என் மகன் மரணமடைந்துவிட்டான்.. ..நா தழுதழுக்க பேச முடியாமல் எலான் மஸ்க்!
மாற்றம், புதுமை, வித்தியாசம் போன்ற வார்த்தைகளுக்கு அடையாளமாக விளங்கும், தொழிலதிபர் எலான் மஸ்க், தனது மகன் மரணமடைந்துவிட்டதாகக் கூறி நா தழுதழுக்க பேச முடியாமல் உடைந்துபோகும் விடியோ ஒன்று வைரலாகியிருக்கிறது.
எப்போதும் சுறுசுறுப்புடன் எதற்கும் சளைக்காமல் பதில் சொல்லும் எலான் மஸ்க், பேச முடியாமல் உடைந்து போனதே அதற்குக் காரணம்.
அதாவது, தனது பிள்ளைகளில், மத்த மகன், 18 வயதாகும் முன்பே, பாலின மாற்று அறுவைசிகிச்சை செய்து கொண்டதாகவும், தன்னை ஏமாற்றி, அதற்கான அனுமதி கடிதத்தில் கையெழுத்துப் பெற்றதாகவும் கூறி வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
பெரும் பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், எக்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்குச் சொந்தக்காரருமான எலான் மஸ்க், அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், தனது மகன் வோக் மைன்ட் வைரஸால் உயிரிழந்துவிட்டதாகவும், உலகிலிருந்த இந்த வைரஸை நிச்சயம் அழிப்பேன் என்றும் குறிப்பிட்டார்.
அதாவது, வோக் மைன்ட் வைரஸ் என்பது உண்மையான வைரஸ் இல்லை. பாலின மாற்று சிகிச்சையைத்தான், அதன் எதிர்ப்பாளர்கள் அவ்வாறு அழைக்கிறார்கள்.
அதாவது, தனது மகன் சேவியர், தான் ஒரு திருநங்கை என அறிவித்து பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு பெயரையும் விவியன் ஜென்னா வில்சன் என மாற்றிக்கொண்டார்.
இது குறித்து எலான் மஸ்க் கூறுகையில், இது எனது மூத்த மகன்களில் ஒருவருக்கு நேர்ந்தது. அவருக்கு அறுவைசிகிச்சை செய்ய, என்னை ஏமாற்றி கையெழுத்து வாங்கினார்கள். நான் கையெழுத்து போடாவிட்டால் அவன் தற்கொலை செய்துகொள்வான் என என்னை மிரட்டினார்கள்.
இது புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு மிக மோசமானது. இதனை ஊக்குவிப்பவர்கள் அனைவரையும் சிறையில் அடைக்க வேண்டும். இதனால் நான் என் மகனை இழந்தேன். அதுமட்டும்தான் உண்மை எனக் கூறியிருக்கிறார்,
எலான் மஸ்க் – மூத்த மனைவி ஜஸ்டின் தம்பதிக்கு 2004ஆம் ஆண்டு பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒருவர்தான் விவியன் என பெயர்மாற்றிக்கொண்ட சேவியர். இவர் 2022ஆம் ஆண்டு திருநங்கையாக மாறினார். தனக்கும், தந்தைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.