இலக்கியச்சோலை

டாக்டர் ஓ.கே.குணநாதனின்…. “அமிர்தகழி மண்ணும் மட்டிக்கழி ஆறும்” …. நாவல் …. வெளியீடு!

கூத்துக்கலைஞர் ஓ . கணபதிப்பிள்ளை அகவை நூறு நிகழ்வாக எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் நடாத்திய குழந்தை எழுத்தாளர் டாக்டர் ஓ.கே.குணநாதனின் “ அமிர்தகழி மண்ணும் மட்டிக்கழி ஆறும் ‘ ( நாவல் ) வெளியீடு மட்டக்களப்பு அமிர்தகழி மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற போது செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் ஆற்றிய புத்தக விமர்சன உரை …

ஈழத்திலே தமிழ் நாவல் இலக்கியம் எழத்தொடங்கி சுமார் ஒன்றரை நூற்றாண்டுகளாகின்றன. ஆரம்பகாலத் தமிழ் நாவல்கள் வேற்றுமொழிப் படைப்புக்களைத் தழுவியதாகவும் கதைக்களங்கள் வேற்றுநாடுகளாகவும் இருந்ததை அவதானிக்க முடியும். மட்டக்களப்பில் எழுந்த முதல் நாவலான ‘அரங்கநாயகி’ யும் இதற்கு விதிவிலக்கல்ல. அதுவும் ஒரு தழுவல் நாவலே. மட்டக்களப்பு தாமரைக்கேணியைச் சேர்ந்த ஏரம்பமுதலி என்பவர் அதனை எழுதியிருந்தார். 1934இல் அது வெளிவந்தது. மட்டக்களப்பில் தமிழறிஞராக விளங்கிய சுவாமி சரவணமுத்து என்பவர் ‘கலாமதி’ என்ற நாவலை 1904 இல் எழுதியதாகத் தகவலொன்றிருந்தாலும் அது பற்றிய விபரமறிய முடியவில்லை.

இங்கே மட்டக்களப்பு என்று குறிப்பிடப்படுவது தற்போதைய அம்பாறை நிருவாக மாவட்டத்தையும் உள்ளடக்கி வடக்கே வெருகல் ஆற்றையும் தெற்கே குமுக்கன் ஆற்றையும் கிழக்கே வங்காள விரிகுடாக் கடலையும் மேற்கே ஊவாமலைக்குன்றுகளையும் எல்லைகளாகக் கொண்டு 1962 இற்கு முன்னர் விளங்கிய அப்போதைய மட்டக்களப்பு நிருவாக மாவட்டமாகும். இதனை மட்டக்களப்பு மாநிலம் என்றோ மட்டக்களப்புத் தமிழகம் என்றோ அழைக்கலாம்.

ஆரம்பகாலத்து நாவல்கள் தழுவல் நாவல்களாக அமைந்திருந்தாலும் பின்னாளில் ஈழத்து மண்ணைக் கதைக்களங்களாக்கியும் அந்த மண்ணின் மக்களைக் கதாமாந்தராக்கியும் நாவல்கள் புனையப்பட்டன. இத்தகைய நாவல்களை ‘மண்வாசனை நாவல்கள்’ என அழைக்கலாம்.

ஈழத்துத் தமிழ் நாவல்களைப் பொறுத்தவரை பிரதேச மண்வாசைன 1940 களிலிருந்தே வீசத்தொடங்கிற்று என்பதே “ஈழத்தும் தமிழ் நாவல் இலக்கியம்” எனும் நூலின் ஆசிரியர் நா.சுப்பிரமணியம் அவர்களின் கூற்றாகும். ஆனால் மட்டக்களப்பைப் பொறுத்தவரை அத்தகைய போக்கு 1970களின் பின்னர்தான் புறப்படத் தொடங்கியது.

அதற்கு 1970 களின் பின்னர்தான் மட்டக்களப்பில் பரந்த, விரிந்த, துரித உயர்கல்வித்துறைசார் வளர்ச்சி ஏற்பட்டதைப் பிரதான காரணமென நான் கருதுகிறேன். பல்கலைக்கழக அனுமதிக்கு அப்போதிருந்த அரசாங்கம் அறிமுகம் செய்த தரப்படுத்தல் இதற்குப் பங்களித்தது. இந்த உயர்கல்வித்துறைசார் வளர்ச்சி சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் பிரக்ஞையை ஏற்படுத்தி மட்டக்களப்பு மண்பற்றை ஊட்டிற்று. அந்த மண்பற்றுத்தான் படைப்பாளிகளிடமிருந்து மண்வாசனைப் படைப்புகள் வருவதற்கு ஊக்கியாக அமைந்தது.

அந்தவகையிலே மட்டக்களப்பின் மண்வாசனை நாவல்கள் என்ற வகைப்படுத்தலுக்குள் வெளிவந்தவையாக எஸ்.ஜோண்ராஜனின் ‘போடியார் மாப்பிள்ளை’ யும் வை.அஹ்மத் எழுதிய ‘புதிய தலைமுறைகள்’ எனும் நாவலையும் முன்வரிசையில் வைக்கலாம்.

‘போடியார் மாப்பிள்ளை’ மட்டக்களப்பின் படுவான்கரைப் பிரதேசங்களிலொன்றான கன்னன்குடாக் கிராமத்தைக் கதைக்களமாகக் கொண்டது. விவசாயம் செய்யும் போடிமாருக்கும், முல்லைக்காரர்களுக்கும் இடையேயுள்ள முரண்பாடுகளை ‘போடியார் மாப்பிள்ளை’ வெளிப்படுத்துகிறது.

