 ஆயிரம் பேர் அவ்விடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அதேசமயம் கூர்க்ஸ் பிராந்தியத்துக்குள் உக்ரெய்ன் படைகள் முன்னேறுவதை தடுக்க ரஷ்யா அதன் இராணுவத்தை குவித்துள்ளது.
ரஷ்யாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவதை உக்ரெய்ன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸி ஒப்புக்கொண்டதோடு, இது மிகப்பெரிய வெற்றி எனவும் கூறியுள்ளார்.
அதேவேளை உக்ரெய்னின் இந்த தாக்குதல் பதட்டத்தை மேலும் அதிகரிக்கும் என ரஷ்ய ஜனாதிபதி புடின் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் ரஷ்ய இராணுவ வீரர்களால் கைப்பற்றப்பட்டிருந்த உக்ரெய்னின் ஜபோரிஜியா அணு மின் நிலையத்தை (Zaporizhzhia Nuclear Power Plant) அழிக்கும் நோக்கில் ரஷ்ய வீரர்கள் அதற்கு தீ வைத்தனர்.
இதனால் கரும்புகை எழுந்து, அணு வீச்சு தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான மிகுந்த ஆபத்தை விளைவிக்கும் தாக்குதலை ரஷ்யா தவிர்க்க வேண்டும் என உக்ரெய்ன் அரசும் இச் சம்பவத்துக்கு உக்ரெய்தான் காரணம் என ரஷ்யாவும் பரஸ்பரம் குற்றம் சாட்டியுள்ளது.
இதன் காரணமாக ரஷ்யா – உக்ரெய்ன் போர் நிலைமை இன்னும் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.