பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊடக அடக்குமுறைகளில் ஈடுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அதேபோன்று அரசாங்கம் தேர்தல் மேடைகளில் கூறியது போல் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மக்களுக்கு சார்பான இணக்கப்பாடாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான விவாத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
தற்போதைய அரசாங்கம், தேர்தல் மேடைகளில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவோம் எனக் கூறியது. ஆனால் அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி பேச்சுச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் மற்றும் சிவில் உரிமைகளைப் பறிக்கும் வகையில் தற்போது செயற்பட்டு வருகிறது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊடக அடக்குமுறைகளில் ஈடுபடுவது நியாயமான செயலல்ல. தற்போதைய அரசாங்கம் பெரும் மக்கள் ஆணையைப் பெறுவதற்கு சமூக ஊடகத் துறையின் கூடிய ஆதரவு கிடைத்தது.
நீக்குவோம் என சொல்லப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி சமூக ஊடக ஆர்வலர்களை அடக்குமுறைக்குட்படுத்துகின்றனர். சொன்னதை செய்யும் அரசாங்கமாக இருந்தால் இந்த அடக்குமுறையை நிறுத்த வேண்டும்.
அரசாங்கம் நீக்குவதாக கூறிய பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சமூக வலைத்தல ஆர்வலர்களை கைது செய்தாலும், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்களை அவ்வாறு கைது செய்ய முடியாது என நீதிபதிகள் கூட கூறியுள்ளனர்.
அவ்வாறே பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் யாரையெல்லாம் கைது செய்யலாம் என்பது குறித்தும் இந்த அரசாங்கத்துக்கு நீதிமன்றம் பாடமும் புகட்டியுள்ளது.
தேர்தல் மேடைகளில் தற்போதைய அரசாங்கம் சொன்னதைச் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. இவ்வாறு நீங்கள் கூறிய விடயங்களைச் செய்யும் போது அது மக்கள் சார்பான, மக்களுக்கு சாதகமாக அமைந்தால் எதிர்க்கட்சியின் ஆதரவை அதற்குப் பெற்றுத் தருவோம்.
நாட்டுக்கும் மக்களுக்கும் சாதகமான திட்டங்களுக்கு எமது முழுமையான ஆதரவை வழங்குவோம். அவ்வாறே, நாட்டுக்கு கேடு விளைவிக்கும் திட்டங்களை எதிர்ப்போம். அதில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டுவோம், அதற்கான மாற்று வேலைத்திட்டங்களையும் முன்வைப்போம். இது தான் எமது கொள்கை.
மேலும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தாம் முகம்கொடுத்து வரும் பிரச்சினைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 5 வருடம் கொரோனா காலப்பிரிவின் போது ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இவர்கள் பெரும் பங்களிப்பை செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் இவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தரப்பினர் இவ்வாறு கோரிக்கைகளை முன்வைக்கும் போது கலந்துரையாடல் மூலம் இணக்கப்பாட்டுக்கு வருவதை விடுத்து அடக்குமுறைக்கு வழிவகுப்பதை நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
அதேபோன்று சர்வதேச நாணய நிதிய இணக்கப்பாட்டை திருத்தி, உழைக்கும்போது அறவிடும் வரியை ஒரு இலட்சத்தில் இருந்து 2 இலட்சதமாக அதிகரிப்பதாகவும் வற் வரியை குறைப்போம் என்று ஆளும் தரப்பினர் தேர்தல் மேடைகளில் தெரிவித்தனர்.
ஆனால் இதில் இன்று எந்த மாற்றமும் நடக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் முன்னெடுத்த இதே முறை தொடர்வதை அனுமதிக்க முடியாது. எனவே, இந்த இணக்கப்பாட்டை தேர்தல் மேடைகளில் கூறியது போல் மக்களுக்கு சார்பான இணக்கப்பாடாக மாற்றுவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.