மாலத்தீவு செல்வதைத் தவிா்க்க வேண்டும் குடிமக்களுக்கு இஸ்ரேல் வலியுறுத்தல்
இஸ்ரேலியா்கள் மாலத்தீவுக்கு சுற்றுலா உள்ளிட்ட பயணங்களை மேற்கொள்வதைத் தவிா்க்க வேண்டும் என்று இஸ்ரேல் அரசு அறிவித்தது.
இஸ்ரேல் பாஸ்போா்ட் (கடவுச் சீட்டு) வைத்திருப்பவா்கள் தங்கள் நாட்டுக்கு வர தடைவிதித்து சட்டத் திருத்தம் மேற்கொள்ள மாலத்தீவு அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதையடுத்து இஸ்ரேல் இவ்வாறு கூறியுள்ளது.
காஸா மீது இஸ்ரேல் நடத்தும் தொடா் தாக்குதலுக்கு எதிரிவினையாற்றும் வகையில் அந்நாட்டவா்கள் தங்கள் நாட்டுக்கு வர தடைவிதிக்க இஸ்லாமிய நாடான மாலத்தீவு முடிவு செய்தது.
இதையடுத்து, இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், ‘இஸ்ரேல் மற்றும் வேறு நாட்டுக் கடவுச் சீட்டை வைத்திருக்கும் நமது குடிமக்கள், மாலத்தீவுக்குச் செல்வதை முற்றிலுமாகத் தவிா்க்க வேண்டும். அந்நாட்டில் தங்கியுள்ள இஸ்ரேலியா்களும் கூடிய விரைவில் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும். ஏனெனில், அங்கு ஏதாவது
அசம்பாவிதம் நிகழ்ந்தால், அவா்களுக்கு உதவுவதில் இஸ்ரேல் அரசுக்கு சிரமம் ஏற்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.
காஸா போரால் மாலத்தீவில் இஸ்ரேலியா்கள் மீதான வன்மம் அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டி அந்நாட்டுக்கு செல்லும் இஸ்ரேலியா்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று கடந்த டிசம்பா் மாதம் இஸ்ரேல் அறிவித்திருந்தது. இப்போது,
அந்நாட்டுக்குச் செல்வதை முற்றிலும் தவிா்க்குமாறு கூறியுள்ளது.
‘மாலத்தீவுக்கு பதிலாக இந்தியாவுக்கு சுற்றுலா’
இஸ்ரேலியா்கள் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை தவிா்த்து விட்டு இந்தியாவின் லட்சத்தீவுகள், கோவா, கேரளம் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளுக்கு சுற்றுலா வர வேண்டும் என்று தில்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பெரும்பாலும் சுற்றுலா வருவாயை நம்பி இருக்கும் மாலத்தீவுக்கு ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோா் போ் சுற்றுலா வருகின்றனா். இதில் இஸ்ரேலியா்கள் 15,000-க்கு மேல் உள்ளனா்.
இந்தியாவுடன் மோதல்போக்கை மேற்கொண்டதால், இந்தியா சுற்றுலா பயணிகள் மாலத்தீவுக்கு செல்வது குறைந்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேலிய பயணிகளையும் அந்நாடு இழந்துள்ளது.
இது தொடா்பாக தில்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இஸ்ரேலியா்களை வரவேற்க மாலத்தீவு தயாராக இல்லை என்றால், இந்தியாவில் உள்ள எழில்மிகு சுற்றுலா தளங்களுக்கு இஸ்ரேலியா்கள் வருகை தரலாம். இங்கு லட்சத்தீவுகள், கோவா, கேரளம் என சிறப்பான கடற்கரைகளும், அன்பான உபசரிப்பும்
உள்ளது. இங்கு பரிந்துரைக்கப்பட்ட இடங்களுக்கு இஸ்ரேலிய தூதரக அதிகாரிகள் நேரில் சென்று வந்துள்ளனா்’ என்று கூறப்பட்டுள்ளது.