கட்டுரைகள்

நீங்கள் அத்தனைபேரும் உத்தமர்தானா….? சொல்லுங்கள் ! ?…. அவதானி.

இராமகிருஷ்ண பரமஹம்சர் பற்றி அறிந்திருப்பீர்கள். அவர் சிறந்த கதை சொல்லி.

அவர் சொன்ன கதைதான் இது:-

ஒரு காட்டில் வாழ்ந்த முனிவர், தனது சீடரான மற்றும் ஒரு முனிவரிடம் ஆசிரமத்தை பார்த்துக்கொள்ளச்சொல்லிவிட்டு, வெளிப்பிரதேசம் ஒன்றுக்கு சென்றுவிட்டார்.

அப்போது அந்த சீடர் ஒரு சிறிய கோவணத்துண்டுடன்தான் இருந்தார். ஒரு நாள் அந்தக் கோவணத்துண்டை எலி கடித்துவிட்டது. அந்தக் காட்டில் வாழ்ந்த காட்டு வாசிகள் அவரது நிலையை பரிதாபத்துடன் பார்த்துவிட்டு, எலியை பிடிப்பதற்காக ஒரு பூனையை கொண்டுவந்து கொடுத்தார்கள்.

அதற்கு தினமும் பால் தேவைப்பட்டது. அந்தச் சீடர் மக்களிடம் சொன்னார். அவர்கள் ஒரு பசுவையும் கன்றையும் அவருக்கு வழங்கினார்கள். அவர் பசுவிலிருந்து பால் கறந்து பூனைக்குத் தந்தார்.

பசுவுக்கு தினமும் புல்லும் புண்ணாக்கும் தேவைப்பட்டது. அத்துடன் அதனை பராமரிக்க ஆளும் தேவை என்றார் சீடர்.

உடனே மக்கள் அவருக்கு ஒரு வேலையாளை நியமித்தார்கள். அவனோ தனக்கு பசியெடுத்தால் உணவு வேண்டும் என்றான்.

அவனுக்கு சமைத்துப் போடுவதற்காக ஒரு பெண்ணை அந்த மக்கள் திருமணம் செய்து வைத்தார்கள். அந்தத் தம்பதிக்கு குழந்தைகள் பிறந்தன.

நாட்கள், வாரமாக மாதமாக வருடங்களாக கடந்த பின்னர், வெளியூர் சென்றிருந்த முனிவர் திரும்பி வந்தார். தனது சீடருடன் ஒரு பூனை, ஒரு பசுமாடு கன்றுக்குட்டி, அவற்றை பராமரிக்க ஒரு குடும்பம், அவர்களுக்கு பிள்ளை குட்டிகள். இத்தனை பரிவாரங்களை பார்த்ததும், முனிவர் கேட்டார், என்ன சீடரே… நான் உம்மை இங்கே விட்டுச்செல்லும் போது நீர் மாத்திரம்தானே இருந்தீர்.. இப்போது என்ன நடந்தது…?

சுவாமி எல்லாமே இந்த கோவணத் துண்டுக்காகத்தான். என்றார் சீடர்.

எங்கள் நாட்டில் தமிழ் மக்களுக்காக அரசியல் நடத்தும் தமிழ் அரசியல்வாதிகளும் அந்த சீடரின் நிலையில்தான் இருக்கிறார்கள் போலத்தெரிகிறது.

இவர்களின் தலைவர்கள் எனச்சொல்லப்பட்டவர்கள் பலர் இன்றில்லை. அவர்கள் மேல் உலகம் சென்றுவிட்டனர். அவர்களும் அந்த பெரிய முனிவர்போன்று திரும்பி வந்தால், தங்கள் சீடர்களைப்பார்த்து – ஏன் இவ்வாறு ஆட்களை கூட்டிவைத்துக்கொண்டு, ஆளையாள் கடித்து குதறிக்கொண்டிருக்கிறீர்கள்…? என்றுதான் கேட்பார்கள்.

சிலவேளை நீங்கள் காட்டிய வழியில்தான் நாமும் செல்கின்றோம். ஆனால், என்ன வித்தியாசம் என்றால் நாம் வார்த்தைகளை மோசமாக அள்ளி வீசுகின்றோம் என்பார்கள்.

ஒரு தமிழ்க்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி, தமிழ் தேசியக்கூட்டமைப்பினை விபசார விடுதி என்று வர்ணித்திருக்கிறார்.

இது விபசாரத் தொழில் செய்பவர்களை மேன்மைப்படுத்துகிறதா..? அல்லது சிறுமைப்படுத்துகிறதா..? என்பது புரியவில்லை.

மேலைத்தேய நாடுகளில் விபசாரத் தொழில் சட்டபூர்வமாக்கப்பட்டு, அந்த விடுதிகளில் வேலை செய்பவர்களை Sex Workers என அழைக்கிறார்கள். அவர்கள் தாங்கள் வாழும் நாட்டின் அரசுக்கு வரியும் செலுத்துகிறார்கள்.

அதன்மூலம் அந்த நாட்டின் பொருளாதாரத்துக்கு தங்கள் பங்கில் உதவுகிறார்கள்.

ஆனால், எங்கள் அரசியல்வாதிகளான பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.க்கள் எவரேனும் எங்காவது தொழிற்சாலைகளில் வேலை செய்து கிடைக்கும் வருமானத்திலிருந்து வரி செலுத்துகிறார்களா..?

இவர்கள் பவனி வரும் வாகனங்களுக்கும், இவர்கள் தலைநகரத்தில் தங்கியிருக்கும் வாசஸ்தலங்களுக்குமுரிய பணம் மக்களின் கடும் உழைப்பிலிருந்தும் வர்த்தகர்கள் தங்கள் வருமானத்திலிருந்தும் வழங்கும் வரிப்பணத்திலிருந்தும்தான் இத்தனை சுகபோகங்களையும் அனுபவிக்கிறார்கள்.

