இலக்கியச்சோலை

தேர்ந்த வாசகன் நியூசிலாந்து சிற்சபேசன், ஊடகவியலாளரான கதை! …. முருகபூபதி.

பெற்றவர்களிடம் கற்றதையும் சமூகத்திடம் பெற்றதையும் வாழ்வியல் அனுபவமாக்கி, ஊடகத்துறையின் நுட்பங்களை உள்வாங்கி செய்தியாளராக மாறியிருக்கும் எழுத்தாளர் சிவசுப்பிரமணியம் சிற்சபேசன் அவர்களை நான் முதல் முதலில் 2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில்தான் நான் வதியும் அவுஸ்திரேலியாவில் மெல்பன் நகரில் சந்தித்தேன்.

அக்காலப்பகுதியில் இங்கு இயங்கிய தமிழ் அகதிகள் கழகத்திலும் இணைந்திருந்தவர். 2001 ஆம் ஆண்டு மெல்பனில் தொடங்கப்பட்ட தமிழ் எழுத்தாளர் விழா இயக்கத்திலும் இணைந்துகொண்டவர்.

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், யாழ். இந்துக் கல்லூரியிலும், தன்னுடைய தந்தையார் சிவசுப்பிரமணியம் அதிபராகவிருந்த அனுராதபுரம் விவேகானந்த மகா வித்தியாலயத்திலும் கற்றபின்னர், உயர்கல்வியை தமிழ்நாட்டில் தொடர்ந்தவர்.

“ யாழ்ப்பாணக் கலாசாரம் கந்தபுராணக் கலாசாரம் “ என்பார் பண்டிதமணி கணபதிப்பிள்ளை. அந்தவகையில், அங்கே பெற்றுக்கொண்ட சைவத்தமிழ் விழுமியங்களிலான தன்னுடைய அத்திவாரத்தை, தமிழ்நாட்டின் மொழி, கலை, பண்பாட்டுச்சூழல் பலப்படுத்தியதாக நம்புகின்றவர். அந்தவாய்ப்பை ஏற்படுத்திய தன்னுடைய பெற்றோர் சிவசுப்பிரமணியம் – சரோஜினிதேவி இணையருக்கே தனது தெறிப்பு என்ற முதலாவது கட்டுரைத் தொகுப்பினை சமர்ப்பித்தவர்.

தற்போது நியூசிலாந்து நாட்டில் அரசதுறையில் சிரேஷ்ட ஆலோசகராகப் பணியாற்றுகிறார்.

பசுபிக் சமுத்திரத்தின் தென்மேற்கில், இரண்டரை இலட்சம் சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பில் நான்கரை மில்லியன் மக்கள் தொகையினர் வாழும் நியூசிலாந்திலிருந்து, சிற்சபேசன் உள்நாட்டு, வெளிநாட்டு விவகாரங்களை அலசி ஆராய்ந்து தொடர்ந்தும் ஊடகங்களில் எழுதிக்கொண்டிருக்கிறார். அத்துடன் YouTube செனல் ஒன்றையும் உருவாக்கி, சமூகம், அரசியல், கலை, இலக்கியம் சார்ந்த செய்திகளையும் வெளியிட்டு வருகிறார்.

மெல்பனில் பல வருடங்களுக்கு முன்னர் நடந்த புதுவை ரத்தினதுரையின் பூவரசம் வேலியும் புலுனிக்குஞ்சுகளும் நூல் வெளியீட்டில், இவரும் உரையாற்றினார்.

கொழும்பில் 2011 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நாம் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்துவதற்கு முன்னர், யாழ். நாவலர் மண்டபத்தில் நடத்திய தகவல் அமர்வு சந்திப்பிலும் கலந்துகொண்டார்.

தமிழ்நாட்டில் பொறியியல் துறையில் கற்று பட்டதாரியான சிற்சபேசன், பின்னர் பிரித்தானியாவில் ஆள்வினையியலில் ( Management ) முதுமானிப் பட்டத்தையும் (எம்.பி.ஏ) பெற்றவர்.

தமிழ்நாடு விகடன் குழுமத்தின் மாணவர் பத்திரிகையாளர் பயிற்சி, ஹிந்து குழுமத்தில் ஆங்கில ஊடகப் பயிற்சி மற்றும் பிபிசி தமிழோசை சங்கரண்ணாவின் வழிப்படுத்தல் என்பவை தன்னுடைய அத்திவாரங்கள் என எப்போதும் நன்றியோடு நினைவு கூர்கின்றவர்.

ஊடகப் பணிக்கு வழிகாட்டியாகத் தந்தையாரையும், மொழிவளத்துக்குத் தாயாரையும் போற்றுகின்றவர்.

சென்னை, லண்டன், சீசெல்ஸ், இலங்கை என விரிந்த இவருடைய ஊடகப் பயணம், தென்துருவத்தில் நிலைகொண்டது.

வானொலி மற்றும் ஊடகக் கதவுகளை உள்ளார்ந்த அன்போடு திறந்து வரவேற்ற மெல்பன் 3ZZZ இன் தமிழ் ஓசை வானொலி ரமேஷ் பாலகிருஷ்ணன் , நியூசிலாந்து தமிழ் மீடியாவின் கண்ணன், இலங்கை ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகம் ஆகியோரையும் மனநிறைவோடு நினைவில் நிறுத்தியிருப்பவர்.

சிற்சபேசன், தனது வாழ்வில் சந்திக்கும் சவால்களை வாசிப்பு அனுபவத்தினால், கடந்து வந்திருப்பவர்.

