ஐ.நா. மனித உரிமை அமைப்பு ஊழியர்கள் உள்பட 9 பேரை கைது செய்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்
“சனா,இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், செங்கடலில் பயணிக்கும் இஸ்ரேல் ஆதரவு நாடுகளின் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள்.
இதற்கு பதிலடியாக ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் முகாம்களை குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு பொருளாதார ரீதியாக அழுத்தம் கொடுக்கும் வகையில் அவர்களின் வருவாய் ஆதாரங்களை அமெரிக்க அரசு தடை செய்துள்ளது.
மேலும் ஏமன் அரசுக்கு 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார உதவிகளையும் அமெரிக்கா செய்துள்ளது. இந்த நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பைச் சேர்ந்த ஊழியர்கள் உள்பட 9 பேரை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரும் அங்குள்ள நிவாரண குழுக்களைச் சேர்ந்த ஊழியர்கள் என்று கூறப்படுகிறது.
இந்த கைது நடவடிக்கைக்கான காரணம் வெளியாகவில்லை. மேலும் இது குறித்து ஐ.நா. தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. “,