‘புதிய தலைமுறைகள்’ நாவல் வாழைச்சேனைக் கிராமத்தைச் சேர்ந்த முதிய தலைமுறையினர்க்கும் இளைய தலைமுறையினர்க்கும் இடையில் உள்ளுர் அரசியல் தொடர்பாக ஏற்படும் போட்டியை அடித்தளமாகக் கொண்டது.

இந்த இரண்டு நாவல்களுமே 1976 இல் வெளிவந்தவை.

அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாநிலத்தைக் கதைக்களமாக்கிப் பல நாவல்கள் வெளிவந்தன.

அக்கரைப்பற்றைச் சேர்ந்த அ.ஸ.அப்துல்ஸமது எழுதிய ‘பனிமலர்’(1982), காத்தான்குடியைச் சேர்ந்த ஜூனைதாஷெரிப் எழுதிய ‘சாணைக்கூறை’ (1985), அக்கரைப்பற்றுக் கோளாவிலைச் சேர்ந்தவரும் லண்டனில் வசிப்பவருமான இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் ‘தில்லையாற்றங்கரை’ (1987) – அமிர்தகழி செ. குணரெத்தினத்தின் முதல் நாவலான ‘தெய்வதரிசனம்’ (1988) – திமிலைத்துமிலனின் ‘மஞ்சு நீ மழைமுகில் அல்ல’ (1988) – மட்டக்களப்புப் பிரதேசத்தின் ஆரையம்பதிக் கிராமத்தைக் களமாகக் கொண்டு அன்புமணி இரா.நாகலிங்கம் எழுதிய ‘ஒரு தந்தையின் கதை’ (1989) – ஆரையூர் நவம் எழுதிய ‘நிழல் மனிதன்’ () – கல்லாறு ரவிப்ரியாவின் ‘ஒரு வானவில் ரோஜாவாகிறது’ (1989) – கல்லடியைக் களமாக வைத்து சுமதி அற்புதராஜா படைத்த ‘புதிய பாதை’ குறுநாவல் (1990) – மண்டூர் அசோகாவின் ‘பாதைமாறிய பயணங்கள்’ (1992) – மட்டக்களப்பு அமிர்தகழி முகத்துவாரம் பகுதியினைக் களமாகக் கொண்டு ஓ.கே.குணநாதன் எழுதிய ‘ஊமை நெஞ்சின் சொந்தங்கள்’ (1992) – திமிலை மகாலிங்கம் எழுதிய ‘அவனுக்குத்தான் தெரியும்’ (1995) ஆ.மு.சி.வேலழகனின் ‘சில்லிக்கொடி ஆற்றங்கரை’ (2004) – விமல் குழந்தைவேலின் ‘வெள்ளாவி’

(2004) தீரன் ஆர்.எம்.நௌச}த் எழுதிய ‘நட்டுமை’ (2009) – எழுத்தாளர் ஊக்குவிப்புமையம் வெளியிட்ட பவளசுந்தரம்மாவின் ‘நினைவே நீ சுடாதே’ (2010) – மட்டக்களப்பு நகர்ப்புறத்தைக் கதைக்களமாக்கி பாண்டிருப்பைச் சேர்ந்த முகில்வண்ணன் சண்முகநாதன் எழுதிய ‘செல்லக்கிளி’ (2011) – செ.குணரெத்தினத்தின் ‘கடலோரக்காவியம்’ (2016) – ஜின்னா ஷரிபுத்தீனின் ‘முக்காழி’ (2019) -ஆர்.எம்.நௌசாத்தின் ‘வக்காத்துக்குளம்’ (2021) என அவற்றை வரிசைப்படுத்தலாம். இதில் இடம்பெறாத நாவல்களும் இருக்கலாம். அந்த நாவல்களின் ஆசிரியர்கள் என்னை மன்னித்துக் கொள்ளவேண்டும்.

இந்தப் பின்புலத்திலே மேற்கூறப்பெற்ற நாவல்களின் வரிசையிலே இன்று வெளியிடப்படுகின்ற டாக்டர்.ஏ.கே.குணநாதனின் ‘அமிர்தகழி மண்ணும் மட்டிக்கழி ஆறும்’ எனும் நூலின் வரவு இடம் பெறுகிறது.

மட்டக்களப்பு மண்வாசைன நாவல்கள் எனும்போது மட்டக்களப்பிலிருந்து மட்டக்களப்பைக் கதைக்களமாகக் கொண்டு வெளிவந்திருந்தாலும் மட்டக்களப்புப் பிரதேசப் பேச்சுவழக்கு கையாளப்படாத நாவல்களும் சில உண்டு.

சில நாவல்கள் கதாசிரியர் கதையைத் தன்கூற்றில் நடாத்திச் செல்லுமிடங்களில் எழுத்துத்தமிழும் அதாவது இலக்கணத் தமிழும் கதாமாந்தர்கள் சம்பாஷிக்கும் இடங்களில் பேச்சுத்தமிழும் இடம்பெறுமாறும் அமைந்துள்ளன.

ஆனால், ‘அமிர்தகழி மண்ணும் மட்டிக்கழி ஆறும்’ எனுமிவ் நாவல் இவற்றிலிருந்து வேறுபட்ட தனித்துவச் சிறப்புடையது. அது என்னவெனில் இந்நாவல் முழுவதுமே பேச்சுவழக்குத் தமிழில் எழுதப்பெற்றிருப்பதாகும். மண்ணின் கதையை மக்களின் மொழியிலேயே தருவது, இந்தியாவிலே தமிழ்நாட்டிலே கி.ராஜநாராயணனின் புனைவுகளையெல்லாம் கரிசல்காட்டு இலக்கியம் என்பார்கள்.அதற்குக்காரணம் அவர் தனது புனைவுகளை முழுக்க முழுக்க கரிசல்காட்டு;த் தமிழிலேயே அதாவது கதைமாந்தரின் பேச்சுவழக்குத் தமிழிலேயே படைத்திருந்தமையாகும்.

