இலங்கை

மனித கடத்தலின் பின்னணியில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்?

இலங்கையில் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் உள்ளிட்ட சுமார் 1000 இலங்கையர்கள் ரஷ்ய இராணுவத்துடன் இணைந்து உக்ரைனுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர்.

அதில் அநேகமானோர் உயிரிழந்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன, எனினும் இவ்வாறு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தற்போது வரையில் காணாமல் போன மற்றும் விபத்துக்குள்ளாகியவர்கள் தொடர்பில் 411 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மனித கடத்தலின் பின்னணியில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்?

இந்நிலையில், ரஷ்யாவில் மனித கடத்தலுக்கு பிரதான சூத்திரதாரியாக செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் சதுரங்க இலங்கையில் இருந்து தப்பியோடிய அதே நாளில் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தலைமையிலான தூதுக்குழுவும் ரஷ்யாவிற்கு விஜயம் செய்திருந்த நிலையில் குறித்த குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவும் அங்கம் வகிப்பதாக தெரியவந்துள்ளது.

Zoom கூட்டங்கள் மூலம் ரஷ்யாவிற்கு ,இராணுவ வீரர்களை ஆட்சேர்ப்பு செய்யும் போது, ​​சதுரங்க தன்னை நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் செயலாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டதாக ரஷ்யாவில் நடைபெற்று வரும் போரில் இருந்து தப்பித்து இலங்கைக்கு முதலில் மீண்டு வந்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர் மனோஜ் விக்ரமரத்ன தெரிவித்தார்.

ரஷ்யாவில் இருந்து தப்பிய முதல் இராணுவ வீரர்

மனோஜ் விக்ரமரத்ன ரஷ்ய இராணுவப் படையில் இணைந்துக் கொண்டமை தொடர்பில் யூடியூப் நேர்காணல் ஒன்றில் கலந்து உரையாற்றியிருந்தார்.

சிறப்பு இராணுவப் படையின் கமாண்டோவாக இருந்து ஓய்வு பெற்றதன் பின்னர் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக ரஷ்ய ராணுவத்தில் இணைந்ததாக தெரிவித்தார்.

குறிப்பாக பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, குழந்தைகளின் கல்விச் செலவுக்கும், வாழ்க்கை நடத்துவதற்கும் ஓய்வூதியம் போதுமானதாக இல்லை என அவர் தெரிவித்தார்.

ரஷ்யாவிலிருந்து தப்பி இலங்கைக்கு வருகைத் தந்த பின்னர் தன் மீது எழுந்த உயிர் அச்சுறுத்தல்களை பொருட்படுத்தாமல் வழங்கிய வாக்குமூலம் மற்றும் ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்திய விடயங்களால் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உள்ளிட்ட குழுவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

ஆறு நாட்கள் நடந்து எல்லை தாண்டினேன்

தன்னுடைய கடவுச்சீட்டு கூட இன்றி, மொழி கூட தெரியாமல் டொனெட்ஸ்க் நகரில் உக்ரைன் எல்லையைத் தாண்டி சுமார் ஆறு நாட்கள் ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்து சென்று மாஸ்கோ நகரை அடைந்ததை மனோஜ் விக்ரமரத்ன குறித்த நேர்காணலின் போது நினைவுகூரினார்.

மேலும் பேசிய அவர்,

‘எனது குழுவில் என்னுடன் இருந்த ஏனைய 10 பேர் தொடர்பில் கடந்த மார்ச் மாதம் 12ஆம் திகதியின் பின்னர் எந்தவித தகவலும் அவர்களது குடும்பத்தினருக்கு கிடைக்கவில்லை.

ரஷ்யா போன்ற நாடுகள் எதிர்காலத்தை நன்று கணித்து செயல்படக் கூடியவர்கள்.

இவ்வாறு கூலிப்படைகளை இணைத்துக்கொள்வதால் அவர்களது இராணுவப் படைகளின் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதே ரஷ்யாவின் ஒரே நோக்கமாகக் காணப்பகிறது.

நாங்கள் ஒரு போதும் கண்டிறாத போர் நுட்பங்களே அங்கு காணப்பட்டன. அவ்வாறனதொரு அனுபவத்தைப் பெற்று மீள நாடு திரும்பியது எனக்கு மிக மகிழ்ச்சி.” என தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.