பழங்குடியின சான்றிதழ் கோரி: நூதன போராட்டம்
இந்தியாவின் திருவள்ளூர் மாவட்டம், ஈகுவார்பாளையம் கோங்கல்மேடு பகுதியில் சுமார் 30 வருடங்களுக்கும் அதிகமாக 46 மலைக்குறவர் இன குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இப் பழங்குடியின மக்கள் மூங்கில் கூடைகளை முடைந்து அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகின்றனர்.
ஆனால், இம் மக்களின் குழந்தைகளுக்கு சரியான பழங்குடியின சான்றிதழ் இல்லாததால் அரசினால் எதுவித சலுகைகளையும் பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது.
குறித்த மக்கள் தங்களுக்கு பழங்குடியின சான்றிதழ் வழங்கக்கோரி வருவாய்த் துறையிடம் தொடர்ந்தும் கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர்.
இந்நிலையில், இவர்கள் பொன்னேரி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து மூங்கில் கூடைகளை முடைந்து நூதனமான போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப் போராட்டத்தில் மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர், மாநில துணை செயலாளர்கள், மலைக்குறவர் பழங்குடியின மக்கள் முன்னேற்ற சங்கத் தலைவர், பாடசாலை செல்லும் பிள்ளைகள், கைக் குழந்தைகள், பெண்கள் என ஏராளமானோர் பங்குபற்றி கோரிக்கைகளை முன்வைத்தனர்.
கோரிக்கைகள் தொடர்பில் பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கேத் பல்வந்த், தமிழ்நாடு மலைவாழ் மலைவாழ் மக்கள் சங்க நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.