அத்தகையதொரு தனித்துவத்தை ஓ.கே.குணநாதனிடம் ‘அமிர்தகழி மண்ணும் மட்டிக்கழி ஆறும்’ எனும் நாவலின்மூலம் தரிசிக்கக் கிடைத்ததை முதலில் நான் கூறியாக வேண்டும்.

எடுத்த எடுப்பிலேயே நாவலின் தலைப்பிலேயும் நாவலின் முகப்பிலேயும் அமிர்தகழி மண்ணினதும் மட்டிக்கழி ஆற்றினதும் வாசனையை முகர முடிகின்றது.

இனி நாவலுக்குள் நனையலாம்

குஞ்சித்தம்பி என்கின்ற ஒற்றைக் கதாபாத்திரம்-அவன் சிறுவனா அல்லது இளைஞனா என்பதைப் அறுதியாகக் கூற முடியவில்லை. ஆனால் நாவலின் முடிவில் அவனுக்கு வயது வந்துவிட்டது என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது. அமிர்கழி வாசி. 2004 ஆம் ஆண்டு அடித்த ‘சுனாமி’க்குப் பிறகு குஞ்சித்தமபி தனது பால்ய வயதிலிருந்து தொடங்கி ஒரு பொறுப்பள்ள சிறுவனாக அல்லது இளைஞனாக வரும்வரைக்குமுள்ள தனது வாழ்க்கை அனுபவங்களை தனது மண்ணின் மொழியிலேயே அதாவது அந்த மண்ணின் மக்களின் மொழியிலேயே வெளிப்படுத்துகிறான். இதுதான் இப்படைப்பின் சாராம்சம்.

குஞ்சித்தம்பி தன் சுயபுராணம் பாடுகிறான் அல்லது தனது விருதாந்தத்தை விரித்துரைக்கின்றான் என்று எடுத்துக் கொள்ளலாம். தமிழிலே ‘விருத்தாந்தசித்திரம்’ எனுமொரு இலக்கிய வடிவம் இருக்கிறது. நடைச்சித்திரம் அல்ல. நடைச்சித்திரம் என்பது ஒருத்தரைப் பற்றி அந்த ஒருத்தர் வழமையாக மக்களின் மத்தியிலே நடமாடுகின்ற பைத்தியக்காரனாக – பிச்சைக்காரனாக – வியாபாரியாக – திருடனாக – கூலிவேலை செய்யும் உழைப்பாளியாக – பாம்பாட்டியாக – மரமேறியாக – மாடுமேய்ப்பவனாக – வைத்தியம் செய்பவனாக என்று எவராயுமிருக்கலாம். அவர்களைப் பற்றிய அவர்களது குணாம்சம்கள் பற்றிய – அவர்களது நடை உடைபாவனைகள் பற்றியதொரு எடுத்துரைப்பை ஓர் இலக்கிய நயத்தோடு இன்னொருவர் மேற்கொள்வதுதான் நடைச்சித்திரம். அந்த இன்னொருவர் படைப்பாளியாக இருப்பார்.

‘விருத்தாந்த சித்திரம்’ என்பது இதிலிருந்து சற்று வேறுபட்டது. ஒருவர் தன்னைப்பற்றித் தானே கூறுவது அதாவது தனது விருத்தாந்தத்தைத் தானே ஒப்புவிப்பதை ‘விருத்தாந்த சித்திரம்’ எனலாம்.

நான் அறிந்தவரை ‘விருத்தாந்த சித்திரம்’ எனுமிவ் இலக்கியத்தை ஈழத்து இலக்கியப் பரப்பில் முதலில் பரீட்சித்துப் பார்த்தவர் கவிஞர் நீலாவணனே. அம்மாச்சி ஆறுமுகம் எனும் புனைப் பெயரில் மறைந்துகொண்டு ‘வி.சி.மெம்பர் காசிநாதர்” – போடி மகள் பொன்னம்மா – ‘பசுநெய் விசுவலிங்கம்’ போன்ற விருத்தாந்தசித்திரங்களை 1965 களிலிருந்து தான் மரணிக்கும் 1975 வரை படைத்தார். நடைச்சித்திரத்தில் பிரதானமாக அங்கதச்சுவை இருப்பதுபோல விருத்தாந்தசித்திரத்திலும் அங்கதச்சுவை விரவியிருக்கும். சுவையோடு அல்லது சுவாரஷ்யமாகச் சொல்வதுதான் இவ்வகை இலக்கிய வடிவங்களின் அடிப்படை.

கவிஞர் நீலாவணன் எழுதிய விருத்தாந்தசித்திரங்களெல்லாம் சுமார் ஜந்தாறு பக்கங்களுக்;குள் ஆகக்கூடியது பத்துப் பக்கங்களுக்குள் அடங்கியவைவே.

ஓ.கே.குணநாதன் எழுதியுள்ள ‘அமிர்தகழி மண்ணும் மட்டிக்கழி ஆறும்’ எனுமிப் படைப்பைக் குஞ்சித்தம்பியின் விருந்தாந்தமாகத்தான் அதாவது விருத்தாந்தசித்திரமாகத்தான் நான் நோக்குகிறேன். ஆனால், இவ் விருந்தாந்தம் இந்நூலின் 12ஆம் பக்கத்திலிருந்து இறுதிப்பக்கமான 154ஆம் பக்கம் வரை விரிந்துள்ளதால் அதாவது 143 பக்கங்களுக்கு விரிந்துள்ளதால் ஒரு நாவலுக்குரிய தோற்றத்தைப் பெற்றுள்ளது. அதாவது இந்நூல் ஒரு நாவலுக்குரிய முரண்நகைகளுடன் கூடிய சிக்கல்களும் சிக்கல்களுக்கான தீர்வுகளும் நிறைந்த கதைப்பின்னல் ஒன்றைக் கொண்டிருக்காவிட்டாலும்கூட ஒரு நாவலுக்கான விரிவைக் கொண்டிருப்பதால் இது புனைவு இலக்கியத்தில் ஒ.கே.குணநாதன் கையாண்டுள்ள ஒரு புதிய உத்தி அல்லது பரீட்சார்த்தம் எனவும் கொள்ளலாம்.

இதனைக் கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தனது அணிந்துரையில் ‘ஈழத்துப் புனைகதை வரலாற்றில் ஒரு மைல்கல்’ என்றும் ‘மண்வாசைன வீசும் இப்படைப்பு ஈழத்து இலக்கிய உலகுக்குப் புதுவரவு’ என்றும் சற்று உயர்வு நவிற்சியுடன் சிலாகித்துள்ளார். இத்தகைய ஒரு எண்ணப்பாங்குடன்தான் எனக்கு அளிக்கப்பட்ட ‘புத்தக விமர்சனம்’ எனும் பணியை ஆற்றுவதற்கு நான் விழைகிறேன்.

“எண்ட பேரு குஞ்சித்தம்பி.

என்ன எல்லாரும் குஞ்சித்தம்பி … குஞ்சித்தம்பி … எண்டே சொல்லுவாங்க.

பெரியவங்க … சின்னவங்க … எல்லாருக்கும் நாங் குஞ்சித்தம்பிதான்.

என்ன ஊருக்க தெரியாதவங்களுமில்ல …

பழக்கமில்லாதவங்களும் இல்ல …

என்னோட மனிசங்க மட்டுமில்ல … வாய் பேசாப் புராணிகளும் அன்பாப் புளங்கும்.

எந்த நேரமும் ஒரு தடிய எடுத்துத்து … ஆட்டுக்குப் புறகாலயும்

மாட்டுக்குப் புறகாலயும் … த்தா … த்தா … எண்டு திரியிரதில சரியான புறியம்.

மனிசங்களோட கதய்க்குமாப் போல அதுகளோடயும் கதய்ப்பன்.

அதுகளும் நாங் கதய்க்கிறது விளங்குமாப் போல அதுகள்ற பாஷயில ஏதோ தலயாட்டிக் கதய்க்கும்.

எனக்கெண்டா சந்தோசம் பொத்துக் கொண்டு வரும்.

எனக்கு மேலுக்குச் சேட்டுப் போடுறதெண்டா கொல்லக் கொண்டு போற மாதிரி.

ஆனா … அம்மா அங்ஙண இங்ஙண சேட்டில்லாமத் திரிய உடமாட்டாவு.

குஞ்சித்தம்பி சேட்டப் போடுடா … சேட்டுப் போடுடா … எண்டு உசிர வேண்டிப் போடுவாவு.”

என்று குஞ்சித்தம்பி தன் விருத்தாந்தை ஆரம்பிக்கிறான்.

குஞ்சித் தம்பியினூடாக நூலாசிரியர் பயன்படுத்தியுள்ள குறிப்பாக அமிர்தகழி மண்ணினதும் பொதுவாக மட்டக்களப்பு மாநிலத்தினதும் இயல்பான பேச்சு மொழியோட்டமும் – மட்டக்களப்பு மாநிலத்திற்கு மட்டுமே உரித்தான தனித்துவமான மண்வாசனைச் சொற்களும் இப்படைப்புக்கு மகுடம்சூட்டி இந்நூலை எடுத்த எடுப்பிலேயே ஒரேயடியாகப் படித்து முடித்துவிடவேண்டுமென்ற ஆர்வத்தை – ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன.இது இந்நூலின் ‘பிளஸ் பொயின்ட்’ களிலொன்று.

உதாரணமாக : மட்டக்களப்புக்கே உரித்தான மண்வாசனைச் சொற்கள் சிலவற்றைச் சுட்டலாம்.

* எனக்கெண்டா ஒள்ளுப்பமும் புறியமில்ல – ‘ஒள்ளுப்பம்’

* பின் வளவுக்குள்ள போனனென்டா மயண்டப்பட்டாப் புறகுதான் வருவன் – ‘மயண்டப்படுதல்’

* வெள்ளாப்பிலேயே ஒழும்பிருவன் – ‘வெள்ளாப்பு’

* ஊரு சோக்கான இடத்திலதான் இருக்கு – ‘சோக்கு’

* அந்தகால வெங்கல குத்துவிளக்கு. தூக்கினாலும் தூக்கேலா. அண்டாப் பாரம் – ‘அண்டா’

இயல்பான பேச்சுமொழியோட்டத்திற்குச் சில உதாரணங்கள்.

* எனக்கு மேலுக்குச் சேட்டுப் பொடுறதெண்டா கொல்லக்கொண்டு போறமாதிரி

* கொண்டுபோய்ப் புடிபட்டா வாத்தியார் சூத்துத்தோல உரிச்சுப் போடுவார் எண்ட பயம்.

* எல்லாப் பாடத்திலயும் குண்டு

* சும்மா இருந்து நித்திர தூங்கி கிழங்குநெறுக்காம சோத்தத்திண்டுத்துப் போய்ப்படுடா எண்டு அம்மா சொல்லுவாவு.

