இலக்கியச்சோலை

அவுஸ்திரேலியா கானா பிரபா எழுதிய” S P B பாடகன் சங்கதி”… முருகபூபதி.

படித்தோம் சொல்கின்றோம்….  அவுஸ்திரேலியா கானா பிரபா எழுதிய S P B பாடகன் சங்கதி!…. அமரத்துவம் எய்திய கலைஞனின் இசைப்பயணத்தை பேசும் நூல்!!….. முருகபூபதி

கலை, இலக்கியத்தை ரசிக்கும் அதேசமயத்தில், மரபார்ந்த சாஸ்திரீய சங்கீதத்தையும், திரையிசையில் பின்னாளில் நேர்ந்த புத்திசையையும் ஆழ்ந்து ரசித்து, தனது ரசனைக் குறிப்புகளை எழுதிவருபவர் அவுஸ்திரேலியா – சிட்னியில் வதியும் கானா. பிரபா.
தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றிவரும் இவர், படைப்பிலக்கிய வாதியாகவும், வானொலி ஊடகவியலாளராகவும் இயங்கிவருகிறார்.

வட இலங்கையில் இணுவிலை பூர்வீகமாகக்கொண்டிருக்கும் கானா. பிரபா, 1995 ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியாவில் வதிகிறார்.

புகலிட கலை, இலக்கிய, வானொலி ஊடகத்தில் இவரது வகிபாகம் குறிப்பிடத்தகுந்தது.
அது எங்கட காலம் என்ற புனைவு சாராத பத்தி எழுத்து தொகுப்பினையும் கம்போடியா, பாலித்தீவு முதலான பயண இலக்கிய நூல்களையும் ஏற்கனவே வரவாக்கியிருக்கும் கானா. பிரபாவின் மற்றும் ஒரு நூல்: S P B பாடகன் சங்கதி.

448 பக்கங்களைக் கொண்டிருக்கும் இந்த நூலை தமிழ்நாடு அகநாழிகை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

தனது மிகுந்த நேசத்துக்குரிய ஈழத்து முன்னோடி திரைப்பட இயக்குநரான அற்பாயுளில் மறைந்துவிட்ட ந. கேசவராஜனுக்கு இந்நூலை சமர்ப்பணம் செய்துள்ளார்.
1946 ஆம் ஆண்டு, ஶ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்பிரமணியம் என்ற இயற்பெயரோடு பிறந்திருக்கும் எஸ். பி. பி., கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் கொவிட் – 19 பெருந்தொற்றின் தாக்கத்தினால் மறைந்தார். அவ்வேளையில் அந்த இழப்பினைத் தாங்கிக்கொள்ள முடியாமல் பல நாட்கள் கண்ணீர் சிந்தியவர்கள் பல்லாயிரம் பேர்.
மறைந்தும் வாழ்ந்துகொண்டிருக்கும் அந்தக்கலைஞனின் இசையுலகப் பயணத்தை, தனது தீவிர தேடலின் ஊடாகவும், கலைநயத்துடனும், இசை குறித்த தேர்ந்த ரசனையுடனும் இந்த நூலை எழுதியிருக்கிறார் கானா. பிரபா.

தமிழக திரைப்படக் கலைஞர் சித்ரா லட்சுமணன் , இலங்கை எழுத்தாளர் , மொழிபெயர்ப்பாளர், திரைப்பட ஆய்வாளர் தம்பிஐயா தேவதாஸ் ஆகியோர் அணிந்துரைகளையும், பெங்களுரைச்சேர்ந்த எழுத்தாளர் என். சொக்கன் முன்னுரையும் அகநாழிகை பதிப்பாளர் பொன் . வாசுதேவன் பதிப்புரையும் எழுதியிருக்கிறார்கள்.

52 அங்கங்களுடன் வெளியாகியிருக்கும் இந்நூல், எஸ். பி. பி. மறைந்த சில நாட்களில் ஆனந்தவிகடன் இதழில் கானா. பிரபா எழுதிய பாடும் நிலா – நினைவு தூங்கிடாது என்ற ஆக்கத்துடன் தொடங்குகிறது.

சிறந்த பாடகராக இந்திய மத்திய அரசின் தேசிய விருதுகளையும், அதியுயர் விருதான பத்மவிபூஷண் விருதையும் பெற்றிருப்பதோடு தெலுங்கு, தமிழ், கன்னடம் மலையாளம், இந்தி உட்பட 14 மொழிகளில் பாடி சாதனை நிகழ்த்தியிருக்கும் எஸ். பி. பி. அவர்கள் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர். அத்துடன் பல திரைப்படங்களுக்கும் இசையமைத்தவர். தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்களிலும் நடித்திருக்கும் பல்துறைக்கலைஞர்.

அவரது வாழ்க்கைச்சரிதத்தை, அவர் தொடர்ந்தும் பயணித்த இசைப் பாதையின் வழியே பதிவு செய்துள்ளார் கானா. பிரபா.

இந்நூலை படிக்கின்றபோது, வியப்பும் பிரமிப்பும் வருகிறது. அதற்குக்காரணம், கானா. பிரபாவின் தீவிர தேடலும் இதனை எழுதி முடிப்பதற்கு இவர் மேற்கொண்ட உழைப்பும்தான்.
இந்த அரிய நூலை எஸ். பி. பி. அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே இவர் எழுதி வெளியிட்டிருக்கலாமே என்ற ஆதங்கமும் வருகிறது.

எமது சமூகத்தில் , பல ஆளுமைகளின் உன்னத பக்கங்கள் அவர்களின் மறைவுக்குப் பின்னர்தான் பேசுபொருளாகின்றன.

