கட்டுரைகள்
இந்தோனேசியா புதிய அதிபர் பிரபோவோ : கிழக்கு திமோரில் மனித உரிமை மீறிய ஜெனரல்! …. ஐங்கரன் விக்கினேஸ்வரா.
( ஜகார்த்தாவில் பல மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும், கிழக்கு திமோரில் போர்க்குற்றம் சாட்டப்பட்டமையாலும் அமெரிக்கா, அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டவரே தற்போது இந்தோனேசியா புதிய அதிபராக தேர்தலில் வென்றுள்ளார்)
1998 இல் இந்தோனேசிய இராணுவத்திலிருந்து முன்னாள் ஜெனரல் பிரபோவோ சுபியாண்டோ வெளியேற்றப்பட்டதன் பின்னர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் கூறி அமெரிக்கா, அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டார்.
சுஹார்டோ ஆட்சியின் இருண்ட நாட்களில் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் இராணுவ ஜெனரல், நவீன கால ஜனநாயக வாக்கெடுப்பில் தற்போது பாரிய வெற்றி பெற்றுள்ளார்.
அவர் யாருமல்ல, இன்றைய இந்தோனேசிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபோவோ சுபியாண்டோ, ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரலும் ஆவார். இவர் 2019 முதல் இந்தோனேசிய பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றிய பிரபோவோ சுபியாண்டோ மறைந்த ஜனாதிபதி சுஹார்ட்டோவின் இரண்டாவது மகள் டிட்டிக் சுஹார்டோவின் கணவனுமாவார்.
உலகின் மூன்றாவது மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தோனேசியாவில் கடந்த பெப்ரவரி 14, 2024 அன்று பொதுத் தேர்தல்
நடைபெற்றது.
மும்முனை போட்டி நிலவிய தேர்தல்:
இந்தோனேசியா மக்கள் தொகை கூடிய நாடுகளில் நான்காவது இடத்தில் உள்ளது. உலகில் மிக அதிகமான முஸ்லிம் மக்களைக் கொண்ட நாடாகும். இந்த நாட்டில் 275 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.
இந்தோனேசியாவின் 17,000 தீவுகளில்,
சுமார் 205 மில்லியன் மக்கள் கடந்த அதிபர் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இத்தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு
அமைச்சர் பிரபோவோ சுபியாண்டோ (Prabowo Subianto), முன்னாள் ஆளுநர்கள் அனிஸ் பஸ்வேடான் (Anies Baswedan), கன்ஜார் பிரனோவோ (Ganjar Pranowo) ஆகியோருக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவியது.
இறுதிக்கட்ட முடிவுகளின்படி, இந்தோனேசிய அதிபர் தேர்தலில் பிரபோவோ சுபியாண்டோ வெற்றி பெற்றார். இறுதிக் கட்ட வாக்கெடுப்பில் அவர் 59.77 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைய அமைப்பு தெரிவித்தது.
தேர்தல் வெற்றியின் பின்னர், தலைநகர் ஜகார்த்தாவில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய பிரபோவோ, தனது வெற்றி அனைத்து இந்தோனேசியர்களின் வெற்றியாகும் என்றார்.
இந்தத் தேர்தலில் புதிய குடியரசுத் தலைவர் மற்றும் துணைத் தலைவரை மக்கள் தீர்மானித்தனர். அத்துடன் மக்கள் மன்றத்தின் (MPR), பிரதிநிதிகள் சபை (DPR) மற்றும் மாவட்ட சபை ஆகியவற்றைக் கொண்டிருக்கும் பிரதிநிதிகள் (DPD) கூடுதலாக, வாக்காளர்கள் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர்களையும் தேர்ந்தெடுத்தனர்.
