இலங்கை

சம்பந்தனின் மறைவுக்கு மகிந்த உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் இரங்கல்; இறுதிக் கிரியைகள் தொடர்பான அறிவிப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் மறைவுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அரச தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உடல்நலக் குறைவால் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று இரவு தனது 91ஆவது வயதில் காலமானார்.

இந்நிலையில், சம்பந்தனின் மறைவு இலங்கை அரசியல் சகோதரத்துவத்திற்கு ஒரு இழப்பு என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“சம்பந்தன் எனது பழைய நண்பர் . நாங்கள் பல நாட்கள் பல்வேறு விடயங்களை குறித்து கலந்துரையாடியுள்ளோம். அவரது மறைவு இலங்கை அரசியல் சகோதரத்துவத்திற்கு ஒரு இழப்பாகும்.

இந்நிலையில், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆறுதலை கூற விரும்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சம்பந்தனின் இழப்பு பெரிதும் உணரப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தனது இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும், இரா.சம்பந்தன் மூத்த அரசியல்வாதி எனவும் சரத் பொன்சேகா தனது இரங்கல் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இறுதி கிரியைகள் தொடர்பான விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அவரின் பூதவுடல் அஞ்சலிக்காகக் கொழும்பில் மலர்சாலையில் வைக்கப்பட்டு அதன்பின்னர் நாடாளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

மேலும், அன்னாரின் பூதவுடல் இறுதிக்கிரியைகளுக்காக அவரின் சொந்த ஊரான திருகோணமலைக்குக் கொண்டு செல்லப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.