‘போர் அமைச்சரவையை கலைத்தார் இஸ்ரேல் பிரதமர்’: காசா போர் குறித்து முக்கிய முடிவுகள்
இஸ்ரேலின் ஆறு பேர் கொண்ட போர் அமைச்சரவை முடிவுக்கு வருவதாக அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
நேற்று மாலை நடந்த பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், அதனை இன்று அறிவித்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த அமைச்சரவையின் முக்கிய நபராக இருந்த எதிர்க்கட்சித் தலைவர் பென்னி கிராண்ட்ஸ் கடந்த வாரம் பதவி விலகினார். இதன் பின்னணியிலேயே போர் அமைச்சரவை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில், காசா போர் பற்றி பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆலோசனை நடத்துவார் எனவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொல்லாவுக்கு எதிரான பிரச்சாரங்களை நிர்வகிக்க கடந்த ஆண்டு ஒக்டோபர் 11ஆம் திகதி போர் அமைச்சரவை ஏற்படுத்தப்பட்டிருந்தது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் தொடங்கி ஐந்து நாட்களுக்குப் பிறகு போர் அமைச்சரவை ஏற்படுத்தப்பட்டது.
இதில் நெதன்யாகு மற்றும் பென்னி கிராண்ட்ஸ் மட்டுமல்ல, பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட்டும் உள்வாங்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், பிரதமர் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் ஆகியோர் போர் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்க முக்கிய கலந்துரையாடல்களில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.