தென்கிழக்கு ஆசிய நாடுகள் கழகத்தின் தொடக்க உறுப்பு நாடான இந்தோனேசியா, குழு-20 முக்கிய பொருளாதாரங்கள் (G20) அமைப்பின் உறுப்பு நாடாகவும் உள்ளது. இந்தோனேசியப் பொருளாதாரம், மொத்த உள்நாட்டு உற்பத்தி, அடிப்படையில் உலகின் 17-ஆவது இடத்திலும், வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் 15-ஆவது இடத்திலும் உள்ளது.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றத்தையும், அதிபரையும் கொண்ட ஒரு குடியரசு. ஜகார்த்தா பெருநகரம் இந்த நாட்டின் தலைநகரம். பப்புவா நியூ கினி, கிழக்குத் திமோர், மலேசியா ஆகிய நாடுகள் இந்த நாட்டின் எல்லைகளில் உள்ளன. சிங்கப்பூர், பிலிப்பீன்சு, ஆத்திரேலியா ஆகிய நாடுகளும், இந்தியாவின் ஆட்சிக்கு உட்பட்ட அந்தமான் நிக்கோபார் தீவுகளும் இந்தோனேசியாவுக்கு அருகில் உள்ளன.
ஆயினும் அங்கே வெவ்வேறு மத மற்றும் இனக்குழுக்களுக்கு இடையேயான உறவுகள் பெரும்பாலும் இணக்கமற்று இருப்பதாலும், கடுமையான குறுங்குழுவாத அதிருப்தியும் வன்முறையும் பல பகுதிகளில் பிரச்சினைகளாகவே இருக்கின்றன.
ஆசிய பொருளாதார நெருக்கடி:
ஆயினும் பொருளாதார ரீதியில் வலுவான இந்தோனேசியா ஓப்பெக் அமைப்பில் 1962 ஆம் ஆண்டு இணைந்தது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய இயற்கை எரிவாயு வளம் சுமாத்திராவின் வடக்கில் அச்சே பகுதியில் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. மசகு எண்ணெய் ஏற்றமதியாளர் என்ற நிலையிலிருந்து இறக்குமதியாளர் என்ற நிலைக்கு வந்ததால் மே 2008 இல் இவ்வமைப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தது. செப்டம்பர் 2008 இல் இந்தோனேசியாவின் விலகலை ஓப்பெக் உறுதிசெய்தது.
இந்தோனேசியாவில் மசகு எண்ணெய், இயற்கை எரிவளி, செப்பு, வெள்ளீயம் போன்ற இயற்கை வளங்கள் அதிகமுள்ளன. 1997-98 காலப்பகுதியில் நிகழ்ந்த ஆசிய பொருளாதார நெருக்கடியில் இந்தோனேசியா கடுமையாக பாதிக்கப்பட்டது. பெருமளவிலான மூலதனம் நாட்டை விட்டு எதிர்பாராமல் வெளியேறியதால் இந்தோனேசிய நாணயம் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இப்பொருளாதார நெருக்கடி அரசியலிலும் எதிரொலித்ததால் 1998 இல் நாட்டின் அதிபர் சுகர்த்தோ பதவி விலகினார்.
போர் குற்றம் சாட்டப்பட்ட புதிய அதிபர்:
பத்து வாரங்கள் நீடித்த தேர்தல் பிரசார முடிவில் புதிய இந்தோனேசிய ஜனாதிபதி தேர்தலில் பாதுகாப்பு அமைச்சர் பிரபோவோ சுபியாண்டோ வெற்றியீட்டினார்.
அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட 72 வயதான முன்னாள் சிறப்புப் படை தளபதி சுபியாண்டோ சுமார் 59 வீதமான வாக்குகளை வென்றிருப்பதாக தேர்தல் முடிவுகள் காட்டின. அவரின் போட்டியாளர்களான அனீஸ் பெஸ்வடன் மற்றும் கன்ஜர் பிரனோவோ ஆகியோர் முறையே 25 மற்றும் 17 வீத வாக்குகளையே வென்றுள்ளனர்.
இதற்கு முன் இரு முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்த சுபியாண்டோ, நிகழ்கால அதிபர் திரு. ஜோக்கோ விடோடோவிடமிருந்து (Joko Widodo) பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார். பத்தாண்டுகள் அதிபராக இருந்த திரு. விடோடோ இம்முறை மீண்டும் போட்டியிடவில்லை.
தேர்தலில் வெற்றி பெற்ற புதிய அதிபர், பிரபோவோ சுபியாண்டோ முன்னைய சுஹார்டோ ஆட்சிக்காலத்தில் மனித
உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டவராவார்.
சுஹார்டோ ஆட்சியின் இருண்ட நாட்களில் பல உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் இராணுவ ஜெனரல், தற்போதய வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்தோனேசிய அரசியலில் ஒரு உயரடுக்கு குடும்பத்தில் பிறந்தவர்.