* முழுக் கொட்டப்பாக்க வாய்க்க போட்டு பொடக்குப் பொடக்கெண்டு கடிப்பார்.

* அப்படியிருந்தும் ஒரு மாதிரியா அவர குழக்கடிச்சி ஒண்டிரண்டு நாள் அவரோட நண்டுக்கூடு பாக்கப் போயிருக்கன்.

கைத்தொழில் புரட்சி ஏற்படுத்திய விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புக்களாலும் – தகவல் தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சியினாலும் – ‘Globalisation’ என்று கூறப்படுகின்ற பூகோளமயமாக்களினாலும் கிராமங்களில் அருகிப் போய்விட்ட அல்லது இல்லாமற்போய்விட்ட பாரம்பரிய நடைமுறைகள் – பாரம்பரியத் தொழில்சார் நுட்பங்கள் – பண்பாட்டுக் கூறுகள் – விழுமியங்கள் – பாரம்பரிய உணவுப் பழக்க வழக்கங்கள் எல்லாமே குஞ்சித்தம்பியின் கூற்றாக இப்படைப்பு முழுவதிலும் பதிவேறியிருக்கிறது.

அமிர்தகழி மண்ணின் பாரம்பரிய வாழ்க்கைக் கோலங்களையும் பூகோளஅமைப்பையும் மட்டிக்கழி ஆறும் அதனோடொட்டிய இயற்கை சூழலையும் கட்புலக் காட்சிகளைப்போல் -‘கமரா’வில் படம் பிடித்ததுபோல எழுத்தில் வடித்திருக்கிறார் ஓ.கே.குணநாதன்.

சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்னர் இருந்த இயந்திர நாகரீகத்தால் கற்பழிந்துவிடாத – கன்னி கழியாத அமிர்தகழிக் கிராமத்தின் குமரியழகை இப்படைப்பின் ஊடாக ஆராதிக்க முடிகிறது.

இள வயதில் கொய்யா மரத்தில் ‘கெவர்’ வெட்டி பழைய சைக்கிள் ‘ரியூப்’பையும் கிழிந்து போன சப்பாத்தையும் பயன்படுத்தி ‘கெட்டப்போல்’ கட்டிக் குருவியடித்துத் திரிந்தது – குண்டுவிளையாட்டு – இலுக்குப்புல் காட்டுக்குள் கடியையும் சுணையையும் சகித்துக் கொண்டு ஒளித்துப் பிடித்து விளையாடியது – தனது தாயார் வளவுக்குள் பழுத்து விழும் நசிவித் தேங்காய்களைப் பொறுக்கி எண்ணெய் காய்ச்சி அப்பாவின் பழைய வெள்ளை வேட்டியில் துண்டு கிழிச்சி தொடையில் உருட்டி திரியாக்கிச் சாமி விளக்குக் கொளுத்தியமை – அப்பாவிடம் கெஞ்சிக்கேட்டு நண்டுக்கூடு போட்டு நண்டுபிடிக்கிறதையும், எலுகவச்சி பேத்தமணல் பிடிக்கிறதையும், கொத்துக் கட்டி இறால் பிடிக்கிறதையும் பார்க்கப் போனமை – வீட்டுக் கூரையின் மோட்டுக்குள் அணில் கூட்டுக்குள் குஞ்சுகளைப் பிடித்தமை – வாழைத் தண்டை வீட்டுப் படலைக்கு முன்னால் நட்டுக் கொட்டைத் தேங்காயை இரண்டாக உடைத்து ஒரு பாதியை அதில் வைத்து சீலைத் துண்டுகளை அதில் போட்டு எண்ணெய் ஊற்றிப் பற்றிவைத்த கார்த்திகை விளக்கீடு – சித்திரை வருஷ காலத்தில் பலகாரம் சுட்ட, ஊஞ்சல் கட்டி ஆடிய சம்பவங்கள் – பெட்டிக்கோடு மற்றும் அடிகுண்டு விளையாட்டு – தேர்தல்காலங்களில் நடந்த தமிழரசுக்கட்சியின் பிரசாரக் கூட்டம் அதில் இராசதுரையின் பேச்சு – இரவில் கண்விழித்து விளையாடும் தாயக்கட்டை – அந்நாட்களில் மட்டக்களப்பில் இருந்த இம்பிரியல், விசயா, ராஜேஸ்வராத் தியேட்டர்களில் திரைப்படங்கள் பார்த்தமை – வயிரவர் சடங்கு – மாரிகாலத்து மழைத்தண்ணீரில் காகிதக் கப்பல் விட்டு விளையாடியமை – வெம்புப் பிள்ளையார் கோயிலுக்கு முன்னால் இருக்கும் பள்ளத்தில் தண்ணீர் பிடித்து அதில் மீன்குஞ்சு பிடித்து விளையாடியமை – முகத்துவாரம் ஆற்றுவாய் வெட்டித் திறத்தல் – மட்டிக்கழி ஆற்றோரத்துக் கண்ணாகாடுகளுக்குள் கழித்தகாலங்கள் – மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவத்தின்போது போட்ட ஏலத்தில் ஒரு மாடும் கன்றும் தனது தந்தையார் வாங்கித் தந்தமை – அதனைப் பொறுப்போடு வளர்த்து பராமரித்துத் தான் சம்பாதிக்கத் தொடங்கியமை என்று தான் வீட்டில் பள்ளிக்கூடக் கல்வியைப் புறக்கணித்து விட்டேத்தியாகவும் விடுகாலியாகவும் இருந்து பின் வயதுக்கு வந்ததும் பொறுப்புள்ள இளைஞனாக மாறிய சம்பவங்களையெல்லாம் ஒரு சங்கிலிக் கோர்வைபோல குஞ்சித்தம்பி நினைவிடை தோய்தல்தான் இப்படைப்பின் உள்ளடக்கம். குஞ்சித்தம்பியின் விருந்தாந்தமே இந்நூலின் கதையோட்டமாகவுள்ளது.

