தோஹாவிலிருந்து கொச்சி பயணம்: விமானத்தில் வந்தது இவா பூனைக்குட்டி!
தோஹாவிலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் ஒரு வயது பூனைக்குட்டி இன்று கொச்சி வந்தது. வெளிநாட்டிலிருந்து கொச்சி விமான நிலையம் வந்த முதல் செல்லப்பிராணி இதுதான்.
கொச்சி சர்வதேச விமான நிலையம் பெட் எக்ஸ்போர்ட் வசதியை ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்தது. கேரள மாநிலத்தில் இந்த வசதியை செய்துள்ள முதல் விமான நிலையமாக, கொச்சி சர்வதேச விமான நிலையம் விளங்குகிறது.
இது குறித்து செல்லப்பிராணிகள் வளர்ப்பு ஆர்வலர் ராமசந்திரன் கூறியதாவது:
நான் கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள செலக்கராாவில் வசிக்கிறேன். எனக்கு செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் ஆர்வம் உள்ளதால், கத்தார் நாட்டின் தோஹாவிலிருந்து ஒரு வயது பூனைக்குட்டியை கொண்டுவர விரும்பினேன்.
இந்நிலையில், ஏர் இந்தியா விமானத்தில், ஒரு வயது பூனைக்குட்டியை கொண்டு வர ஏற்பாடு செய்தேன். இதற்கு மத்திய அரசின் விலங்கு நல வாரியத்தின் சான்றிதழ் கொடுக்கப்பட்டது.
இவா என்ற இந்த பூனைக்குட்டியை கொண்டு வருவதில் விமானத்துறை குழுவினரின் சேவை சிறப்பாக இருந்தது. எவ்வித சுங்கப்பிரச்னைகள் இல்லாமல் ஒத்துழைப்பும் இருந்தது. இதனால் நான் திருப்தியாக இந்த பூனைக்குட்டியை எடுத்துக்கொண்டு செல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.