ராஜிதவை ஏமாற்றிய சஜித்தின் 25 எம்.பி.க்கள்
ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் விசேட அறிக்கையொன்றினை விடுத்து இன்று செவ்வாய்க்கிழமை அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவுள்ளதால் அரசியல் அரங்கில் எதிர்வரும் நாட்களில் பல்வேறு சர்ச்சைகள் நிகழுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தனவின் அழைப்பின் பேரில் கடந்த மாதம் ஏரான் விக்ரமரத்னவின் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ராஜித சேனாரத்ன மற்றும் அஜித் மன்னப்பெரும ஆகிய இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் இணைவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட நிலையில் அதனை ஹர்ஷ டி சில்வா, கபீர் ஹாசிம் மற்றும் எரான் விக்ரமரத்ன ஆகிய மூவரும் கடுமையாக மறுத்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை ராஜித சேனாரத்னவுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. இங்கு இடம்பெற்ற கலந்துரையாடலில் ராஜித சேனாரத்ன விசேட அறிக்கையொன்றை விடுத்து இன்று 4ஆம் திகதி அரசாங்கத்துடன் இணைவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த சுமார் 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தன்னுடன் அரசாங்கத்தில் இணைந்து கொள்வதாக பல்வேறு கலந்துரையாடல்களில் தெரிவித்திருந்த ராஜித சேனாரத்ன, அந்த முயற்சி வெற்றியளிக்காமையால் தற்போது அந்நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜனாதிபதியுடனான சந்திப்பில் அரசாங்கத்திற்கு கொண்டுவருவதாக கூறிய 25 ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களையும் எதிர்வரும் 4ஆம் திகதி அரசாங்கத்திற்கு வருவதற்கு ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஆனால் தற்போது தன்னிடம் அவ்வாறானதொரு குழு இல்லை எனவும் மேலும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தன்னுடன் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள தயாராக இருப்பதாகவும் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன மற்றும் அஜித் மன்னப்பெரும ஆகிய இருவர் தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியிருக்கலாம் என கூறப்படுகின்றது. ஆனால் ராஜிதவுடன் இணைந்து அரசாங்கத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என கருத்து தெரிவித்த அஜித் மன்னப்பெரும அல்லது காவிந்த ஜயவர்தன ஆகியோர் தற்போது அரசாங்கத்தில் இணைவார்களா என்பது பாரிய சிக்கலை தோற்றுவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்துடன் ராஜித சேனாரத்ன இணைந்துகொள்வது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் ராஜிதவின் அரசியல் வரலாற்றில் இவ்வாறான சம்பவங்கள் நிறைந்துள்ளதாகவும் அதன் காரணமாகவே தற்போது மக்கள் மத்தியில் தோற்றுப்போகும் அரசியல்வாதியாக மாறியுள்ளதாகவும் ராஜிதவை நிறுத்த முயற்சிக்கவேண்டாம் எனவும் சஜித் பிரேமதாசவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.