“ரணில் – அனுர கூட்டு ஒப்பந்தம் வெளியானது“: லண்டனில் தேர்தல் திகதியை அறிவித்த ஜே.வி.பி – அதிகாரம் யார் வசம்?
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையிலான கூட்டு ஒப்பந்தம் வெளியாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
“தேர்தல் ஒக்டோபர் மாதம் 05,ஆம் திகதி நடைபெறும் என சுற்றுலாத்துறை மற்றும் காணி விவகாரங்கள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அண்மையில் தெரிவித்திருந்தார்.
தற்போது லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஒக்டோபர் மாதம் 05,ஆம் திகதி அங்கு தெரிவித்துள்ளார்.
இதிலிருந்து அரசாங்கத்தில் உள்ள ஹரினும், எதிர்க்கட்சியில் உள்ள அனுரவும் ரணில் விக்கிரமசிங்கவின் சீடர்கள் என்பது தெரியவருகிறது“ என நளின் பண்டார கூறியுள்ளார்.
தற்போது தேர்தல் நடைபெறுமா? இல்லையா? முதலில் எந்த தேர்தல், சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெறுமா? இவ்வாறு பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியிலும் தேர்தல் நிச்சயம் நடைபெறும் என்று கருத்துக்கள் மேலோங்கியே காணப்படுகின்றன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பக்கம் நிற்கும் சிலர் ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும் யோசனையை முன்வைத்துள்ளனர். ஆனால் ஜனாதிபதி தேர்தல் முதலில் நடைபெறும் என ஜனாதிபதியும் உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தீர்மானமெடுப்பதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நிலையில் பல்வேறு தரப்பினரும் ஜனாதிபதி தேர்தலுக்கு திகதி குறிக்கின்றனர்.
இதேவேளை, மியான்மார் மற்றும் ரஷ்யாவில் வாழும் இலங்கையர்களுக்காக உயிருக்காக போராடுபவர்களுக்காக ஒரு நிமிடமேனும் செலவிடாத அனுரகுமார திசாநாயக்க லண்டன், பாரிஸ், டோக்கியோ ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சி என்ற வகையில் குழுவொன்றை அனுப்பி மியான்மார் மற்றும் ரஷ்யாவில் போராடிக்கொண்டிருக்கும் எம்மவரை மீட்பதற்கு செயற்பட்டு வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.