கவிதைகள்
“உங்கள் மூத்த மகன் எங்கே”… ? கவிதை …. முல்லைஅமுதன்.
இருட்டான அறைக்குள் அடைத்துப்போனாள் அம்மா.
கும்மிருட்டு பயமுறுத்த, அம்மாவின் எச்சரிக்கையை மீறமுடியவில்லை.சில்லறைகளாய் சிதறிய சிரிப்பொலிகள் கேட்டன. காய்ந்துலர்ந்த புகையிலையின் நெடி மூக்கை ஏதோ செய்ய… நெற்குவியல்களூடே ஊர்ந்த ஏதோ உடைகளுள்ளேயும் நடந்து திரிந்தன.
சவரம் செய்யப்படாத முகத்தின் மீதேறி நீளமாய் சென்று பறணில் ஏறியதை அந்த இருளிலும் உணர்ந்தேன். “உங்கள் மூத்த மகன் எங்கே?” வந்திருந்த யாரோ கேட்டிருக்க வேண்டும்.
மூடியிர்ந்த சன்னலை மெதுவாகப் பிரிக்க இருள் வெளியிலும் தன்னை இனங்காட்டியது. நண்பர்களைப் பார்க்கவேண்டும். அவளிடம் என் விருப்பத்தைச் சொல்லவேண்டும். தோழர்களுக்காய் கவிதைகள் எழுதவேண்டும். மிக மெதுவாக.
கட்டுக்களை அவிழ்க்கமுற்பட்ட போது “அவன் செத்து நாளாயிற்றே” சித்தி சொல்ல.. இறந்தே இருக்கலாம் எனத்தோன்றுகிறது.
முல்லைஅமுதன்.