2030 இல் உலகில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 22 மில்லியனாக அதிகரிக்கும்: விசேட வைத்தியரின் எச்சரிக்கை
உலகில் 18 மில்லியனாக இருக்கும் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 2030ஆம் ஆண்டளவில் 22 மில்லியனாக அதிகரிக்கும் என இலங்கை புற்றுநோய் சங்கத்தின் கண்டி கிளையின் மனநல வைத்தியர் யோகா அந்தோனி தெரிவித்துள்ளார்.
புற்று நோயாளர்களின் எண்ணிக்கை இவ்வாறாக அதிகரித்து வருகின்ற போதிலும், விழிப்புணர்வினால் அதனை கணிசமான அளவில் கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டி மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் இன்று (18) இடம்பெற்ற புற்று நோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“ஆண்களுக்கு பொதுவாகக் காணப்படும் வாய்ப் புற்றுநோய் வெற்றிலை உண்பதினால் ஏற்படுவதாகவும், புகைப்பிடிப்பதினால் நுரையீரல் புற்றுநோய் உருவாகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மதுபானம் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் உணவுக்குழாய் மற்றும் குடல் தொடர்பான புற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என்றும் மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்கூட்டியே நோயாயை கண்டறிவதன் மூலம் மூன்றில் ஒரு பங்கு நோயாளிகளை கட்டுப்படுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.