இலக்கியச்சோலை

ரிச்சர்ட் டி சொய்சா: மகனை இழந்த தாயும், நீதியை இழந்த ஊடகமும்! …. நவீனன்.

(ரிச்சர்ட் டி சொய்சா கொல்லப்பட்டு 34வது வருட நினைவாக இக்கட்டுரை
எழுதப்படுகிறது)
தன் பிள்ளையை இழப்பது தன்னையே இழப்பதற்கு சமம் என தெரிவித்த மனோராணி சரவணமுத்து, இரவில் ஆயிரம் கடல் அலைகள் வந்து போன வேளையில் தாயொருவரின் வாழ்க்கைக்கான விருப்பமும், அர்த்தமும் முழு தியாகமும் ஒரு கணத்தில் கடலில் மூழ்கியதாக அந்த நாட்களை ரிச்சர்ட் டி சொய்சாவின் ( Richard Manik de Zoysa – 18 மார்ச் 1958 – 18 பெப்ரவரி 1990) தாயார் ஊடகங்களில் பதிவு செய்துள்ளார்.
அடக்கப்பட்டவர்களின் மனதில் சுவாலையாக எரிந்து கொண்டிருந்த எதிர்ப்பு அநீதிக்கெதிரான கொதிப்பு என்பன ரிச்சர்ட்டின் ஆளுமையின் பக்கங்களிற் பட்டுப் பல வண்ணங்களாக எரிந்தன. ஊடகங்களின் விமர்சகர், அறிவிப்பாளர், நாடக திரைப்பட நடிகர், இயக்குனர், கவிஞர், எழுத்தாளர், ஊடகவியலாளர் என்று ஒவ்வொரு துறையிலும் ரிச்சர்ட் தனித்த குரலும் மாற்றத்தைத் தேடும் முனைப்பு எப்போதும் வெளிப்பட்டது.
இற்றைக்கு 34 வருடங்களுக்கு முன் அவர் கொல்லப்பட்டார். இந்தக்கால இடைவெளியில் கொல்லப்பட்ட இலங்கை ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை அதிகம். 1990 பெப்ரவரியின் ஓரிரவில் ஆயுதந்தாங்கிய குழுவொன்றினால் வீட்டிலிருந்து இழுத்துச் செல்லப்பட்டு அடுத்த நாட்காலையில் கொழும்பிற்குத் தெற்காக 12 மைல் தொலைவிலுள்ள மொறட்டுவ கடற்கரையில் அவர் பிணமாக மிதந்த போது ரிச்சர்ட் டி சொய்சாவுக்கு முப்பத்திரண்டு வயது மட்டுமே.
ரூபவாஹினி செய்தி வாசிப்பாளர்:
இலங்கையின் தேசிய தொலைக்காட்சிச் சேவையான ரூபவாஹினியில் ஆங்கில செய்தி வாசிப்பாளராகவும் மற்றும் பத்திரிகை ஆசிரியராகவும் செயலாற்றிய ரிச்சர்ட் கொலை செய்யப்பட்ட போது உலக ஊடகவியலாளர் சேவையின் கொழும்பு கிளையின் பொறுப்பாளாராக செயற்பட்டு வந்தார்.
ஒவ்வொரு முறையும் தொலைக் காட்சியில் அவரின் முகம் மாலை ஆங்கிலச் செய்திகளை வாசித்து விட்டுத் தன் வசிகரச் சிரிப்பை மலரவிடும். அந்தக் குரலுக்கும், புன்னகைக்கும் சொந்தமான முகம் ஒரு செய்தி வாசிப்பவனினுடையதாக நினைவின் பதிவுகளில் இன்னமும் நிறைந்துள்ளது.
தற்போது பலரும் மறந்தோ போயிருக்கக்கூடிய செய்தி வாசித்தவரை செய்தியாகப் பேசப்பட்டு மறைந்து 34 ஆண்டுகள் ஆகின்றன.
பட்டை தீட்டி வெட்டப்பட்ட ஒரு கல்லின் பல பக்கங்கள் வெளிச்சம் பட்டு ஒளி வீசுவது போல ரிச்சர்ட்டின் பல ஆளுமைகள் அவரது குறுகிய காலக் கலை வாழ்வினில் காணக்கிடைத்தன.
இலங்கையில் இருந்த முன்னணி ஊடகவியாலாளர், மனித உரிமை செயற்பாட்டாளர் மற்றும் நடிகரான ரிச்சட், இனம் தெரியாத நபர்களால் அவரது வீட்டில் இருக்கும் போது கடத்தப்பட்டு 1990 பெப்ரவரி 18 இல் கொலை செய்யப்பட்டார்.
