தென்கொரிய இராணுவ சட்ட ஆட்சி; தேசிய சபையின் நடவடிக்கையை பாராட்டும் ரணில்
இராணுவச் சட்ட ஆட்சியை எதிர்ப்பதற்காக, கொரிய குடியரசின் தேசிய சபை எடுத்த துரிதமான மற்றும் ஒன்றிணைந்த நடவடிக்கையை பாராட்ட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோலின் இராணுவச் சட்டப் பிரகடனம் கொரியக் குடியரசின் ஜனநாயக அமைப்பை அச்சுறுத்தியுள்ளதாக கூறிய அவர் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மற்றும் நிர்வாகத்தை ஆதரிப்பவர்களின் ஒற்றுமை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
“நிறைவேற்று ஜனாதிபதி முறைமையின் கீழ் நாடாளுமன்றத்தின் பலத்தை இது காட்டுகிறது.
இந்த அரசியலமைப்பு நெருக்கடியை அமைதியான முறையில் தீர்த்து வைப்பது கொரிய குடியரசின் நலனுக்கு அவசியமானது” என்றார்.
தென் கொரியாவில் அந்நாட்டு ஜனாதிபதியால் நேற்றிரவு இராணுவ ஆட்சி அமுல்படுத்தப்பட்டது.
தென்கொரிய ஜனாதிபதியின் இந்த நடவடிக்கையைத் தடுக்க தென் கொரிய நாடாளுமன்றம் வாக்களித்திருந்தது.
நாட்டின் ஆளும் மற்றும் எதிர்கட்சினர் இந்த அறிவிப்பை எதிர்த்தனர். பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் இன்று புதன்கிழமை இராணுவ ஆட்சி திரும்பப் பெறப்பட்டது.
வடகொரிய ஆதரவாளர்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் விளக்கமளித்த போதிலும் மக்கள் தொடர்ந்து ஜனாதிபதி யூன் சுக் யோல் பதவி விலக வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தென் கொரியாவில் 1979ஆம் ஆண்டு இராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அதற்குப் பின்னர் தென் கொரியாவில் இராணுவ ஆட்சி அறிவிக்கப்பட்டது இதுவே முதன்முறை.