சிங்கள பௌத்த வாக்குகள் பிரியுமென்பதால் தமிழ் வாக்குகளுக்கு மோதும் சஜித்,அனுர
தென்னிலங்கை சிங்கள பௌத்த வாக்குகள் தற்போது சிதைக்கப்பட்டுள்ளதாலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திஸாநாயக்கவும் தமிழ் மக்களின் வாக்குகளை இலக்குவைத்து பிரசாரங்களை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2019 ஆம் தேர்தலில் வடக்கில் தமிழ் வாக்குகள் வீழ்ந்த போதிலும் தெற்கில் சிங்கள பௌத்த வாக்குகளால் மட்டுமே கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெற முடிந்தது. தெற்கில் பலமான இனவாத அலையை அமுல்படுத்தியதன் மூலம் அந்த வெற்றியைப் பெற்றார். அதன் ஊடாக அனைத்து சிங்கள பௌத்த வாக்குகளையும் கோட்டாபய ராஜபக்ச ஒரு கையில் எடுக்க முடிந்தது.
இதன்மூலம் தெற்கில் சிங்கள பௌத்த வாக்குகளை கோத்தா பெற்றுக்கொண்ட அதேவேளை, வடக்கில் பெரும்பான்மையான தமிழ் வாக்குகள் சஜித்துக்குப் பயன்படுத்தப்பட்டன. யாழ்ப்பாணத்தில் சஜித் 83 வீத வாக்குகளைப் பெற்ற நிலையில், கோட்டா 6 வீத வாக்குகளையும் அனுரகுமார திஸாநாயக்க 0.3 வீத வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கள பௌத்த வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டது போலவே தென்னிலங்கையில் இருந்த இனவாத அலை எதிர்ப்பால் அவர் ஆட்சி தரைமட்டமானது. தென்னிலங்கையில் மீண்டும் இவ்வாறானதொரு இனவாத அலை உருவாகும் சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் காணப்படவில்லை. அதனால் இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு – கிழக்கில் உள்ள தமிழ் வாக்குகளும், பெருந்தோட்டங்களில் உள்ள தமிழ் வாக்குகளுமே மிகவும் தீர்க்கமானதாக அமையுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இதன் பின்னணியிலேயே சஜித் பிரேமதாசவும் அனுரகுமார திசாநாயக்கவும் வடக்கு – கிழக்கு தமிழ் மக்களை இலக்கு வைத்து தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால்தான் இதனைப் புரிந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்துக் கட்சி மாநாடுகளைக் கூட்டி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கலந்துரையாடி, வடக்கிற்கான பயணத்தை முன்னெடுத்திருந்தார்.
இறுதியில் இந்தப் பின்னணியில் சக்வாலா நிகழ்ச்சியுடன் வடக்கிற்கான 5 நாள் பயணத்தை சஜித் பிரேமதாச முன்னெடுத்திருந்தார். இந்த வடக்குப் பயணத்தைப் பற்றி சஜித் இன்று நேற்றல்ல, கடந்த மே மாதத்துக்கு முன்னரே திட்டமிட்டதாக தெரிவிக்கப்பட்டது. அங்கு எந்தவித தயக்கமும் இன்றி 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த பாடுபடுவதாக தெரிவித்தார்.
இதன்போது அங்கு வடக்கு தலைவர்கள் அனைவரையும் சஜித் பிரேமதாச சந்திப்பதற்கு நடவடிக்கை எடுத்தமையை வடக்கின் ஊடகங்கள் மிக உயர்வாக செய்திகளை வெளியிட்டதால், தென்னிலங்கையில் எஞ்சியிருக்கும் அரசியல் கட்சிகள் கடும் கலக்கமடைந்து காணப்பட்டது. தென்னிலங்கையில் எந்த அரசியல் தலைவருக்கும் கிடைக்காத அங்கீகாரம் வடக்கின் கட்சிகளிடம் இருந்து சஜித்துக்கு கிடைத்ததையடுத்து தென்னிலங்கையின் சில தலைவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு தலைவர்களை சந்தித்த மறுநாள் அனுரகுமார திசாநாயக்கவும் சந்தித்திருந்தார். தனது லண்டன் விஜயத்தை புதன்கிழமை ஆரம்பிக்கவிருந்தமையினால், அதற்குத் தேவையான பின்னணியைத் தயாரிக்கும் நோக்கில் திடீரென யாழ்ப்பாணம் வந்து தமிழ்க் கூட்டமைப்பினரைச் சந்தித்ததாக அங்கு அறியமுடிந்தது. எதிர்வரும் 16ஆம் திகதி அநுரகுமார திசாநாயக்க லண்டனில் பல மாநாடுகளில் பங்கேற்று அங்கு புலம்பெயர் தமிழ் மக்களை சந்தித்து கலந்துரையாட திட்டமிட்டுள்ளார். சஜித்தின் யாழ்ப்பாண விஜயமும் அந்த விஜயத்தின் போது 13வது அரசியலமைப்புத் திருத்தம் அமுல்படுத்தப்படும் என சஜித்தின் பிரகடனமும், தமிழ்க் கூட்டமைப்பின் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல்களின் ஊடாக சஜித்தின் மீது தமிழர்கள் மத்தியில் பெரும் அபிமானத்தை ஏற்படுத்தியுள்ளதாக லண்டனில் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த புலம்பெயர்ந்தோர் அநுரகுமார திசாநாயக்கவுக்கு அறிவித்துள்ளனர்.
எனவே, சஜித் செய்ததைப் போன்று தமிழ் கூட்டமைப்புடன் எப்படியாவது கலந்துரையாடி அறிக்கை வெளியிடுமாறு லண்டனில் உள்ள நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் அனுரவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனால் திடீரென தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்களை அழைத்து அதற்கமைய சந்திப்பிற்கான சந்தர்ப்பத்தை கோரியிருந்ததாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.