மேலும், அமிர்தகழி மண்ணினதும் மட்டிக்கழி ஆற்றினதும் இயற்கைச் சூழல் வர்ணனைகள் வெறும் கற்பனைகளாக அல்லாமல் மிக இயல்பாக அமைந்துள்ளன. நூலாசியருக்கிருக்கும் இயற்கைச் சூழலைப் பேணவேண்டிய பிரக்ஞை இந்நூலில் ஆங்காங்கே ஊடுபாய்கிறது. இயற்கை நேசிப்பின் அவசியமும் அதனுள் அடங்கியிருக்கிறது.

‘மட்டிக்கழியாறு பாம்புபோல நெளிஞ்சி நெளிஞ்சுபோய் தீவுப்பாலத்துக்கீழாலபோய் மட்டக்களப்பு வாவியோட சேருது. அந்த வாவி அப்படியே போய் முகத்துவாரக் கடலுக்க உழுது’ என்ற வரிகளின் மூலம் பூகோள அமைப்பைப் புலப்படுத்துகிற போதும்,

இலுக்குக்காட்டுக்குள் இலுக்குக் குருத்தத் தின்னவரும் முயல்கள் – புல்லைத் தின்று அவை போட்ட எச்சமான வட்டவட்டப் புளுக்கைகள் – நண்டுக் கூட்டை நீரின் அடியிலிருந்து மெள்ள மெள்ள மேலே வந்ததும் கூட்டுக்குள் கிடக்கும் நண்டுகள் சடசடவென காலைப்போட்டு அடித்தல் – எலுக வச்சி இரவையில் மீன் பிடித்தல் – அமாவாசை இருட்டு நாளில் ஆற்றில் கொத்தடைச்சு வலைகட்டி இறால் பிடித்தல் – மாமரத்தில் பாய்ந்து பாய்ந்து திரியும் பூக்குடிச்சான் மற்றும் கொட்டப்பாக்கான் குருவிகள் – வைகாசி மாதங்களில் காகங்கள் சுள்ளிகளையும் கம்பித்துண்டுகளையும் தேடிப் பொறுக்கி வந்து மாமரத்துக் கொப்புகளில் கூடுகட்டுதல்-முற்றத்தில் நிற்கும் மாமரத்தில் இரவில் ஊமத்தங்கோழி மற்றும் பக்கிள் பறவைகள் வந்து ஒலியெழுப்புதல் – மட்டிக்கழி ஆற்றின் கண்ணாக்காட்டுக்குள் திரியும் பீ ஆமைகள், ஆற்றிலே நிறைந்துள்ள கச்சப்பொட்டியான், செல்வன் மற்றும் விரால் மீன்கள், கண்ணாமரங்களில் பாய்ந்து திரியும் பறவைகள், அவை பிடித்துத் தின்னும் ஒட்டறைப் பூச்சிகள், கிண்ணை மரங்களில் பழந்தின்ன வரும் குரங்குகள் – தில்லாங் கொடிகளில் படுத்துக் கிடக்கும் உடும்புகள், மட்டிக்கழி ஆறிற்குள் பாளி அடித்து பாளிக்குள் வாலை ஆட்டிப் படுத்துகிடக்கும் விரால் மீன்கள் என இவைகளை எழுத்தில் காட்சிபடுத்தும் போதும் தொலைக் காட்சியில் ‘Discovery channel’ பார்ப்பது போன்ற உணர்வை அளித்தது.

அருகிப்போன பல வீட்டுப் பாவனைப் பொருட்கள் இந்நூலில் ஆங்காங்கே எடுத்துச் சொல்லப்படுகிறபோது ஓர் அரும்பொருள் காட்சியகத்தில் நுழைந்துவிட்டோமோ என்றுகூட எண்ணத் தோன்றியது.

உதாரணம்

கெட்டப்பொல் – பச்சக்கல் அதாவது சூளையில் சுடாத செங்கல் – பெட்டகம் – சாக்குக்கட்டில் – கடுக்கன்தோடு – கயிற்றினால் செய்யப்பட்ட பாய்களை சுவரில் ஆணி அடித்துத் தொங்கவிடுகின்ற ‘அசவு’ – குத்தி – வட்டில் – சவரக்கால் – படிக்கம் – குப்பிலாம்பு – அரிக்கன்லாம்பு – கிராமபோன் பெட்டி – ‘பிலிப்ஸ்’ றேடியோ – தாயக்கட்டை – வக்கிக் கரத்த – கூடாரங்கட்டிய இரட்டை மாடு பூட்டிய கரத்தை – மான்’மார்க்’ குடை – திருநீற்றுக் குடுவை – ‘றங்கு’ப் பெட்டி.

இப்பொதெல்லாம் கிடுகு வேய்ந்த வீட்டுக் கூரைகளைக் காண்பது அரிது. அந்நாட்களில் ஊரவர்கள் கூடி கூரைவேய்ந்து கொடுக்கின்ற மரபு – அதனூடகப் பேணப்படுகின்ற கிராமத்து உறவு – வயிரவர் சடங்கு – செம்பில் தண்ணீர் ஓதிக் கொடுத்தல் – வீட்டுக்குக் காவல் பண்ணுதல் – குடுகுடுப்பைச் சாத்திரக்காரன் வரவு – பல்லுக் கொழுக்கட்டை, பலகாரங்கள் செய்தல் – வண்டு கட்டிய பானையில் புட்டு அவித்தல் – கோயிலில் பூக்கட்டிப் பார்த்தல் – உரிமட்டையில் நுளம்புக்கு விடிய விடிய புகை வைத்தல் – தைப்பொங்கல் மற்றும் பட்டிப்பொங்கல் கொண்டாட்டம் எனக் கிராமத்தின் பழக்க வழக்கங்களும் பண்பாட்டுக் கூறுகளும் இந்நூலில் நிறையப் பதிவாகியுள்ளன.

