பிரசாரத்தின்போது வலது காதில் சுடப்பட்ட டிரம்ப்; கொல்லப்பட்ட சந்தேக நபர்
அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்ப் பென்சில்வேனியா டாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது பலமுறை துப்பாக்கிக்சூட்டு சத்தம் கேட்டது.
அப்போது திரு டிரம்ப் வலியுடன் தனது வலது கையை, வலது காதுக்கு உயர்த்தியது சம்பவம் பதிவான காணொளியில் தெரிந்தது. பிறகு மெய்க்காப்பாளர்கள் அவரைச் சுற்றிக்கொண்டனர், ஆயுதம் ஏந்திய அதிகாரிகள் அவர் இருந்த மேடையில் பணியில் இறங்கினர்.
பிரசாரம் நேரடியாக ஒளிபரப்பான காணொளியில் திரு டிரம்ப்பின் வலது காதிலும் வலது கன்னத்திலும் ரத்தம் காணப்பட்டது. தமது வலது காதில் சுடப்பட்டதாக திரு டிரம்ப் பின்னர் தெரிவித்தார்.
சம்பவம் குறித்து அமெரிக்க உளவுத் துறை எக்ஸ் சமூக ஊடகத்தில் தகவல் தெரிவித்திருந்தது.
“ஜூலை 13ஆம் தேதி மாலை 6.15 மணியளவில் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள பட்லர் நகரில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது தாக்குதல்காரர் என்று சந்தேகிக்கப்படும் ஒருவர், பிரசாரப் பகுதிக்கு அப்பால் உயர்வாக இருக்கும் இடத்திலிருந்து பலமுறை மேடையை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
“அமெரிக்க உளவுத் துறை சந்தேக நபரை உடனே செயலிழக்கச் செய்தது. இப்போது அந்நபர் உயிருடன் இல்லை.
“பிரசாரத்தில் கலந்துகொண்ட பார்வையாளர்களில் ஒருவர் மாண்டுவிட்டார். மேலும் இரு பார்வையாளர்கள் மோசமான காயத்துக்கு ஆளாயினர்,” என்று உளவுத் துறை எக்ஸ் தளத்தில் தெரிவித்தது.
காயமுற்ற திரு டிரம்ப், சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவ நிலையம் ஒன்றுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அவரின் பேச்சாளர் ஸ்டீவன் சியூங் கூறினார். திரு டிரம்ப், நிலைமையைத் துரிதமாகக் கையாண்டதற்கு அமெரிக்க உளவுத் துறையினருக்கும் சட்ட ஒழுங்கு அதிகாரிகளுக்கும் ட்ரூத் எனும் தமது சமூக ஊடகத் தளத்தில் நன்றி தெரிவித்துக்கொண்டார். கொல்லப்ட்ட பார்வையாளரின் குடும்பத்தாருக்கு அவர் தமது அனுதாபங்களையும் தெரிவித்துக்கொண்டார்.