தென் கொரியாவில் 12 மணி நேரம் நீடித்த பதற்றம்: இராணுவச் சட்டம் மீளப் பெறப்பட்டது
தென் கொரியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த இராணுவச் சட்டம் இன்று புதன்கிழமை அந்நாட்டு ஜனாதிபதி யூன் சுக் இயோல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இராணுவச் சட்டத்தை அந்நாட்டு நாடாளுமன்றம் நிராகரித்ததை தொடர்ந்து, ஜனாதிபதி தான் வெளியிட்ட அறிவிப்பை மீளப் பெருவதாக குறிப்பிட்டுள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வட கொரியாவுடன் இணைந்து எதிர்க்கட்சி அரசாங்கத்தை முடக்க திட்டமிட்டுள்ளதாக கூறி இராணுவச் சட்டத்தைப் அறிவித்திருந்தார்.
“வட கொரிய கம்யூனிஸ்ட் சக்திகளின் அச்சுறுத்தலில் இருந்து கொரியா குடியரசைப் பாதுகாக்கவும், மக்களின் சுதந்திரத்தையும் மகிழ்ச்சியையும் சூறையாடும் வெறுக்கத்தக்க வட கொரிய-அரச எதிர்ப்பு சக்திகளை ஒழிக்கவும், சுதந்திரமான அரசியலமைப்பைப் பாதுகாக்கவும் நான் இராணுவச் சட்டத்தை அறிவிக்கிறேன்” எனறு யூன் குறிப்பிட்டிருந்தார்.
“இந்த இராணுவச் சட்டத்தின் மூலம், அழிவின் படுகுழியில் விழுந்து கிடக்கும் கொரிய சுதந்திரக் குடியரசை மீண்டும் உருவாக்கி பாதுகாப்பேன். இதற்காக, நாட்டின் அழிவுக்கு முக்கியக் காரணமான அரச எதிர்ப்பு சக்திகளை நான் நிச்சயமாக ஒழிப்பேன்” என்றும் குறிப்பிட்டார்.
40 ஆண்டுகளுக்கு முன்பு நாடு ஜனநாயக பாதைக்கு மாறியதிலிருந்து அத்தகைய அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாததால், அவரது அறிவிப்பு தென் கொரியாவில் பரபரப்பு ஏற்பட்டது.
அரசியல் நடவடிக்கைகள் தடை, தேசிய சட்டசபை முடங்கியது
இராணுவச் சட்டம் அறிவிக்கப்பட்ட உடனேயே, இராணுவ தளபதி பார்க் அன்-சு ஆறு அம்ச ஆணையை வெளியிட்டார். நாட்டின் அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும் தடைசெய்து அனைத்து ஊடகங்களையும் “இராணுவச் சட்டக் கட்டளையின் கட்டுப்பாட்டிற்கு” உட்படுத்தினார்.
“தேசிய சட்டமன்றம், உள்ளூராட்சி மன்றங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் சங்கங்கள், கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் உட்பட அனைத்து அரசியல் நடவடிக்கைகளும் தடைசெய்யப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் போராட்டத்திற்கு அழைப்பு
2022 தேர்தலில் யூனிடம் குறுகிய முறையில் தோல்வியடைந்த எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே-மியுங், இராணுவச் சட்டம் திணிப்பு “சட்டவிரோதம்” மற்றும் “செல்லாதது” என்றார்.
அத்துடன், தன்னுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட மக்களுக்கு அழைப்பு விடுத்தார். “தயவுசெய்து இப்போது தேசிய சட்டமன்றத்திற்கு வாருங்கள். நானும் அங்கு செல்கிறேன்,” என்று அவர் அழைப்பு விடுத்திருந்தார்.
தேசிய சட்டமன்றத்தில் ஒன்று கூடிய எதிர்ப்பாளர்கள்
எதிர்க்கட்சி தலைவரின் அழைப்பை அடுத்து உடனே, நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தென் கொரிய நாடாளுமன்றத்தில் கூடி, இராணுவச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து, ஹெலிகாப்டர்கள் நாடாளுமன்ற வாளகத்தில் தரையிறக்கப்பட்டன. அத்துடன், துருப்புக்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்ததுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளே வருவதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
கூட்டத் தொடரை தொடங்கிய சபாநாயகர்
இந்நிலையில், தேசிய சட்டமன்ற சபாநாயகர் இராணுவ சட்ட அறிவிப்பைத் தடுக்க ஒரு முழுமையான அமர்வைத் தொடங்கி நடத்தியிருந்தார்.
தடைகள் இருந்தபோதிலும், 190 உறுப்பினர்கள் தேசிய சட்டமன்றத்திற்குள் நுழைய முடிந்ததுடன, யூனின் பிரகடனத்தை நிராகரிக்க ஒருமனதாக வாக்களித்தனர். மேலும் இராணுவச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.
இராணுவ சட்டம் தொடரும்
நாடாளுமன்றத்தின் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போதிலும், தென் கொரிய இராணுவம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இராணுவச் சட்டம் “ஜனாதிபதியால் நீக்கப்படும் வரை” நடைமுறையில் இருக்கும் என்று தெரிவித்தது.
இராணுவச் சட்டம் திரும்பப் பெறப்பட்டது
உள்ளூர் நேரப்படி புதன்கிழமை அதிகாலை 4:30 மணியளவில், யூன் இராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான தனது குறுகிய கால முயற்சியை கைவிட்டார்.
அவசரகால நிலையை நீக்க தேசிய சட்டமன்றத்தில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது, இதனால் இராணுவச் சட்ட நடவடிக்கைகளுக்காக நிறுத்தப்பட்ட இராணுவத்தை நாங்கள் திரும்பப் பெற்றுள்ளோம்.” என்று அறிவிப்புச் செய்தார்.
“நாங்கள் தேசிய சட்டமன்றத்தின் கோரிக்கையை ஏற்று, அமைச்சரவைக் கூட்டத்தின் மூலம் இராணுவச் சட்டத்தை நீக்குவோம்,” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பதவி விலகுமாறு அழுத்தம்
ஜனாதிபதி யூனின் இந்த நடவடிக்கையினால் கடும் ஆத்திரமடைந்த எதிர்க்கட்சிகள், கிளர்ச்சியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி, அவரை பதவி விலகுமாறு அழைப்பு விடுத்துள்ளன.
“இராணுவச் சட்டம் நீக்கப்பட்டாலும், கிளர்ச்சி குற்றச்சாட்டுகளைத் தவிர்க்க முடியாது,” என்று ஜனநாயகக் கட்சியின் தளத் தலைவர் பார்க் சான்-டே அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதி யூன் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
தென் கொரியாவின் பிரதான எதிர்க்கட்சி, யூன் “உடனடியாக இராஜினாமா செய்யவில்லை என்றால், ஜனநாயகக் கட்சி உடனடியாக மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப பதவி நீக்க நடவடிக்கையை தொடங்கும்” என்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி, யூன், அவரது பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சர்கள், “இராணுவ சட்டத் தளபதி மற்றும் பொலிஸ் துறை தலைவர் போன்ற முக்கிய இராணுவ மற்றும் பொலிஸ் பிரமுகர்களுக்கு எதிராக” கிளர்ச்சி குற்றச்சாட்டுகளை பதிவு செய்யப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளது.