தீப்பந்தத்தைப் புதிய தலைமுறையிடம் கொடுப்பதே ஆகச் சிறந்த வழி
நாட்டின் எதிர்காலம் குறித்த தமது கவலையாலேயே அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தாம் விலகியதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
போட்டியிலிருந்து விலகிய பிறகு வெள்ளை மாளிகையிலிருந்து நாட்டு மக்களுக்கு அவர் முதன்முறையாக ஆற்றிய உரையில், வெற்றியடையும் இலக்குடன் ஜனநாயகக் கட்சியினரை
ஒன்றிணைக்கவே தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாகச் சொன்னார்.
“எங்களது ஜனநாயகத்தைக் காப்பதில், தனிப்பட்ட லட்சியம் உட்பட எதுவும் குறுக்கிட முடியாது,” என்றார் அவர்.
“நான் இந்தப் பதவியை உயர்வாக மதிக்கிறேன். எனினும், எனது நாட்டை நான் மேலும் நேசிக்கிறேன்,” என்றும் திரு பைடன், 81, சொன்னார்.
“தீப்பந்தத்தை புதிய தலைமுறையிடம் கொடுப்பதே ஆகச் சிறந்த வழி என நான் முடிவெடுத்துள்ளேன். நமது நாட்டை ஒன்றிணைக்க அதுவே சிறந்த வழி,” என்றார் அவர்.
தமக்குப் பதிலாக ஜனநாயகக் கட்சி சார்பாகப் போட்டியிட முன்மொழியப்பட்டுள்ள துணை அதிபர் கமலா ஹாரிஸை பாராட்டிய பைடன், “அவர் கடினமானவர். அவர் ஆற்றல் உடையவர். அவர் எனக்கு ஓர் அற்புதமான பங்காளியாகவும் நமது நாட்டிற்கும் ஒரு தலைவராகவும்
இருந்துள்ளார்,” எனக் கூறினார்.
குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்ப்பின் பெயரைக்குறிப்பிடாமல் பேசிய திரு பைடன், நவம்பர் 5ஆம் தேதி நடைபெறும் அதிபர் தேர்தலில் டிரம்ப் வென்றால் அமெரிக்கர்கள் எதிர்நோக்கும் ஆபத்தைக் குறிப்பிட்டார்.
“அமெரிக்காவைப் பற்றிய மிகச் சிறந்த பண்பானது இங்கு, மன்னர்களும் சர்வாதிகாரிகளும் ஆளுவதில்லை. மக்களே ஆளுகின்றனர். வரலாறு உங்கள் கைகளில் உள்ளது. சக்தி உங்கள் கைகளில் உள்ளது. அமெரிக்கா பற்றிய யோசனை உங்கள் கைகளில் உள்ளது,” என்றார் பைடன்.