ரிச்சர்ட் தனது தாயாருடன் வெலிகடவத்த வீடமைப்புத்திட்டத்தில் வசித்து வந்தார். தாயார் உடனடியாக வெலிக்கடை காவல் நிலையத்துக்குச் சென்று முறையிட்டார். அடுத்த நாள் பெப்ரவரி 19, 1990, ரிச்சர்ட்டின் உடல் கொழும்பில் இருந்து தெற்கே 12மைல் தூரத்தில் மொரட்டுவை கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டது. அவர் தலையிலும் கழுத்திலும் சுடப்பட்டிருந்தார் அவரது வாயெலும்பில் முறிவு காணப்பட்டது.
ரிச்சர்ட்டின் உடலை அவரது நண்பரான, 2006 இல் கடத்தி கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராம் அடையாளம் காட்டினார்.
வைத்தியர் மனோராணி சரவணமுத்து அடுத்த நாள் தனது மகனை கடத்தியவர்களை அடையாளம் காட்டமுடியும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கொலை நடந்து மூன்று மாதங்களின் பின் ரிச்சர்ட்டின் தாயார் மனோராணி தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கையில், அதில் தனது மகனைக் கடத்திச் சென்ற கொலையாளிகளில் ஒருவனைக் காண்கிறார். அவன் ஓரு உயர் பொலிஸ் அதிகாரி. உடனே தன் சட்டத்தரணி மூலம் வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கும்  உயர்நீதிமன்ற ஆணைக்குழுவிடம் விசாரிக்கிறார்.
ஆனால் சந்தேகநபர் கைது செய்யப்படவில்லை. குறைந்தபட்சம் ஒரு அடையாள அணிவகுப்புக்கூட நீதித் துறையால் ஒழுங்கு செய்துதரப்படவில்லை. மாறாக அவருக்கும் அவரது சட்டத்தரணிக்குமாய்ச் சேர்த்துக் கொலை மிரட்டல்கள் தான் வந்தன.
இது இலங்கையின் சுயாதீன ஊடகத்துறை தினமும் சந்திக்கும் அரச பயங்கரவாதத்தின் வெளித்தெரியாத இன்னுமொரு முகத்தைக் காட்டுகிறது.
மாறாக சரவணமுத்துவும் அவரது சட்டதரணி பட்டி வீரகோணும் கொலை அச்சுறுத்தல்களை தான் பெற்றனர். 2004 இல் வைத்தியர் சரவணமுத்து தனது மகனது கொலையாளர்களை காணாமலேயே காலமானார்.
நாடக நெறிப்படுத்தலே கொலைக்குக் காரணம்:
ரிச்சர்ட் டி சொய்சா கொல்லப்பட்ட போது ஆளும் தலைமையை விமர்சித்து இவர் யார், இவர் என்ன செய்கிறார் என்ற  நாடகத்தை நெறிப்படுத்தியது தான் ரிச்சர்டின் கொலைக்குக் காரணமெனச் சொல்லப்படுகிறது. இந்த நாடகத்தின் தயாரிப்பாளரான லக்ஷ்மன் பெரெரா கடத்தப்பட்டு இன்று வரை காணவில்லை.
இரவில் ஆயிரம் கடல் அலைகள் வந்து போன வேளையில் தாயொருவரின் வாழ்க்கைக்கான விருப்பமும், அர்த்தமும் முழு தியாகமும் ஒரு கணத்தில் கடலில் மூழ்கியது. அந்த நாட்களையும் ரிச்சர்ட் டி சொய்சாவின் தாயார் மனோராணி சரவணமுத்துவின் போராட்டங்களையும் அச்சல செனிவரட்ண என்பவர் பதிவு செய்துள்ளார்.
மனோராணி சரவணமுத்து பிள்ளையை இழப்பது தன்னையே இழப்பதற்கு சமம் என தெரிவித்தார். தனது முப்பத்திரெண்டாவது பிறந்த நாளிற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் ரிச்சர்ட் டி சொய்சா என்ற அருமையான மனிதர் தனது இறுதி மூச்சை இழந்தார்.
ஐக்கிய நாடுகள் விருது:
ஐ.நா.வினால் சுதந்திர ஊடகவியலாளருக்கான விருது ஒன்று ரிச்சர்ட் டி சொய்சாவின்்பெயரில் இப்போதும் வழங்கப்பட்டு வருகிறது.
என்னை தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கின்றார், எனது மகன் என்னுடன் அடிக்கடி பேசுவார், அவர் இன்னமும் தனது நாட்டை முன்னர் போல நேசிக்கின்றார், அவர்கள் அவரை நேசிப்பது போல அவரும் அவர்களை நேசிக்கின்றார் என 1992ம் ஆண்டு மனோராணி சரவணமுத்து லக்திவவில் இவ்வாறு எழுதினார்.
தனது மகன் தன்னிடமிருந்து பறிக்கப்பட்ட பின்னரும் அவரது அன்னையர் முன்னணி என்ற அமைப்பை உருவாக்கி தனது மகனின் விதியை எதிர்கொண்ட ஏனைய பிள்ளைகளிற்காக போராடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.