முச்சந்தி

இனவாதத்திற்கு இனி இடமில்லை; ஜனாதிபதி கொள்கை பிரகடன உரை

இலங்கைத் தீவில் இனவாதத்திற்கு இனி இடமளிக்கப்படாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர்  இடம்பெற்ற நிலையில் ஜனாதிபதி தமது அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையை நிகழ்த்தியிருந்தார். இதன்போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

இவ்வளவு காலமும் மாகாணங்கள், தேசியத்துவம், மதங்கள் என்ற அடிப்படையிலேயே அரசியல் கட்சிகள் உருவாகின. அதனால் மக்கள் இடையே பிரிவினை,சந்தேகம், இனவாதம் என்பன வலுவடைந்தன. ஒரு தரப்பில் இனவாதம் வலுவடையும் வேளை அதற்கு எதிராக மாற்றுத் தரப்பிலும் இனவாதம் வலுப்பெரும். இனவாதம் ஒரே இடத்தில் இருக்காது. அது பற்றிய வரலாற்றை எமது நாட்டிலும் அரசியலும் சமூகத்திலும் பார்த்திருக்கிறோம். ஆனால் அனைத்து இன மக்களுக்கும் எம்மை நம்பிய மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

எம்மை நம்பாமல் ஏனைய கட்சிகளை நம்பும் மக்கள் உள்ளனர். அது ஜனநாயகம் ஆகும். தனியொரு கட்சியை சூழ்ந்து மக்கள் செயற்பாடுகளை உருவாக்குவது ஜனநாயகமாக அமையாது.

பல்கட்சி முறையை பலப்படுத்துவோம்

பல நிலைப்பாடுகளை கொண்ட அரசியல் கட்சிகளின் இருப்புதான் ஜனநாயகமாகும். அதேபோல் பல்வேறு கொள்கைகளை கொண்ட அரசியல் குழுக்களின் இருப்பும் ஜனநாயகமாகவே அமையும். எனவே ஜனநாயக ஆட்சி என்ற வகையில் பல கட்சி அரசியலை நாம் வெறுப்பதில்லை. கொள்கை ரீதியாக அதனை ஆதரிப்போம். எமக்கு வாக்களித்த, வாக்களர்களுக்கான அனைத்து மக்களினதும் தேவைகளை பூர்த்தி செய்ய கடமையைப் பட்டிருக்கிறோம்.

தேர்தலால் மக்களுக்கும் எமக்கும் ஒரு பிணைப்பு ஏற்படுகிறது. தேர்தல் காலத்தில் நாம் எமது கொள்கை பிரகடனத்தை முன்வைக்கிறோம் அதன் மீது நம்பிக்கை கொள்ளும் மக்கள் எமக்கு வாக்களிகின்றனர். எனவே அந்த பிணைப்பில் மக்கள் தமது பங்கை செய்துவிட்டனர். எமக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளனர். தற்போது நாம் எமது பங்கை ஆற்ற வேண்டிய தருணம் வந்துள்ளது.

எனவே நானும் எமது அரசாங்கமும் மக்கள் நம்பிக்கை எவ்வகையிலும் சிதைந்துபோக இடமளிக்காமல் ,இந்த ஆட்சியை கொண்டுச் செல்ல கடமைப் பட்டிருக்கிறோம். அதற்கு நாம் பொறுப்புக்கூறுவோம். பிரதேசம், கலாசார அடிப்படையில் மாற்றங்கள் இருந்தாலும் வெவ்வேறு மொழிகளை பேசினாலும் வெவ்வேறு மதங்களை பின்பற்றினாலும் இந்த தேர்தலில் ஒரே நோக்கத்திற்காக ஒன்றிணைந்ததை காண்பித்திருக்கிறோம்.

தேசிய ஒருமைப்பாடு கட்டியெழுப்பப்படும்

எமது நாட்டு மக்கள் நீண்ட கால கனவாக காணப்பட்ட தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பும் உருவாகியுள்ளது. அரசியல் ரீதியாக எமக்கு பல நிலைப்பாடுகள் இருக்கலாம். ஆனால் இனி இந்த நாட்டில் இனவாத அரசியலுக்கு இடமில்லை. எந்த விதத்திலும் மதவாதச் செயற்பாடுகள் எழுச்சி பெறுவதற்கும் இடமளிக்கமாட்டோம். நாம் போதுமென்ற அளவில் இனவாதத்தினால் பாதிப்பை கண்டிருக்கிறோம். ஆறுகள் நிறைய கண்ணீரை கண்டிருக்கிறோம். இன்று நாட்டில் ஒவ்வொருவர் இடையிலும் குரோதமும் சந்தேகவும் அதிகளவில் வலுப்பெற்றுள்ளது. இன்று இந்த நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாம் எமது எதிர்கால சந்ததிக்கு அவ்வாறான நாட்டை கையளிக்க கூடாது என்ற பொறுப்புடன் செயற்பட வேண்டும். அரசியல் செய்ய பல போராட்ட வடிவங்கள் இருக்கலாம்.

பொருளாதாரம்,ஜனநாயகம், என்று பல வகையில் இருக்கலாம். ஆனால் இனி எவரும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இனவாத, மதவாத போராட்டங்களை முன்னெடுக்க இடமளிக்கமாட்டோம்” என உறுதியளித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.