மட்டக்களப்பின் மண்வாசனை வீசும் சொல்லாடல்கள் பலவற்றை மேலதிகமாகவும் எடுத்துரைக்க எண்ணுகிறேன்.

* பொட்டகத்தத் தூக்கிறதெண்டாலே பெரிய கசிட்டம். கொள்ளப்பாரம்

* நண்டு கடிச்சுப்போடுமெண்டு எனக்கு பீச்சப்பயம்.

* நானும் அவருக்குப் புறகால. பறியத்தூக்கித்து அசுப்பில்லாமப் போவன்.

* அப்பாச்சிட இடுப்பில பறி இருக்கும்.

* நான் கரயில கடலாம்பு வெளிச்சத்தில கூடய வச்சித்து குந்தித்து பாத்துத்து இருப்பன்.

* மழ இல்லாத நேரத்தில ஊட்டுக்குள்ள மல்லாக்கப்படுத்துக்கிடந்து மோட்டப்பாத்தா ஓட்டய்க்கால வானத்தில ஆண்டார் தெரியும்.

* ஒரு தரக்காவோ ரெண்டு தரக்காவோ குஞ்சோட விழுந்திருக்கு.

* மாமரத்தில ஏறி ஒரு கெட்டுக்க வச்சிப்போட்டு வந்துத்தன்.

* கூரயப் பிரிச்சோனே ஊடு ஓவெண்டு வெறிச்சோடிப்போய்க் கிடக்கும்.

* சாப்பிட்டு முடிஞ்சோனே ஒருத்தரும் சுணங்கமாட்டாங்க.

* மூலமுறிச்சி வக்கடக்கம்பு போட்டு கூரவேஞ்சிமுடிய எப்புடியும் பின்னேரம் ரெண்டு மூண்டு மணியாப் போயிரும்.

* பயத்தம் பலகாரம்… எள்ளுப் பலகாரம்….. எண்ணப்பலகாரம்…. சோகி….. முறுக்கு…. அரியதரம்…. கொக்கிஸ் எண்டு ஒரு கொள்ளச் சாமான் செய்வாவு.

* மறுகா எல்லாஞ் சரியாப் போயிரும்.

* வெள்ளன சூரியன் வாறதுக்கு முன்னாடியே குருவிகள் எல்லாம் மாமரத்திற்கு வந்திரும்.

* ஆரும் கிட்டப்போற அசுப்பக்கண்டா கிசுக்கெண்டு பறந்திரும்.

* இப்படித்தான் ஒரு வெள்ளாப்புல எழும்பி வேலியில நிண்ட வேப்பமரத்தில குச்சியமுறிச்சிப் பல்லுத் தீட்டிதீட்டி மாமரத்துக்கு கீழ வந்தன்.

* அதால எங்கட வளவுக்கு இரண்டு கடப்பு.

* அதக் கொட்டுக்கடப்பு எண்டுதான் சொல்லுற.

* அதோட அப்பாச்சி அடிக்கடி தேக்கங்கொட்டய்களக் கொண்டு வந்து கிணத்துக்க போடுவார்.

* கிணத்தச் சுத்தி தட்டுவேலி கட்டியிருக்கும்

* மரத்தில ஏறி விளையாடுற சோட்டயில வெள்ளென எழும்பித்து றோட்டிக்கு ஓடிப்போய்ப் பாத்தன்.

* ரெண்டு றக்டர் பெட்டியக் கொண்டுவந்து ஒட்டிப்போட்டு அதில தென்னம்புறாளய வச்சுக் கட்டுவாங்க.

* கரத்த மட்டிக்கழியால கிறுகித்து வரும்.

* எனக்கெண்டாப் பீச்சப் பயந்தான்.

* மழ பாட்டம் பாட்டமாப் பெய்யும்

* விளையாடினா போதும் காலில சேத்துப்புழு கடிக்கத் தொடங்கிரும்.

* மாரிக்கு முன்னாடியே முகத்தவாரத்து ஆத்துவாய் அடச்சிரும்.

* ஒருத்தருக்கும் தெரியாம ஒருசிரட்டய்க்க நாலஞ்சி நாக்கிளியாம் புழுவய்யும் ஒரு களக்கம்பய்யும் எடுத்துத்து உழுவ புடிக்க தீவுப் பாலத்துக்கு போவன்.

* எங்கட ஊட்டுக்குப் பின்பக்கம் பள்ளக்கய்.

* காலுடஞ்சா நறுவிழியம் பட்ட வச்சிக்கட்டி கால ஒட்டவய்க்கிற.

* ஒரு சாங்கமா பயம் கலந்த சூழலாகவே கரஞ்சிது.

* ஒம்பதுநாளும் திமுதிமுதெண்டு சனத்தால நிறஞ்சி போயிருந்த கோவிலடி ஓஞ்சி போய்க் கிடந்திது.

* ஒரு சாமான அயத்துப்போய் உட்டுத்து வந்துட்டன் எண்டாவு.

* கடக்கரய்க்குப் பக்கத்தில் இருந்த தோணாவில நிறயப் புல்லுகிடந்திது.

