“விளக்கேற்ற அழைத்த சிறிதரன் திருப்பி அனுப்பி விட்டார்”
பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், என்னை விளக்கேற்ற வருமாறு அழைத்துவிட்டு திருப்பி அனுப்பி விட்டார் என மூன்று மாவீரர்களின் தாயொருவர் கண்ணீருடன் கவலைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
“கடந்த செவ்வாய்க்கிழமை (26) மாலை 6.55 மணியளவில் தொலைபேசியூடாக தொடர்பு கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் , நீங்கள் மூன்று மாவீரர்களின் தாயா? என வினவினார் எனது மூன்று பிள்ளைகளின் விபரங்களை கேட்டு அறிந்து கொண்ட பின்னர், புதன்கிழமை (27) அன்று கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நீங்கள் பொதுச் சுடரேற்ற வேண்டும் வருகை தாருங்கள் என்றார். நானும் சம்மதம் தெரிவித்தேன்
மாவீரர் நாளன்று 6.05 மணிக்கு விளக்கேற்றும் நேரம் நான் சரியாக 5 மணிக்கு கனகபுரம் துயிலுமில்லத்திற்கு சென்றேன். அங்கு நின்றவர்கள் தங்களை ஏற்பாட்டுக் குழு எனத் தெரிவித்து நாங்கள் வேறொருவரை ஏற்பாடு செய்துவிட்டோம் எனத் தெரிவித்து என்னை திருப்பி அனுப்பிவிட்டனர். இது எனக்கு மிகுந்த மன வேதனையை தருகிறது மூன்று மாவீரர்களின் தாயான என்னை அவர்கள் அவமதித்துவிட்டனர்.
சிறிதரன் எம்.பி யின் அழைப்பிற்கு அமைய, முழங்கால் வரை தண்ணீரால் நிரம்பியுள்ள எனது வீட்டுக்குச் செல்லும் பாதையால் சிரமத்திற்கு மத்தியில் பிரதான வீதிக்கு வந்து வாகனம் ஒன்றில் மாவீரர் நாளன்று சரியாக 5 மணிக்கு கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு சென்றேன். ஆனால் அங்கு நான் அவமதிக்கப்பட்டேன். இயக்கம் ஒரு மாவீரரின் தாயை இவ்வாறு நடத்தியது கிடையாது.
இந்த மண்ணுக்காக நான் எனது மூன்று பிள்ளைகளை கொடுத்திருக்கிறேன்” என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.