இவருடைய தெறிப்பு நூலின் வெளியீட்டு அரங்கு மெல்பனில் 2005 இல் நடைபெற ஏற்பாடாகியிருந்தபோது, உரியவேளையில் நூலின் பிரதிகள் வந்து சேரவில்லை.

பேச்சாளர்களுக்கு அதன் மூலப்பிரதியை அச்சிட்டுத்தந்தார். 60 கட்டுரைகள் இடம்பெற்றிருந்த அந்த நூல், இலங்கை அரசியலையும் பேசியிருந்தது. அனைத்துக்கட்டுரைகளும் ஏற்கனவே அவுஸ்திரேலியா வானொலி ஊடகங்களில் ஒலிபரப்பானவை.

அதில் ஈழப்போராட்ட அரசியலும் பேசுபொருளாகியிருந்தது. பலருடைய பெயர்கள் இடம்பெற்றிருந்த அக்கட்டுரைகளில் ஒரு முக்கியமானவரின் பெயர் மாத்திரம் தற்செயலாக விடுபட்டிருந்தது.

இந்நூல் பற்றி நான் உரையாற்றும்போது, விடுபட்டிருந்த பெயரைச் சொல்லாமல், “ வாசகர்களே கண்டுபிடிக்கட்டும் “ எனச்சொன்னேன்.

சிற்சபேசன், என்னை ஏற இறங்கப் பார்த்தார். அவரும் அறியாமல் விடுபட்ட முக்கியமான பெயர் அது.

விடுபட்டிருந்த அந்தப்பெயர் வேலுப்பிள்ளை பிரபாகரன் !

இந்த நூலை , நூலகம் ஆவணகத்தில் வாசகர்கள் தரவிறக்கம் செய்து படிக்கலாம்.

தமிழில் மு தளையசிங்கம், பாலகுமாரன், தி ஜானகிராமன், மாலன், சுஜாதா, சிவசங்கரி ஆகியோரையும் ஆங்கிலத்தில் ஆர்.கே நாராயணனையும் தன்னுடைய ஆதர்சமாக கருதும் சிற்சபேசன், ஆர்.கே. நாராயணனின் கதைகளில் வரும் மால்குடி ரயில் நிலையத்தையும் அதன் சுற்றுச்சூழலையும் மறக்காமல் மனதில் வைத்திருக்கும் வாசகர்களில் ஒருவர்.

புலம்பெயர்ந்தோர் இலக்கியம் – புகலிட இலக்கியம் பற்றிய வாதப்பிரதிவாதங்கள் எம்மத்தியில் தோன்றும்போது, புலம்பெயர்ந்து வாழ்ந்தவாறு, தாயகம் பற்றிய நினைவுகளுடன் எழுதப்படும் புனைவு இலக்கியங்களை எவ்வாறு புகலிட இலக்கியம் எனக்கொள்ள முடியும்? என்ற கேள்வி எழுகிறது.

“ எழுத்தாளர் ஒருவர் எங்கிருந்தாலும் எவை பற்றியும் எழுதலாம். எழுத்துகள் என்பவை அவர்கள்தம் உணர்வுகளின், அனுபவங்களின் வெளிப்பாடுகளே. புகழ்பெற்ற சல்மான் ருஷ்டியின் நாவல்களிலொன்று நள்ளிரவுக் குழந்தைகள். (Midnight Children). அதை அவர் இந்தியாவிலிருந்து எழுதவில்லை. இந்தியாவைக் களமாகக்கொண்ட நாவலது. மேற்கு நாடுகளிலொன்றிலிருந்துதான் எழுதினார். அவரது சிறந்த படைப்புகளிலொன்று அது. புகழ்பெற்ற போலிஷ் அமெரிக்கரான ஜேர்சி கொசின்ஸ்கி தனது புகழ்பெற்ற நிறமூட்டப்பெற்ற பறவைகள் (The Painted Birds) நாவலை அமெரிக்காவிலிருந்துதான் எழுதினார். அந்நாவல் அவர் தன் பால்ய பருவத்தில் ஐரோப்பாவின் பல பகுதிகளிலும், நாசிகளின் அக்கிரமங்களிலிருந்து தப்புவதற்காக அலைந்து திரிந்த அனுபவத்தை மையமாகக்கொண்டெழுதப்பட்டது. இவ்விதம் கூறிக்கொண்டே போகலாம். படைப்புகளின் சிறப்பென்பது அவை கூறப்படும் களங்களைக்கொண்டு தீர்மானிக்கப்படுவதில்லை. “ என்று

சொல்கிறார் கனடாவில் நீண்ட காலமாக பதிவுகள் இணைய இதழை நடத்தி வரும் எழுத்தாளர் வ. ந. கிரிதரன்.

கிரிதரன் பிறந்த யாழ். வண்ணார்பண்ணையில் பிறந்திருக்கும் சிற்சபேசன் , “ மண்ணுடனான தொடர்பே வாழ்வின் வேராகும் “ என்னும் நம்பிக்கையை கொண்டிருப்பவர்.

“ வேர்களின் பிடிமானமே, மரத்திற்கு எந்தவொரு சூழலையும் கையாளக்கூடிய பலத்தையும் வழங்குவன, அதுபோன்று நம்முடைய வாழ்வு யதார்த்தமாக இருப்பதற்கு, மண்ணின் தொடர்புடைய எழுத்தும், அது வழிப்பட்ட சிந்தனையும் அவசியமாகின்றது. “ என்கிறார் சிற்சபேசன்.

மாற்றமாம் வையகத்தில் என்ற மற்றும் ஒரு நூலையும் கடந்த 2023 ஆம் ஆண்டு இவர் வரவாக்கியிருந்தார்.

—0—

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.