அவரது தந்தை பல வர்த்தகம் மற்றும் நிதியமைச்சர் பதவிகளை வகித்த புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் ஆவார். மேலும் அவரது தாத்தா நாட்டின் முதல் அரசுக்கு சொந்தமான வங்கியை உருவாக்கினார்.
அவரது குழந்தை பருவத்தில் அவரும் அவரது குடும்பத்தினரும் சுவிட்சர்லாந்து மற்றும் இங்கிலாந்தில் நாடுகடந்து வாழ்ந்தனர். அவரது தந்தை சுமத்ராவில் உள்ள பிரிவினைவாத குழுக்களுடன் தொடர்பு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டார்.
கிழக்கு திமோரில் போர்க்குற்றம்:
1970 இல் இந்தோனேசியாவுக்குத் திரும்பி இராணுவத்தில் சேர்ந்தார். அங்கு அவர் விரைவாக பதவிகளில் உயர்ந்தார். 1980களில், கிழக்கு திமோரில் போராளிகளுக்கு எதிராக சிறப்புப் படைப் பிரிவுடன் பல தாக்குதல்களை மேற்கொண்டார். அவர் அங்கும் பப்புவாவிலும் இராணுவ அட்டூழியங்களைச் செய்ததாக பல சாட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
இந்தக் காலக்கட்டத்தில் அவர் முன்னாள் சர்வாதிகாரி சுஹார்டோவின்
மகள்களில் ஒருவரான சிதி ஹெடியாடி ஹரியாடியை 1983 இல் மணந்தார். அவர்களின் திருமணம் 15 ஆண்டுகள் நீடித்தது.
பிரபோவோ சுபியாண்டோ ஜனநாயக ஆர்வலர்களின் கடத்தல்களுக்காக குற்றம் சாட்டப்பட்ட சிறப்புப் படைப் பிரிவின் தளபதியாக இருந்தார். அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டாலும், அவர் மீது எந்தவித குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படவில்லை. ஆயினும் காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் இன்னும் பதில் கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அத்துடன் சுஹார்டோவின் குழப்பமான கடைசி நாட்களில், அவர் தலைநகர் ஜகார்த்தாவில் இனக் கலவரங்களைத் தூண்டி, சீன இன சிறுபான்மையினருக்கு கோபத்தை ஏற்படுத்தினார் என்றும் வரலாற்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதனை அவர் எப்போதும் மறுத்து வந்தார்.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு:
1990 களின் பிற்பகுதியில் சுஹார்டோ ஆட்சியில் பல ஜனநாயக ஆர்வலர்களைக் கடத்திச் சென்று சித்திரவதை செய்த ஒரு பிரிவுக்கு அவர் கட்டளையிட்ட குற்றச்சாட்டுகளுக்கு உட்பட்டவரே இன்றைய அதிபராவார்.
ஜகார்த்தாவின் இருண்ட கடந்த காலத்தில் கடத்தப்பட்ட 23 பேரில், சிலர் உயிர் பிழைத்தனர், மற்றும் பலரை காணவில்லை. உள்ளூர் மற்றும் சர்வதேச உரிமைகள் பார்வையாளர்களின் கூற்றுப்படி, அதிர்ச்சியூட்டும் மனித உரிமை மீறல்
பதிவைக் கொண்டுள்ள அவர், இராணுவ சர்வாதிகாரத்தின் கீழ் நாட்டின் கடந்த கால வரலாற்றில் பாரிய குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுக்காமல் நாட்டை விட்டு வெளியேறியவர் என்றும் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து 1998இல் ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்ட அவர், 2000களில் ஜோர்டானில் சுயமாக நாடுகடத்தப்பட்டார்.
ஆனால் அவர் சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்தோனேசியாவுக்குத் திரும்பினார். அரசியலுக்கு மீள திரும்புவதற்கு முன்பு எண்ணெய் மற்றும் சுரங்கத்தில் தனது செல்வத்தை பெருமளவில் வளர்த்துக் கொண்டார்.
அவரது மனித உரிமை மீறல்களுக்காக
அமெரிக்கா, அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய நீண்ட காலம் தடை விதிக்கப்பட்டது. கடந்த சில வருடங்களில் தான் அந்த தடை நீக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
– ஐங்கரன் விக்கினேஸ்வரா