இரவு 9 மணிவரை கணவருடன் அரட்டை அடிக்க அனுமதிக்க கோரி மனைவியிடம் பத்திரம் எழுதி ஒப்புதல் வாங்கிய நண்பர்கள்
ஒவ்வொரு வாலிபர்களுக்கும் வீட்டின் அருகிலும், பள்ளி, கல்லூரியிலும் நெருங்கிய நண்பர்கள் இருப்பது வழக்கம். அந்த வாலிபர், படிப்பு முடிந்து ஒரு வேலையில் சேர்ந்தாலும் நெருக்கமான நண்பர்களை சந்தித்து அவர்களுடன் அரட்டை அடிப்பதில் அவருக்கு கிடைக்கும் ஆனந்தமே தனி. இரவு 9 மணி ஆனாலும் கூட இந்த அரட்டை கச்சேரிக்கு முடிவு இருக்காது. இவை எல்லாம் அந்த வாலிபருக்கு திருமணம் ஆகும்வரை மட்டுமே சாத்தியம். அதன்பின்பு இரவு தொடங்கியதும் அவர் வீட்டுக்கு சென்று விடவேண்டும். இல்லையேல் பெற்றோர் கண்டிப்பார்கள். அடுத்து மனைவியிடம் இருந்து அன்பு கட்டளை பிறக்கும்.
வீட்டில் நான் தனியாக இருக்கிறேன். எனவே இரவானதும் வீட்டுக்கு வந்து விடுங்கள் என்ற மனைவியின் கட்டளை, அந்த வாலிபரை கொஞ்சம், கொஞ்சமாக நண்பர்களிடம் இருந்து பிரித்து விடும். அதன்பிறகு எங்காவது, எப்போதாவது தான் நண்பர்களை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். அப்போதும் ஹாய்… ஹாய் என்ற பேச்சுடன் அவர்கள் பிரிந்து சென்று விடுவார்கள். அப்போது அந்த நண்பர்களின் மனதில் ஓடும் எண்ணம், திருமணமானால் எல்லாம் மாறிவிடும் என்பதே ஆகும். உலக நடைமுறையான இந்த நிகழ்வுகளில் இருந்து மாற பாலக்காடு, மலையக்கோடு பகுதியை சேர்ந்த ரகு என்பவரின் நண்பர்கள் முடிவு செய்தனர்.
ரகுவுக்கு நண்பர்கள் வட்டாரம் அதிகம். ஒவ்வொரு நாளும் இரவு 9 மணி வரை நண்பர்களுடன் அமர்ந்து அரட்டை அடிக்காவிட்டால் அவருக்கு தூக்கம் வராது. அவருக்கு பெற்றோர் திருமணம் நிச்சயம் செய்தனர். நிச்சயதார்த்த விழாவில் நண்பர்களும் கலந்து கொண்டனர். அவர்கள் ரகுவின் மனைவியாக போகும் பெண்ணை சந்தித்து பேசினர். அப்போது ரகு தங்களின் நெருங்கிய நண்பன் என்று கூறியதோடு, தங்களுடன் ஒவ்வொரு நாளும் இரவு 9 மணி வரை அரட்டை அடித்துவிட்டு தான் வீட்டுக்கு போவான் என்று கூறினர். திருமணத்திற்கு பிறகும் அவனை தங்களுடன் அரட்டை அடிக்க அனுமதிக்க வேண்டும் என்று அன்பு கோரிக்கை விடுத்தனர்.