நேரடி விவாதம் – சஜித் பங்கேற்பை உறுதிப்படுத்த வேண்டும்; ஜேவிபி அதிகாரபூர்வமாக அறிவிப்பு
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இருவருக்கும் இடையில் இன்று (06) விவாதம் இடம்பெறவுள்ளது.
இந்த விவாதத்தில் கலந்துக் கொள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தயாராக இருப்பதாக அக்கட்சி மூலம் சுயாதீன தொலைக்காட்சி சேவை (ITN) க்கு நேற்று (05) அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சஜித் பிரேமதாச மற்றும் அனுர குமார திசாநாயக்க இருவருக்கும் இடையே இடம்பெறவுள்ள தொலைக்காட்சி விவாதத்தை நேரடியாக ஒளிபரப்புவதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தரத் தயார் என சுயாதீன தொலைக்காட்சி சேவை (ITN) இன் தலைவர் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன ஜூன் 04 ஆம் திகதி இரு தரப்பினருக்கும் எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்தார்.
அதன்படி, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இந்த விவாதத்தில் கலந்து கொள்வார் என அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ ITN க்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிற்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான விவாதத்தை இலகுவாக்க முன்வந்த ITN தொலைக்காட்சிக்கு நளிந்த ஜயதிஸ்ஸ நன்றி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இது சாதாரண தொலைக்காட்சி உரையாடல் அல்ல, ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட விவாதம் என்பதால், சஜித் பிரேமதாச இதில் பங்கேற்பாரா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
எனவே குறித்த திகதியில் கலந்து கொள்வதாக சஜித் பிரேமதாச தெரிவித்தாரா என்பதை விரைவில் எமக்கு அறிவிக்குமாறும் நளிந்த ஜயதிஸ்ஸ ITN தலைவருக்கு கடிதம் மூலம் நேற்று (05) அறிவித்துள்ளார்.
சுயாதீன தொலைக்காட்சி சேவை (ITN) ஜூன் 06ஆம் திகதியன்று இரவு 10.00 மணி முதல் தனது ஊடக நிறுவனத்திற்குச் சொந்தமான HD கலையகத்தில் விவாதத்தை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்துள்ளதாகவும் இந்த நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்புமாறு பல இலத்திரனியல் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி சுதர்சன் குணவர்தன தெரிவித்துள்ளார்.
சுயாதீன தொலைக்காட்சி சேவை (ITN) என்பது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கக் கூடிய மற்றுமொரு தொலைக்காட்சி சேவை என்பது குறிப்பிடத்தக்கது.