வேட்பாளர்கள் கல்வித் தகைமைகளை வழங்க வேண்டும்?
தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் வேட்பாளர்களின் கல்வி அல்லது ஏனைய தகைமைகள் உள்ளடங்கிய தரவு தாளை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்குவதை கட்டாயமாக்கும் அமைப்பை தயார் செய்யுமாறு தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும் மற்றும் பல வெகுஜன அமைப்புகளும் தேர்தல் ஆணைய தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமைகள் தொடர்பில் நாட்டில் நிலவும் சர்ச்சைக்குரிய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படாமல் தடுக்கும் நோக்கில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக பஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
கல்வி மற்றும் இதர தகுதிகள் வாக்காளர்களுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்ய உதவும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேர்தல் ஆணையத்தின் ஊடாக அந்த முறையை நடைமுறைப்படுத்த முடியாத பட்சத்தில் அந்தந்த அரசியல் கட்சிகள் இணையம் ஊடாக அதனை நடைமுறைப்படுத்த முடியும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து வேட்பாளர்களின் அடிப்படை தரவுகளையும் சேகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் ஆயிரத்திற்கும் குறைவான வேட்பாளர்களே தகவல்களை வழங்கியதாக ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.