ஹமாஸ் ஆயுதக்குழு தளபதியை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் – 90 பேர் பலி
காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது. ஆனால், 116 பேர் இன்னும் பணய கைதிகளாக ஹமாஸ் பிடியில் உள்ளதாகவும், அதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும், காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
காசா முனையில் இஸ்ரேல் படையினரும் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் காசா முனையில் அல் மவாசி பகுதியில் இஸ்ரேல் நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் போர் விமானங்கள், டிரோன்கள் மூலம் ஏவுகணைகள் வீசப்பட்டன. இந்த அதிரடி தாக்குதலில் 90 பேர் உயிரிழந்தனர். மேலும், 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.ஹமாஸ் அமைப்பில் அரசியல் பிரிவு, குவாசம் பிரிகேட் என்ற ஆயுதக்குழு பிரிவு உள்பட பல்வேறு பிரிவுகள் உள்ளன. ஹமாஸ் அமைப்பின் தலைவராக யாஹா சின்வர் உள்ள நிலையில் அந்த அமைப்பின் ஆயுதக்குழு தளபதியாக முகமது டைப் செயல்பட்டு வருகிறார்.
பல ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள முகமது டைப் இஸ்ரேல் மீது அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் தாக்குதல் நடத்த திட்டமிட்டவர்களில் முதன்மை நபர் ஆவார்.இதையடுத்து, முகமது டைப்பை அழிக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கியது. அவர் பல ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள நிலையில் முகமது டைப்பை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அல் மவாசி பகுதியில் முகமது டைப் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் 90 பேர் உயிரிழந்த நிலையில் இதில் குவாசம் பிரிகேட் என்ற ஹமாஸ் ஆயுதக்குழுவின் தளபதியும் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் 2ம் நிலை தளபதியான ரபா சலமாவும் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, இந்த தாக்குதலில் பலியான ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் எண்ணிக்கை குறித்த விவரம் வெளியாகவில்லை.