ரணிலுடன் இணையவுள்ளதா சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் தலைமையிலான அரசாங்கத்துடன் இணையப்போவதாக வெளியாகும் செய்திகள் முற்றுலுமாக பொய்யானது என கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
அரசியல் இலாபங்களை ஈட்டும் நோக்கில் சில அரசியல் கட்சிகள் இதுபோன்ற வதந்திகளை பரப்பி வருவதாக அவர் தெரிவித்தார்.
நாமலின் கருத்து
அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் 20 உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்தால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்குமா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இவ்வாறு பதிலளித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து 20 உறுப்பினர்கள் இணைந்தால் ஆதரவளிப்போம் என்பதைவிடவுட் கொள்கை ரீதியிலான விடயங்களுக்கே முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் நாம் இன்னும் கலந்துரையாடலில் ஈடுபட வேண்டிய தேவை உள்ளது.
நாங்கள் நபர்களை வைத்து அல்ல. கொள்கைகளை வைத்தே யாருக்கு ஆதரவு தெரிவிப்போம் என்பதை தீர்மானிப்போம்.
ஆகவே, கொள்கை ரீதியிலான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடி வருகிறோம் ஏனைய காரணங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் கலந்துரையாடுவோம்.
எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து சிலர் அரசாங்கத்துடன் இணையப் போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் கூறி வந்தது, ஆகவே அவர்கள் அது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் ஒன்றை மேற்கொள்வார்கள் என நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.
நளிந்த ஜயதிஸ்ஸ
தேசிய மக்கள் சக்தி கட்சியின் செயற்குழு உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் குழுவொன்று அரசாங்கத்துடன் இணைவது தொடர்பான செய்திகள் குறித்து கருத்து வெளியிட்டார்.
‘சஜித் பற்றி தெரியாதவர்கள் அவர்களுடன் அப்போது இணைந்தார்கள். தற்போது தேர்தல் நெருங்கும் போது அவருடைய எண்ணங்களில் வெற்றிடம் இருப்பதை புரிந்து விட்டார்கள்.
தற்போது இருக்கும் தலைவருடன் இருக்க முடியாது என பலரும் உணர்ந்து வருகின்றனர்.
மக்கள் கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க அவர்களால் தீர்மானம் மேற்கொள்ள முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.‘ என தெரிவித்தார்.
எவ்வாறாயினும், தற்போது ஐக்கிய மக்கள் சக்திக்கு அதிகளவு மக்கள் பலம் இருப்பதாக சுயாதீன கணக்கெடுப்புகளில் தெரியவந்துள்ளது.