ரஷ்யா பகைமையைக் கைவிட்டு உக்ரேனுடன் பேச்சு நடத்த வேண்டும்
ரஷ்யா பகைமையைக் கைவிட்டு, அனைத்துலகச் சட்டம், ஐக்கிய நாட்டு (ஐநா) சாசனம் ஆகியவற்றின் அடிப்படையில் நல்லெண்ணத்துடன் உக்ரேனுடன் பேச்சு நடத்த வேண்டும் என்று சிங்கப்பூர் கேட்டுக்கொண்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உக்ரேன் அமைதிக்கான உச்சநிலை மாநாட்டில் சிங்கப்பூரின் வெளியுறவு, தேசிய வளர்ச்சி அமைச்சுகளுக்கான மூத்த துணையமைச்சர் சிம் ஆன் சிங்கப்பூர் சார்பாகக் கலந்துகொண்டார்.
பிரதமர் லாரன்ஸ் வோங், அந்த மாநாட்டிற்கான சிங்கப்பூரின் சிறப்புத் தூதராகத் திருவாட்டி சிம் ஆனை நியமித்தார்.
ஜூன் 15, 16 ஆம் தேதிகளில் நடைபெற்ற மாநாட்டில் ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையிலான மோதல் தொடர்பில் சிங்கப்பூரின் நிலைப்பாட்டை அவர் மறுஉறுதிப்படுத்தினார்.
அணுவாயுதப் பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு, போர்க் கைதிகளையும் பெற்றோர் அனுமதியின்றி கொண்டுசெல்லப்பட்ட உக்ரேனியச் சிறுவர்களையும் ஒப்படைத்தல் ஆகிய அம்சங்களில் மாநாடு கவனம் செலுத்தியது.
ரஷ்ய-உக்ரேனியப் போர் தொடர்பில் அமைதியான, நீடித்த தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் மாநாட்டில் கலந்துகொண்ட அனைவரும் ஒருமித்த வகையில் இணக்கம் கண்டுள்ளனர்.
அனைத்து நாடுகளும் அவற்றின் எல்லையைத் தற்காத்தல், அரசியல் சுதந்திரம், இறையாண்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தைத் திருவாட்டி சிம் ஆன் வலியுறுத்தினார்.
அனைத்துலக அணுசக்தி அமைப்பின் ஐந்து அடிப்படைக் கொள்கைகளுக்கான சிங்கப்பூரின் ஆதரவை அவர் மறுஉறுதிப்படுத்தினார்.
மாநாட்டில் அவர் கலந்துகொண்டது அனைத்துலகச் சட்டம், ஐநா சாசனம் இரண்டின் தொடர்பிலும் சிங்கப்பூரின் உறுதியான கடப்பாட்டைத் தெரிவிப்பதாக இருந்தது என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு ஜூன் 16ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.