இலங்கை

நாளை நடைபெறவுள்ள பிரிட்டன் பொதுத்தேர்தலில் ஈழத்தமிழர்கள் அறுவர் போட்டி

சர்வதேச மட்டத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பிரிட்டன் பொதுத்தேர்தல் வியாழக்கிழமை (4) நடைபெறவுள்ள நிலையில், முன்னெப்போதையும் விட இம்முறை அதிக எண்ணிக்கையான பிரிட்டன்வாழ் ஈழத்தமிழர்கள் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

அதன்படி இலங்கையைப் பூர்விகமாகக்கொண்ட அறுவர் பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகும் நோக்கில் இந்தத் தேர்தலில் களமிறங்கியுள்ளனர். தொழிற்கட்சியின் சார்பில் உமா குமாரன் மற்றும் டெவினா போல், கொன்சவேட்டிவ் கட்சியின் சார்பில் கெவின் ஹரன், த க்ரீன் கட்சியின் சார்பில் நாராணி ருத்ரா-ராஜன், லிபரல் டெமோகிரட்ஸ் கட்சியின் சார்பில் கமலா குகன் மற்றும் ரிஃபோர்ம் யு.கே கட்சியின் சார்பில் மயூரன் செந்தில்நாதன் ஆகியோரே வியாழக்கிழமை (4) நடைபெறவிருக்கும் பிரிட்டன் பொதுத்தேர்தலில் போட்டியிடவிருக்கும் இலங்கை பின்னணியைக்கொண்ட தமிழர்களாவர்.

அவர்கள் ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பான தமது அணுகுமுறை மற்றும் போர்க்குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறச்செய்வதில் தாம் கொண்டிருக்கும் கடப்பாடு என்பன குறித்து வெளியிட்டிருக்கும் கருத்துக்கள் வருமாறு:

உமா குமாரன்

கிழக்கு லண்டனில் பிறந்த உமா குமாரனின் பெற்றோர் யாழ்ப்பாணத்தைப் பூர்விகமாகக்கொண்டவர்களும், போரின் விளைவாக பிரிட்டனுக்குப் புலம்பெயர்ந்தவர்களுமாவர். ‘2009 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் இற்றைவரை ஒருவர்கூட பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவில்லை என்பதை நம்பமுடியவில்லை. இப்போரின்போது இடம்பெற்ற உயிரிழப்புக்களையும், சொத்து இழப்புக்களையும் ஒருபோதும் மறவோம். நான் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகும் பட்சத்தில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதையும், நீதியை நிலைநாட்டுவதையும் முன்னிறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்கள் உள்ளடங்கலாக சகல கட்டமைப்புக்களுடனும் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவேன்.’

கெவின் ஹரன்

பிரிட்டனில் பிறந்த கெவின் ஹரனின் தந்தை யாழ்ப்பாணத்தைப் பூர்விகமாகக்கொண்டவரும், 1970 களின் இறுதியில் பிரிட்டனுக்குப் புலம்பெயர்ந்தவருமாவார். ‘யுத்தத்தின்போது இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படவேண்டும். இலங்கை உரோம் பிரகடனத்தில் கையெழுத்திடவில்லை. எனவே ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபையில் தீர்மானமொன்றைக் கொண்டுவருவதன் ஊடாகவே இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தமுடியும். இவ்விடயத்தில் இராஜதந்திர அணுகுமுறை இன்றியமையாததாகும்.’

நாராணி ருத்ரா-ராஜன்

‘இலங்கையில் 2009 ஆம் ஆண்டு மிகமோசமான முறையில் போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டபோதும், 2022 இல் தீவிர பொருளாதார நெருக்கடியின்போதும் பிரிட்டன் அரசாங்கங்கள் உரியவாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தவறியுள்ளன. இருப்பினும் எமது கட்சி இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆதாரங்களைத் திரட்டுவதற்கும், போர்க்குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கும் அவசியமான அழுத்தங்களைத் தொடர்ந்து வழங்கும்’

டெவினா போல்

‘சமாதானம், அங்கீகாரம் மற்றும் நீதி என்பவற்றை அடைந்துகொள்வதற்கான தமிழர்களின் போராட்டத்தில் தொழிற்கட்சி எப்போதும் தோளோடு தோள் கொடுத்துவந்திருக்கின்றது. அதன்படி நான் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவானால் ஈழத்தமிழர்களுக்கான உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலைத் தொடர்ந்து வலியுறுத்திவரும் எமது கட்சியின் ஏனைய தலைவர்களுடன் இணைந்து, அந்நோக்கத்தை முன்னிறுத்தி செயலாற்றுவேன்.’

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.