இவர்கள்தான் மக்களின் பிரதிநிதிகள். இந்த பிரதிநிதிகள்தான் தங்கள் தங்கள் கட்சிக்கூடாரங்களுக்குள்ளிருந்துகொண்டு வார்த்தைகளை எதிரும் புதிருமாக வீசிக்கொண்டிருக்கிறார்கள்.

தென்னிலங்கை மக்கள் – கோத்தா கோ கம போராட்டக்காரர்கள் – தன்னெழுச்சியாக போராடி, கோத்தாவை வீட்டுக்கு அல்ல, நாட்டை

விட்டே களைத்தார்கள். அவர் வேண்டாத விருந்தினராக மீண்டும் வந்துவிட்டார்.

அண்மையில் தென்னிலங்கை அரசியல்வாதியும் கடும்போக்காளருமான விமல் வீரவன்சவும் அவருடன் இணைந்திருக்கும் சில முக்கிய அரசியல் தலைவர்களும் கலந்துகொண்ட கூட்டத்தை , இவர்கள் மீது கோபம் கொண்டிருந்த சிங்கள மக்கள் தங்கள் எழுச்சியான வெறுப்பைக்காண்பித்துள்ளனர். அதனால், விமல் வீரவன்ச குழுவினர் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என ஓடிவிட்டனர்.

ராஜபக்ஷ குடும்பத்தினரையும் கோத்தாவையும் அரியணையில் ஏற்றிய மக்களின் வெறுப்பினையடுத்து, மொட்டு கட்சியும், தற்பொழுது தனது பிரசார நடவடிக்கைகளை நிறுத்தியிருக்கிறது.

மொட்டுவிலிருந்து வெளியேறிய ஆறு எம். பி.க்கள் – முதலில் சுயாதீனமாக இயங்குவதாகச் சொல்லியவர்கள் – இப்போது சஜித் பிரேமதாசவின் தலைமையில் இயங்கும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஐக்கியமாகியிருக்கின்றனர்.

பொதுஜன பெரமுன கட்சியின் எம். பி.க்கள் சிலருக்கு அமைச்சுப்பதவி, வேண்டுமென கட்சியின் பொதுச்செயலாளர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவுக்கு கடிதம் எழுதிக்கேட்டும் திருப்தியான பதில் கிடைக்காதமையின் எதிரொலியாகவும், ஆறு பேர் கட்சி தாவியிருக்கும் கோலத்தை அவதானிக்க முடிகிறது.

இவர்களும் தாழும் கப்பலிலிருந்து படிப்படியாக வெளியேறி கிடைக்கும் துடுப்பைக்கொண்டு கரை சேரப்பார்க்கிறார்கள்.

இது இவ்விதமிருக்க, தங்களை நம்பவைத்து கழுத்தறுத்துவிட்டார் கோத்தபாய என்று சீறிச்சினக்கிறார் டலஸ் அழகப்பெருமா.

விகிதாசார தேர்தல் முறை இல்லையென்றால், முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் இன்று எம்.பி. ஆகியிருக்கமுடியாது என்கிறார் யாழ். மாவட்ட முன்னாள் எம். பி. சரவணபவன். தனக்கு வந்திருக்கவேண்டிய எம்.பி. பதவி, விக்னேஸ்வரனுக்கு வந்துவிட்டதே என்ற ஆதங்கம் இவருக்கு.

தனக்கு வந்திருக்கவேண்டிய ஜனாதிபதி பதவி, ராஜபக்ஷ குடும்பத்தினரால், ரணிலுக்கு போய்விட்டதே என்ற ஆதங்கம் டலஸ் அழகப்பெருமாவுக்கு.

இவ்விடத்தில் சரவணபவனும் டலஸும் ஒரு புள்ளியில் சந்திக்கிறார்கள்.

மொத்தத்தில் இவர்கள் அனைவருக்கும் பாராளுமன்ற ஆசனத்திலும் பதவி ஆசனத்திலும்தான் கண்கள் பதிந்துள்ளன.

ஆனால், இவர்கள் அனைவருமே தங்களை நம்பி வாக்களித்த மக்களின் வளமான வாழ்வு குறித்து சிந்தித்து தங்களால் இயன்றதை அவர்களுக்கு செய்து வருகிறார்களா..?

பாராளுமன்றத்திற்கு முதல் முதலில் பிரவேசித்த பின்னர், இவர்கள் சேர்த்துள்ள சொத்துக்கள் பற்றி மக்களுக்கு தெரியவருகிறதா..?

இராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன அந்தக்கதையிலாவது கோவணத்துடன் இருந்த அந்த சீடனுக்கு வந்துசேர்ந்தவை தெரியவருகிறது.

ஆனால், இந்த மக்களின் பிரதிநிதிகள் எனச் சொல்லப்படும் அரசியல்வாதிகளுக்கு பாராளுமன்ற ஆசனங்களின் மூலம் கிடைத்த – கிடைக்கப்போகின்ற வரப்பிரசாதங்கள் தெரியவராது.

இந்த அரசியல்வாதிகள் அடுத்து வரவிருக்கும் பாரளுமன்றத் தேர்தலின் மூலம் கிடைக்கவிருக்கும் ஆசனத்தை நோக்கியே தங்கள் நிகழ்ச்சி நிரலை நகர்த்துவார்கள். அதற்காக சந்தர்ப்பவாத கூட்டணிகளுக்கும் தயாராவார்கள்.

அதற்காக ஆளையாள் அறிக்கைகள் மூலம் காலை வாரிவிடுவார்கள்.

—0—

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.