மத தலைவர்கள் அரசியல் விடயங்களில் தலையிடக்கூடாது!
“மத தலைவர்கள் அரசியல் விடயங்களில் தலையிடக்கூடாது” என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளதாவது” இன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்டவர்கள் மீதோ, இதனை தடுக்கத் தவறியவர்கள் மீதோ குற்றச்சாட்டுகளை முன்வைக்காது எங்கோ ஒரு மூலையிலிருக்கும் கோட்டாபய ராஜபக்ச மீது குற்றச் சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.
பேராயரின் அண்மைய ஊடக சந்திப்பின் போது அனுர அல்லது சஜித்துக்கு வாக்களிக்குமாறு கத்தோலிக்க மக்களுக்கு பேராயர் தெரிவிக்கிறார். ஒரு மதத்தலைவர் எவ்வாறு அவ்வாறான ஒரு கருத்தை தெரிவிக்க முடியும்? மதத் தலைவர்கள் என்பவர்கள் தங்களுடைய மதத்தை போதிக்கும் விடயங்களிலே ஈடுபட வேண்டுமே தவிர அரசியலை போதிக்க கூடாது.
மக்கள் விடுதலை முன்னணிக்கு வாக்களியுங்கள் என பேராயர் கூறுகிறார். தற்கொலை குண்டுத் தாக்கதாரிகளுடன் தொடர்புடைய கட்சிக்கு வாக்களியுங்கள் எனக் கூறுமளவுக்கு பேராயர் மாறியுள்ளார். சிங்கள மக்கள் மீது தீவிரவாத தாக்குதல்கள் இடம்பெற்ற போது சிங்கள ஆட்சியாளர்கள் அதனை பயன்படுத்தி வாக்குகளைச் சேகரிக்கவில்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான பாரிய விடயங்களை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிறைவேற்றியுள்ளார்.
பேராயரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை கோட்டாபய நிராகரித்துள்ளார். ஒரு மதத் தலைவராக அவர் இவ்வாறு பொய்யுரைக்கக் கூடாது. கர்தினால் அரசியலுக்குள் நுழையத் தேவையில்லை” இவ்வாறு மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை மதத் தலைவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாதென மகிந்தானந்த அளுத்கமகே கருத்து தெரிவித்துள்ள நிலையில் மகா
சங்கத்தினர் மற்றும் பௌத்த தேரர்கள் மட்டும் அரசியலில் ஈடுபடமுடியுமா என்ற கேள்வி எழுகின்றது.
அத்துடன் பௌத்த தேரர்கள் அரசியல் கருத்துக்களை வெளியிடமுடியும் என்றால் ஏன் ஏனைய மதங்களை சேர்ந்த மத தலைவர்கள் நீதியான அரசியல் கருத்துக்களை வெளியிட முடியாது? என்ற கேள்வியும் எழுகின்றது.