போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் விவசாயக் காணிகளை கையளிக்கவும்
வடக்குக் கிழக்கில் உள்ள பல காணிகள் பாதுகாப்பு வனப்பகுதியாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
பாரம்பரிய விவசாய காணிகள் மீண்டும் விவசாயிகளிடம் கையளிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ள நிலையில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் காணிகளை அரசாங்கம் பெற்றுள்ளதாக சஜித் குற்றம் சுமத்தியுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்வின் வாக்குறுதிகள் பேச்சளவில் மாத்திரமே இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தபோது உண்மையைத் தான் உணர்ந்து கொண்டதாகவும் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை வடக்கு கிழக்கு காணி விவகாரம் தொடர்பில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு சுட்டிக்காட்டினார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போர் நிறைவடைந்த 15 ஆண்டுகளின் பின்னரும் அந்தப் பகுதி மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு மாகாண எல்லைக் கிராமங்களுக்குப் பயணம் செய்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தாகவும் கூறியுள்ள சஜித் வர்த்தமானி அறிவித்தல் மூலம் மக்களின் காணிகள் பறிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக அறிந்துகொண்டதாகக் கூறினார்.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் இப் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வு காண வேண்டும். விவசாய நிலங்கள் மீளவும் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்றும் சஜித் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.