அபரோஜின பூர்வகுடி மக்களுடன் சிட்னியில் தைப்பொங்கல் விழா!
அவுஸ்திரேலிய நியு சவுத் வேல்ஸ் மாநில தமிழ் மக்கள் சார்பாக, அனைத்து தமிழ் வணிக நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், பன்னாட்டு தமிழ் மக்களின் ஆதரவோடு “பொங்கல் திருவிழா” நிகழ்வு சிறப்புற இன்று Holroyd Gardens, Merrylands, எனும் பூந்தோட்டத்தில் இன்று செவ்வாய், ஜனவரி 14 மாலை நடைபெற்றது.
தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழா அவுஸ்திரேலிய பழங்குடி அபரோஜின மக்களுடன் இணைந்து கடந்த ஆண்டுகாலமாக கொண்டாடப்பட்டது போல இவ்வருடமும் சிறப்புற இன்று சிட்னியில் நடைபெற்றது.
இப்பொங்கல் நிகழ்வானது, உலகெங்கும் பரவி வாழும் புலம்பெயர்த் தமிழர்கள் தமிழ் மொழியால், தமிழ் இன உணர்வால், தமிழ்ப் பண்பாட்டால் தன்னார்வமாக ஒன்றுகூடும் நிகழ்வாக மிகச்சிறப்புடன் ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது. இன்றைய கூட்டுப் பொங்கல் நிகழ்வில் கோலப் போட்டி, வீட்டு விலங்குகள் காட்சிப்படுத்தல் மற்றும் சிறுவர் பொழுதுபோக்கு நிகழ்வு தமிழ்க் கலை நிகழ்ச்சிகள், மாணவர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வும் இடம்பெற்றன.
அத்துடன் தமிழர் விளையாட்டுகள், பழம் பொறுக்குதல், இசை நாற்காலி, தடை ஓட்டம், உரி அடித்தல் (முட்டி உடைத்தல்), சாக்கு ஓட்டம், தேசிக்காய் ஓட்டம் , கிளித்தட்டு, கயிறு இழுத்தல், கபடி போன்றவை, சிறிய அளவிலான மத்தாப்புக் காட்சி போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இந் நிகழ்வில் இளையோர்கள் மற்றும் பெரியவர்கள் பங்குகொண்ட பொங்கல் நடனங்கள் உட்பட விசேட கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
அத்முடன் இந்நிகழ்ச்சியில் நியு சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 2024 இல், தமிழ் மொழியில் சித்தியடைந்த உயர்தர (HSC) மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.