நூலாசிரியர் ஓ.கே.குணநாதன் ஆங்காங்கே கையாண்டுள்ள உவமைச் சொற்றொடர்களும் நூலின் மொழியோட்டத்திற்கு அணி சேர்க்கின்றன.

உதாரணங்கள் சில.

* பொண்டுகளிட கழுத்தில மாலகிடக்குமாப்போல எப்ப பாத்தாலும் எண்ட கழுத்தில கெட்டப்பொல் ஒண்டு தொங்கோணும்.

* வாயெல்லாம் சிவத்து பல்லெல்லாம் வறுத்த கோப்பிக்கொட்டயபோல கறுத்துப் போய் கிடக்கும்.

* (கறுத்தக் கொழும்பான் மாமரம்) பேயப்போல சடச்சுப் போய்க் கிடந்திது.

* கால்ரெண்டும் கறுப்புச் சப்பாத்துப் போட்ட மாதிரி சுரி ஒட்டிப் போயிருக்கும்.

* (கூவாக் கோழியின் கால்கள்) ஒட்டகச்சிவிங்கி மாதிரி கால்கள் நீண்டு வளந்து போயிருக்கும்

* (மாடு) புள்ளமாதிரி சொல்லுக் கேட்டுத்து வந்துது.

* வயசிபோன பசுவ நான் ஒரு பாட்டியப் பாக்கிறாப்போல வச்சிப் பாக்கிறனான்.

* வத்திப் போன கடல் பனமர உசரத்துக்கு எழும்பி பென்னாம்பெரிய கறுப்புப் பாம்பு படமெடுத்தது போல சீறிப்பாஞ்சி வந்து கொண்டிருந்திது.

இந்த நூல் இரண்டு முக்கியமான செய்திகளைச் சொல்கிறது.

ஒன்று : வாழ்க்கைக்குத் தேவையான தொழில்சார்கல்வியின் அவசியம்.

மற்றது : இயற்கையைப் பேணிப் பாதுகாத்தல்.

சுனாமிக்குப் பின்னர், இந்நூலின் ஒற்றைக் கதாநாயகன் குஞசித்தம்பியின் கூற்றாகவரும் “ஒவ்வொருநாளும் அழிஞ்சி போன கண்டல் மரங்களுக்குப் பதிலா புதிசா கண்டல் மரங்கள நட்டன்” என்ற வரிகள் குறிப்பிடத்தக்கவை.

‘நத்தார் வெள்ளம்’ – ‘பிரசித்தம்’ – ‘சாய்ப்பூடு’ – ‘புறவூடு’ போன்ற சொற்றொடர்கள் கிராமத்தைக் கண்முன் கொண்டுவருகின்றன.

இந்த நூலின் (115) ஆம் பக்கத்தில் குஞ்சித்தம்பியின் அப்பாவின் பெயர் கணபதிப்பிள்ளை என வருகிறது. நூலாசிரியர் குணநாதனின் தந்தையின் பெயரும் கணபதிப்பிள்ளைதான். ஆதலால் குணநாதன்தான் குஞ்சித்தம்பி எனும் பாத்திர வார்ப்பினூடாகத் தனது இளமைக்காலத்தை – விருத்தாந்தத்தை விரித்துரைத்திருக்கிறாரோ என்ற ஊகமும் என் உள்ளத்தில் எழுந்தது என்பதையும் கூறாமல் விடுவது தர்மமல்ல. ‘இந்நூலின் பெரும்பகுதி என் குழந்தைப் பிராயத்தின் நினைவுகளை மீட்டி எழுதப்பட்டிருப்பதே’ என்று அவரே கூறியிருப்பதை இதற்கான ஒப்புதல் வாக்குமூலமாகக் கொள்ளலாம்.

இந்நூலின் பிறிதொரு பரிமாணமும் சிறப்பும் என்னவெனில் இதன் மொழிநடை. பூக்களை அள்ளி அடர்த்தியாகக் கோர்த்த மாலைபோல அல்லாமல் ஒவ்வொரு பூக்களாகத் தனித்தனியே எடுத்து ஒற்றைப் பூக்களால் தொடுக்கப்பட்ட மல்லிகைச்சரம்போல ஒரு நேர்கோட்டிலே அமைந்து வாசிப்பை எளிமைப்படுத்தி வாசகனை ஈர்க்கவும் செய்கிறது. இந்நூலின் கதையோட்டம் முரண்களும் மோதலும் அற்றதாய் நேர்கோட்டில் – “Linear” ஆகத் தொடுக்கப்பட்டுள்ளது.

‘இயற்கையோடிணைந்த விருப்பத்திற்குரிய அனுபவக் கல்வி மூலம் ஒருவர் உயர்நிலையை அடையலாம் என்பதை இந்நாவல் வலியுறுத்துகிறது’ எனும் கலாநிதி தமிழ்மணி அகளங்கனின் கூற்றை நான் வழிமொழிகிறேன்.

பள்ளிக்கூடக் கல்வி ஏறாமல் விடுகாலியாகத் திரியும் குஞ்சித்தம்பி தன் பெற்றோரின் வழிகாட்டுதலினாலும் தனது வாழ்க்கை அனுபவங்களினாலும் ஒரு பொறுப்புள்ள பிரஜையாக மாறுவதை இந்நூல் படம் பிடிக்கிறது.

மொத்தத்தில் இந்நூலைப் படித்து முடித்தபோது அமிர்தகழி மண்ணில் புரண்டு மட்டிக்கழி ஆற்றில் மூழ்கி எழுந்தது போன்ற உணர்வுதான் உன்னி எழுந்தது. இதுவே இப்படைப்பின் வெற்றி.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.