மகாகவி பாரதி காலத்திலிருந்தே இதுதான் நடக்கிறது ! ஆந்திராவில் தெலுங்கு மொழியை தாய்மொழியாகக் கொண்டிருந்த ஒரு குடும்பத்தில் பிறந்து, இந்திய மொழிகள் அனைத்திலும் பாடிப் புகழின் உச்சத்திற்குச் சென்றபோதும், தன்னடக்கத்துடன், பாட்டுப்போட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக எஸ். பி. பி. பங்கேற்ற வேளைகளில், புதிய இளம் பாடகர்களை – அவர்கள் குழந்தைகளாக இருந்தாலும், ஊக்குவித்து பாராட்டும் முன்னுதாரணமான பண்பினைக்கொண்டிருந்தவர்தான் என்பது நாம் இன்றும் பார்த்து ரசிக்கும் சமூக வலைத்தளங்களின் மூலம் தெரிந்துகொண்டிருக்கும் செய்தி.

இந்த நூலில் கானா. பிரபா, பட்டியலிட்டிருக்கும் , எஸ். பி. பி. சம்பந்தப்பட்ட பாடல்களை பார்த்தபோது, இவரின் நினைவாற்றல் எம்மை பிரமிக்கவைக்கிறது.

அந்தப்பாடல்களின் தொடக்கத்தை வாசிக்கும்போது, எம்மையறியாமலேயே மனமும் வாயும் முணுமுணுக்கிறது. மீண்டும் அந்தப் பாடல்கள் வெளியான திரைப்படங்களை பார்க்கவேண்டும் என்ற ஆவலையும் தூண்டுகிறது.

“ உலகமெல்லாம் உண்ணும்போது நாமும் சாப்பிட எண்ணுவோம். உலகமெல்லாம் சிரிக்கும்போது நாமும் புன்னகை சிந்துவோம் “ என்று தன் இறுதி இசை மேடையில் முத்தாய்ப்பாய்ச் சொல்லி வைத்தவர் எங்கள் “ பாடும் நிலா “ எஸ். பி. பாலசுப்பிரமணியம் அவர்கள். கொரோனோ பொது முடக்கத்தில் எல்லோரும் முடங்கிப்போயிருந்த வேளை, வாழ்வாதாரம் இன்றி நலிவுற்ற இசைக்கலைஞர்களுக்கான நிதியாதார நிகழ்வில் பங்கேற்று ஊக்கமும் ஆக்கமும் கொடுத்திருந்தார் . “ என்ற செய்தியையும் நூலாசிரியர் கானா. பிரபா, இந்நூலின் நிறைவுரையில் அழுத்தமாக பதிவுசெய்துள்ளார்.

அத்தகைய மனிதநேயம் மிக்க கலைஞனை இயற்கை ஏன் பாதிவழியில் அழைத்துச்சென்றது..?! என்ற சினமும் மனதில் பொங்குகிறது.

அற்பாயுள் மரணத்திற்கும் ஆளுமைகளின் மேதா விலாசத்திற்கும் அப்படியொரு நெருக்கமும் உறவும் இருக்கிறதோ..? ! என்றும் எம்மை சிந்திக்கவைக்கிறது இந்த நூல்.
இசை உலகில் எஸ். பி. பி.யின் வகிபாகத்தின் பல பரிமாணங்களைப் பேசும் இந்த நூல், இசையமைப்பாளர்கள், பின்னணிப் பாடகர்கள் பலர் பற்றிய அரிய தகவல்களையும் பதிவுசெய்துள்ளது.

எஸ். பி. பி. யின் ஆற்றல்களை இனம்காண்பிக்கின்ற அதே சமயம், அவரைச்சுற்றி வலம்வந்தவர்கள் பற்றிய அரிய செய்திகளையும் இந்நூலில் கானா. பிரபா நினைவூட்டுகிறார்.
ஒரு பாடல் மக்கள் மனதில் நிலைத்திருப்பதற்கு யார் அடிப்படைக்காரணம்..? என்ற பட்டி மன்றம் நடத்தினால், சரியான தீர்ப்பை வழங்க முடியாது.

பாடல்களில் இடம்பெறும் அர்த்தம் பொதிந்த வரிகளை எழுதிய கவிஞர்களா, அதன் உயிர் சிதையாமல் பாடிய பாடகர்களா..? பொருத்தமான இசைக்கோர்வைகளை படைத்த இசையமைப்பாளர்களா..? ரசிகர்கள் மனதில் மேலோங்கியிருக்கிறார்கள் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டால் சுவாரசியமான தகவல்கள் கிடைக்கும்.

அத்தகைய சிந்தனையோட்டத்திற்கு வாசகர்களை தூண்டும் வகையிலும் கானா. பிரபா, மிகவும் நுட்பமான விடயங்களையும் இந்த நூலில் இழையோட விட்டுள்ளார்.
திரையிசைப்பிரியர்களின் வாசிப்பு அனுபவத்திற்கு தேவைப்பட்டதை எங்கிருந்தெல்லாமோ தேடி எடுத்து தொகுத்து வழங்கியிருக்கிறார் நூலாசிரியர்.

இந்த நூலை எஸ். பி. பி. யின் நெருங்கிய நண்பர் இசையமைப்பாளர் கங்கை அமரன் அவர்களும் பெற்றிருக்கிறார் என்ற செய்தியையும் சமூக ஊடகங்களில் நாம் பார்த்தோம்.
எஸ். பி. பி. யின் இசைப்பயணம் பற்றிய கலைக்களஞ்சியமாகவும் இந்த நூல் திகழுகிறது.
இசையுலகில் இன்றும் வாழும் வரலாறாகியிருக்கும் எஸ். பி. பி. பற்றிய சிறந்ததோர் ஆவணத்தை வழங்கியிருக்கும் கானா. பிரபா அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.

letchumananm@gmail.com
முருகபூபதி

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.