செய்திகள்

“அரச ஊழியர்களின் வயிற்றில் அடிக்க வேண்டாம்”: தி.மு.கவை சாடும் சீமான்

ஓய்வூதிய இயக்குநரகத்தை கலைத்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர முடியாத சூழலை உருவாக்கிய தி.மு.க அரசு அரச ஊழியர்களுக்கு மிகப்பெரிய அநீதியை இழைத்துவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

கடந்த சட்டசபை தேர்தலில் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தி.மு.க அரசு வாக்குறுதி அளித்தது.

ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்று மூன்றரை வருடங்கள் கடந்தும் இன்றுவரை அதனை நிறைவேற்ற மறுத்து அரச ஊழியர்களின் வயிற்றில் அடிப்பது கொடுங்கோன்மையாகும்.

மேலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது கண்டனத்துக்குரியது.

2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பணிக்குச் சேர்ந்த அனைத்து அரச ஊழியர்களும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் எனப்படும் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வலுக்கட்டாயமாக இழுக்கப்பட்டனர்.

இதன் காரணமாக அதுவரையில் கிடைத்து வந்த பணிக்கொடை, ஓய்வூதியம் என்று எதுவும் முழுமையாக கிடைக்காமல் போனது.

அதற்கு மாற்றாக, பணியின்போது அரச ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படும் தொகை மட்டும் அவர்கள் ஓய்வு பெற்றதும் திருப்பி வழங்கப்படும் எனவும் அன்றைய அ.தி.மு.க அரசு அறிவித்திருந்தது.

ஆனால், ஆரம்பத்தில் இருந்தே இத் திட்டத்துக்கு அரச ஊழியர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.

13 வருட போராட்டத்துக்குப் பின்னர் 2016 ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய குழுவொன்றை நியமித்தார்.

ஆனால், 2018 ஆம் ஆண்டிலேயே குறித்த குழு அறிக்கையை தமிழக அரசிடம் அளித்தது.

மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அறிவிக்கும் என அரச ஊழியர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், ஆட்சிக்கு வந்த ஓராண்டு நிறைவுறும் நாளில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வாய்ப்பில்லை என கடந்த 2022 ஆண்டு மே மாதம் சட்டப் பேரவையில் அறிவித்து, அரச ஊழியர்களை ஏமாற்றியது.

தி.மு.க அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது எனக் கூறி ஏமாற்றி வருவது அரச ஊழியர்களுக்கு செய்யும் பச்சைத் துரோகம்.

அரசின் புதிய அறிவிப்பானது அரச ஊழியர்களின் தலையில் பேரிடியை இறக்கியுள்ளது.

ஓய்வூதிய இயக்குநரகத்தை கலைத்தததனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை எக் காலத்திலும் கொண்டு வர முடியாத ஒரு சூழலை தி.மு.க உருவாக்கியுள்ளது.

இதன் மூலம் அரச ஊழியர்களுக்கு மன்னிக்க முடியாத பெரும் துரோகத்தை தி.மு.க அரசு செய்துள்ளது.

எனவே, தி.மு.க அரசு இதற்கு மேலும் அரச ஊழியர்களின் வயிற்றில் அடிப்பதை நிறுத்தி, 20 ஆண்டு காலமாகப் போராடிவரும் அரச ஊழியர்களின் நியாயமான கோரிக்கையான பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் நடைறைப்படுத்த வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.